×

அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட 50 அடி உயர பாஜ பேனர் சரிந்து விழுந்தது : மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த 50 அடி உயர பேனர் சரிந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு நாளை (29ம்தேதி) பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வருகிறார். இவரை வரவேற்று முத்துப்பேட்டையை அடுத்த கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் அருகே 50 அடி உயர பேனர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த பகுதியில் எந்நேரமும் வாகனங்கள் சென்று வரும் என்பதால் பேனரை அகற்றும்படி வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பேனரை அகற்றும்படி, பாஜவினரிடம் போலீசார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பேனரை எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் 50 அடி உயர பேனர் சாரத்துடன் சரிந்து சாலையின் குறுக்கே செல்லும் உயர மின் அழுத்த கம்பியில் விழுந்தது. இதனால் அருகில் உள்ள மின்கம்பங்களும் சாய்ந்தன. மின்கம்பிகளும் அறுந்து சாலையில் விழுந்தன. அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பியை அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது.

The post அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட 50 அடி உயர பாஜ பேனர் சரிந்து விழுந்தது : மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Muthuppet ,Tiruvarur ,Baja ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம்