*இன்றும் நடக்கிறது
முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அதிகப்படியான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகளை 18, 19ம் ஆகிய தேதிகளில் அகற்றப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் சில வியாபாரிகள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர்.
ஆனாலும் அதிகாரிகள் திட்டமிட்டப்படி நேற்று காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருத்துறைப்பூண்டி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர்.
முன்னதாக திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை துறை, இளநிலை செயற்பொறியாளர் ரவி, உதவி கொட்ட பொறியாளர் அய்யாதுரை, கோட்ட பொறியாளர் இளம்பரிதி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலைமையில், வட்டாட்சியர் குணசீலி, டிஎஸ்பி ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலையில் காவல் துறையினர், வருவாய்த்துறையினர், பேரூராட்சி நிர்வாகம், நிர்வாக பணியாளர்கள் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். காலை துவங்கி மாலை வரை சுமார் 40க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதில் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் 10மணிக்கு துவங்கியது. இதனால் நகர் பகுதிக்கு கடைசியாக உள்ள ஆலங்காடு பைபாஸ், மன்னார்குடி சாலை பைபாஸ், பட்டுக்கோட்டை சாலை பைபாஸ் ஆகிய பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு நகர் பகுதிக்கு பஸ் வராமல் கிழக்கு கடற்கரை சாலைக்கு திருப்பி அனுப்பினர். இதனால் 8மணி நேரத்திற்கு மேலாக பஸ்கள் வராததால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
The post முத்துப்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.