×

சமூகநீதியின் அடிப்படை தெரியாமல் அறிக்கை விடுகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் கண்டனம்

சென்னை: சமூகநீதியின் அடிப்படை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வரின் மகத்தான திட்டம் மகளிர் விடியல் பயணம். இத்திட்டத்தின் வெற்றியை பொறுக்காத எடப்பாடி, பயணம் செய்பவர்களின் ஜாதியை கேட்டு விட்டார்கள் என்று துடிக்கிறார். அண்ணா பெயரிலான கட்சியின் பொதுசெயலாளராக இருந்து கொண்டு, இப்படி அறிக்கை விடுவது தான் கொடுமை. சாதிகளின் பெயரை சொல்லி மக்களை அடக்கு முறையில் அமுக்கி வைக்கப்பட்டவர்களை அந்த சாதியின் பெயராலேயே கைதூக்கி விடுவது தான் இடஒதுக்கீடு.

இது தான் சமூகநீதி. மாநில திட்டக்குழு விடியல் பயணம் குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த ஆய்வின் முடிவில், விடியல் பயணம் மூலமாக சராசரியாக ஒவ்வொரு மகளிருக்கும் ரூபாய் 88, பேருந்து கட்டணமாக செலவிட்டது மிச்சமாகிறது என்பது தெரிய வந்தது. அதன் அடுத்த கட்ட ஆய்வு தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு இந்தத் திட்டம் பயன்படுகிறது என்று ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அறிந்து அதனை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம்.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் குறைவாக இருக்கின்றன, ஓசி டிக்கெட் என்றார்கள். அப்படி எல்லாம் இருந்தால் 40 சதவிகிதமாக இருந்த மகளிர் பயணம் எப்படி 68 சதவிகிதமாக உயர்ந்திருக்கும். வயிற்றெரிச்சலில் இது போன்று அறிக்கை விடுவது எடப்பாடி பழனிசாமியின் வாடிக்கை தான். ஆனால் அதற்காக திராவிட இயக்கத்தின் அடிப்படைகளை மறந்து விடக்கூடாது.

The post சமூகநீதியின் அடிப்படை தெரியாமல் அறிக்கை விடுகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,MINISTER ,SIVASANKAR ,Chennai ,Transport Minister ,Edapadi Palanisami ,
× RELATED சொல்லிட்டாங்க…