×

சென்னை ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் 150 ஆண்டுகள் பழமையான பொது அஞ்சலகம் சீரமைப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: 150 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய பொது அஞ்சலகம் சீரமைக்கப்பட உள்ளது. சென்னை பொது அஞ்சல் அலுவலகம் சென்னையின் ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் 1884 ஏப்ரல் 26ம் தேதி செயல்பாட்டிற்கு வந்தது. இக் கட்டிடம் ராபர்ட் சிஷோல்ம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ரூ.6.8 லட்சம் செலவில் இந்த கட்டிடத்தை கட்ட 10 ஆண்டுகள் ஆனது. சென்னை கடற்கரை புறநகர் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள இந்த அஞ்சல் அலுவலகத்தில் வேகப்பதிவு, பதிவு இடுகை, சிப்பமிடுதல், காப்பீடு, இ-பில்லிங் மற்றும் மின்னஞ்சல் இடுகை போன்ற வசதிகள் உள்ளன.

150 ஆண்டுகள் பழமையான இந்த அஞ்சலகம் சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இது ‘நிலை-I-பாரம்பரிய கட்டிடம்’ என நீதிபதி பத்மநாபன் குழுவால் அறிவிக்கப்பட்டது. இந்தப் பாரம்பரிய கட்டிடத்தை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான அறக்கட்டளையுடன் பொது அஞ்சலக தலைமை தபால் அதிகாரி மூலம் சென்னை மண்டல அஞ்சல் துறை முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் சென்னை பொது அஞ்சலக தலைமை தபால் அதிகாரி ஆர்.அமுதா, இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான அறக்கட்டளை சென்னை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா சங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர். டெல்லி பொது அஞ்சலகம், மும்பை பொது அஞ்சலகம் மற்றும் நாக்பூர் பொது அஞ்சலகம் ஆகியவற்றின் மறுசீரமைப்பு பணிகளை இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான அறக்கட்டளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

* சென்னை பொது அஞ்சல் அலுவலகம் 150 ஆண்டு பழமையானது

* 3 அடுக்குகளுடன் இந்த அஞ்சலகம் அமைந்துள்ளது.

* 6085.30 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டது.

* ஆரம்பத்தில் இந்த அஞ்சல் அலுவலகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்தது. 1884ம் ஆண்டு இடம் மாற்றம் செய்யப்பட்டு, ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் அஞ்சலகம் செயல்பட தொடங்கியது

* மறுமலர்ச்சி கட்டிடக் கலை பாணியான இந்தோ-சராசெனிக் கட்டிட கலையில் அமைந்தது இக் கட்டிடம்.

* 2000ம் ஆண்டு இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

* 2021ல் இந்த கட்டிடத்தின் 2வது மாடியில் சில பகுதிகள் இடிந்து விழுந்தது.

The post சென்னை ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் 150 ஆண்டுகள் பழமையான பொது அஞ்சலகம் சீரமைப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : General Post Office ,Rajaji Road, George Town, Chennai ,CHENNAI ,GEORGE ,Rajaji Road, Georgetown, Chennai ,Dinakaran ,
× RELATED அஞ்சல் காப்பீட்டுத் திட்டங்களை...