×

நாயை ஏவி கடிக்க வைத்ததால் தகராறு; புதுப்பேட்டை குடியிருப்பில் காவலர், சிறப்பு எஸ்ஐ கட்டிப்புரண்டு, கற்களை வீசி சண்டை

சென்னை: நாயை ஏவி கடிக்க வைத்ததால் புதுப்பேட்டை ஆயுதப்படை குடியிருப்பில் காவலர் மற்றும் சிறப்பு எஸ்ஐ ஆகிய இருவரும் கட்டிப்புரண்டும், கற்களை வீசியும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டை போட்டனர். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவர் சென்னை மாநகர குதிரைப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். காவலர் முத்துபாண்டி வசித்து வரும் குடிருப்பின் மேல் தளத்தில் ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சாமி கண்ணு என்பவரும் வசித்து வருகிறார்.

சிறப்பு உதவி ஆய்வாளர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்று வளர்த்து வருகிறார். இதனால் கீழ் தளத்தில் வசித்து வரும் காவலர் முத்து பாண்டி வீட்டின் முன்பு சிறுநீர் கழித்தாக கூறப்படுகிறது. இதனால் காவலர் முத்துபாண்டிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் சாமி கண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று சிறப்பு உதவி ஆய்வாளர் தனது நாயை ஏவி காவலர் முத்துபாண்டியை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதில் பதற்றமடைந்த காவலர், ‘ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று சிறப்பு உதவி ஆய்வாளரிடம் கேட்டுள்ளார்’. இதனால் இருவரும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, காவலர் முத்துபாண்டி சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் கட்டிப்புரண்டு தாக்கி கொண்டனர். அதோடு இல்லாமல் இருவரும் குடியிருப்பு பகுதியில் இருந்து கற்களை எடுத்து ஒருவரை ஒருவர் வீசிக்கொண்டனர். அப்போது அருகில் இருந்த சக காவலர்கள் இருவரையும் சமாதான செய்ய முயன்றனர். ஆனால் கற்களை வீசி கொண்டதால் யாரும் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதில் காவலர் முத்துபாண்டி படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. உடனே முத்துபாண்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சம்பவம் குறித்து காவலர் முத்துபாண்டி எழும்பூர் காவல்நிலையத்தில் தன்னை நாயை விட்டு ஏவி கடிக்க வைத்து தாக்கியதாக புகார் அளித்துள்ளார். அதேபோல், சிறப்பு உதவி ஆய்வாளர் சாமி கண்ணும் தன்னிடம் வீண் தகராறு செய்து தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இந்த இரண்டு புகார்களின் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாயை ஏவி கடிக்க வைத்ததால் தகராறு; புதுப்பேட்டை குடியிருப்பில் காவலர், சிறப்பு எஸ்ஐ கட்டிப்புரண்டு, கற்களை வீசி சண்டை appeared first on Dinakaran.

Tags : Puduppet ,CHENNAI ,SI ,
× RELATED தயிர் வியாபாரியை மிரட்டி ரூ.35 ஆயிரம்...