×

41 தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க சுரங்கத்திற்குள் வீடியோ கேம், செல்போன் கிரிக்கெட் பேட் அனுப்பி வைப்பு: ‘ஆகர்’ இயந்திரம் உடைந்ததால் மீட்பு பணி தாமதம்

உத்தரகாசி: சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு வீடியோ கேம் செல்போன், கிரிக்கெட் பேட் ஆகியன அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம், சுரங்கப்பாதையில் இருக்கும் தொழிலாளர்களை தொடர்பு கொள்ளும் வகையில் தரைவழி தொலைபேசி சேவையை வழங்க முன்வந்துள்ளது.

அதன் மூலம் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பேச முடியும். இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரி குந்தன் கூறுகையில், ‘சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில், குழாய் வழியாக சிறிய லேண்ட்லைன் தொலைபேசியை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரடியாகப் பேச முடியும். இதற்காக சுரங்கப்பாதை தளத்தில் சிறிய அளவிலான டெலிபோன் எக்சேஞ்சை அமைத்துள்ளோம்’ என்றார். மேலும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் வீடியோ கேம் விளையாடுவதற்காக, அவர்களுக்கு மொபைல் போன்களும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அவர்கள் சுரங்கத்திற்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு வசதியாக கிரிக்கெட் பேட் மற்றும் பந்து வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். மீட்புப் பணி 13 நாட்களை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கன்-ஆகர் இயந்திரத்தின் ஒரு பகுதி உடைந்துவிட்டதால் கடந்த 24 மணி நேரமாக எந்த பணியும் நடைபெறவில்லை. இயந்திரத்தின் உடைந்த பகுதியை வெளியே எடுக்கும் பணிகள் நடக்கிறது’ என்றார். மீட்புக் குழுவினரின் கருத்துப்படி, 41 பேரையும் மீட்பதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

The post 41 தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க சுரங்கத்திற்குள் வீடியோ கேம், செல்போன் கிரிக்கெட் பேட் அனுப்பி வைப்பு: ‘ஆகர்’ இயந்திரம் உடைந்ததால் மீட்பு பணி தாமதம் appeared first on Dinakaran.

Tags : Uttarakasi ,
× RELATED 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட...