×

500 ஆண்டுகள் பழமையான ஐயங்குளம் ₹3 கோடியில் புனரமைப்பு மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் எ.வ.வேலு ஒப்படைத்தார் திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில்

திருவண்ணாமலை, நவ.26: திருவண்ணாமலையில் தூய்மை அருணை சார்பில் ₹3 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐயங்குளத்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஒப்படைத்தார். திருவண்ணாமலையில் சுமார் 500 ஆண்டுகள் பழமையும், ஆன்மிக பெருமையும் மிக்க ஐயங்குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இந்த ஐயங்குளத்தை, தூய்மை அருணை சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முற்றிலுமாக தூர்வாரி சீரமைத்து, புதுப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து, புனரமைக்கப்பட்ட ஐயங்குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் விழா நேற்று ஐயங்குளம் பகுதியில் நடந்தது.

கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எஸ்பி கார்த்திகேயன், நகராட்சித் தலைவர் நிர்மலாவேல்மாறன், அறங்காவலர் குழுத்தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர்கள் மீனாட்சி சுந்தரம், டி.வி.எஸ்.ராஜாராம், கோமதிகுணசேகரன், சினம்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை ஆணையர் சி.ஜோதி வரவேற்றார். விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சரும், தூய்மை அருணை அமைப்பாளருமான எ.வ.வேலு கலந்துகொண்டு, புனரமைக்கப்பட்ட ஐயங்குளத்தில் மலர்களை தூவி மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார், அப்போது, அவர் பேசியதாவது:

தனிமரம் தோப்பாகாது, இந்த பாராட்டுக்கள் அத்தனையும் எனக்கானது மட்டுமல்ல. அனைத்து தூய்மை காவலர்களுக்கும் உண்டு. 2017ல் தூய்மை அருணை அமைப்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 7 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறோம். திருவண்ணாமலையில் முதன்முதலில் ஜீவா அச்சகம் தொடங்கினேன். பின்னர், லாரி உரிமையாளராக விரும்பி, திருப்பதிக்கு காய்கறி ஏற்றிச்செல்லும் லாரியை ஏலத்தில் எடுத்தேன். எனக்கு உந்துசக்தியாகவும், உதவியாகவும் இருந்தவர்கள் திருவண்ணாமலையில் உள்ளனர். திருவண்ணாமலையை பசுமையாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதனை, இந்த அமைப்பு நிறைவேற்றி வருகிறது. கொரோனா காலத்தில் தூய்மை அருணை சார்பில் மக்களுக்கான உதவிகளை வழங்கினோம். அரசு மருத்தவக்கல்லூரியில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொண்டு தேசிய தரச்சான்று பெறுவதற்கு உதவியாக செயல்பட்டோம்.

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி சிறப்பு மிக்க ஐயங்குளத்தை தூர்வாரி புனரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஐயங்குளத்தில் இருந்து 16 அடி ஆழம் வரை இருந்த சேறும் சகதியையும் டாராஸ் லாரியில் 6450 நடைகள் கொண்டு சென்று அகற்றப்பட்டன. அதேபோல், ஐயங்குளத்தின் ஊற்று பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசின் முறையான அனுமதி பெற்று டாராஸ் லாரிகளில் 1270 நடைகள் மணல் கொண்டுவந்து ஐயங்குளத்தில் நிரப்பியிருக்கிறோம். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் இதில் ஈடுபட்டனர்.

கடவுள் பக்தி எனக்கு இல்லாவிட்டாலும், பக்தி என்னை விடுவதாக இல்லை. தமிழ்மீதும், இலக்கியத்தின் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். பக்தி இலக்கியங்கள் தான் தமிழை வளர்த்தன. மகாபாரதமும், கம்பராமாயணமும் பெண்களை அடிமைப்படுத்தின. ஆனால், சிலப்பதிகாரம் பெண்களை போற்றியது. அநீதிக்கு எதிராக கண்ணகி ேபாராடினார். பசிப்பிணியை போக்கினார் மணிமேகலை. ஐயங்குளத்தின் சுற்றுச்சுவரில் தேவாரம், திருவாசகம், திருக்குறள் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. குளத்தை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மின்னொளி வசதி ஏற்படுத்தியிருக்கிறோம்.

மேலும், 3 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளம், அகலத்தில், 32 அடி ஆழத்தில், மையப்பகுதியில் அழகிய மண்டபம் அமைந்த இந்த குளத்தை புனரமைக்க அறநிலையத்துறையின் அனுமதி அளித்த அமைச்சர் சேகர்பாபுவுக்கும், அதற்கு காரணமாக இருந்த திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் முதல்வருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். திருச்சுழியில் பிறந்த ரமணர் 1896ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு வந்தபோது முதன்முதலில் நீராடியது இந்த குளத்தில்தான்.
பக்தர்கள் புனித நீராடுகிற ஆன்மிக குளமாகும். அதேபோல், தீபம் ஏற்றியதும் 3 நாட்கள் தெப்பல் உற்சவமும் இங்குதான் நடக்கிறது. அருணகிரி மலையில் இருந்து மழைநீர் இங்கு வருகிறது. செவ்வப்பநாயக்கர் காலத்தில்தான் முதன்முதலில் 480 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் புனரமைக்கப்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் புனரமைக்கப்படுகிது. செவ்வப்பநாயக்கர் பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார். ஆனால், வரலாற்றை எழுதிய வடநாட்டினரால் தென்னகத்து பெருமை மறைக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் வி.தனுசு, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், அருணகிரிநாதர் மணிமண்டப குழுத்தலைவர் மா.சின்னராஜ், செயலாளர் அமரேசன் பட்டுசாமி, தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.ரவிச்ந்திரன், எக்ஸ்னோரா ப.இந்திரராஜன், லயன்ஸ் சங்கம் சாயர் டி.அரவிந்குமார், ரோட்டரி சங்கம் எம்.மண்ணுலிங்கம், அண்ணாமலையார் கோவில் தியாகராஜ குருக்கள், ஆலாசநாத குருக்கள், ஜெயின் சங்கம் கமல்சந்த், சாந்தி ஜுவல்லர்ஸ் எஸ்.விஜயகுமார் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள் டாக்டர் எ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ மு.பெ.கிரி, ப்ரியாவிஜயரங்கன், ப.கார்த்திவேல்மாறன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post 500 ஆண்டுகள் பழமையான ஐயங்குளம் ₹3 கோடியில் புனரமைப்பு மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் எ.வ.வேலு ஒப்படைத்தார் திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் appeared first on Dinakaran.

Tags : Iyankulam ,Minister ,AV Velu ,Tiruvannamalai Purity Charity ,Thiruvannamalai ,Aiyangulam ,Tiruvannamalai Purity ,Aruna ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...