சென்னை: ‘அண்ணாமலை 48 மணி நேரம் கெடு விதித்ததற்கு பதிலடியாக, வடநாட்டு கைக்கூலி என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்துள்ளனர். தனியார் பால் நிறுவனங்களை விட அரசு நடத்தும் ஆவின் பாலை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். அதற்கு காரணம், தரம் மற்றும் விலை குறைவு என்பதோடு நம்பிக்கையும் உள்ளதுதான்.
இந்நிலையில் கொழுப்பு சத்து நிறைந்த பச்சை நிற ஆவின் பாலை நிறுத்தி விட்டு கொழுப்பு சத்து குறைந்த புதிய பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, ஆவின் நிறுவனம் குறித்தும், விலை குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அதன் தரம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலடியாக அமைச்சர் மனோ தங்கராஜ், சில வடநாட்டு கைக்கூலிகள் திட்டமிட்டு ஆவின் நிறுவனம் குறித்து வதந்தி பரப்பி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக அமைச்சர் மனோ தங்கராஜ், ‘ரபேல் வாட்ச் கட்டி ஆடு மேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்… மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும், பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள், கலைஞரின் உடன்பிறப்புகள், தளபதியின் தம்பிகள், தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்’ என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மீது மானநஷ்ட வழக்குத் தொடருவேன் என்று அண்ணாமலை நேற்று அறிவித்தார். இதற்கு பதில் அளித்து, தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இவ்வளவு தானா!!! தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், கனிம வள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்னைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தம்பியின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்?
ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டுகைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ?’ என்று மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ், அண்ணாமலை ஆகியோரின் அறிக்கைகளும், அதற்கு அளிக்கப்படும் பதிலடிகளும் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரபேல் வாட்ச் கட்டி ஆடு மேய்ப்பவரின் கதையை தான் கூறினேன், தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து நான்தான் அந்த வடநாட்டு கைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
The post மன்னிப்பு கேட்க முடியாது வடநாட்டு கைக்கூலி என்பதற்கு ஆதாரம் உள்ளது: அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி appeared first on Dinakaran.
