×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசு சிறப்போடு செயல்படுகிறது

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை முறைப்படுத்தி தந்த கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசு சிறப்போடு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் ‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் மலர் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. விழா மலரை வெளியிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்முறையாக 1996ல் தமிழ்நாடு தொழில்நுட்ப கொள்கை கலைஞரால் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு ஒட்டுமொத்த ஐடி நிறுவனங்களும் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தது. 2000வது ஆண்டு சென்னையில் டைடல் பார்க் திறந்து மாபெரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கலைஞர் ஏற்படுத்தினார். பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தவர் கலைஞர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் என்று பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றவர் கலைஞர். கலைஞர், பேருந்தை நாட்டுடமை ஆக்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதியை செய்து கொடுத்திருக்கிறார். ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கி, மகளிர் பொருளாதார உரிமையை நிலைநாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை முறைப்படுத்தி தந்த நிறுவனங்களின் நாயகர் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசு சிறப்போடு செயல்பட்டு வருகிறது என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை பார்வையிட்டார்.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசு சிறப்போடு செயல்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Dravida ,Tamil Nadu ,
× RELATED மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற...