×

கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்: பரங்கிமலையில் ₹500 கோடி அரசு நிலம் அதிரடியாக மீட்பு; வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

ஆலந்தூர்: சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலையில் பட்ரோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்பிலான 1 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு நிலம் உள்ளது. இந்த இடத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு எடுத்து குடியிருப்புகள் கட்டி வசித்துவந்த நிலையில், குத்தகை காலம் முடிந்தபின் அந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்காமல் இருந்தனர்.

இந்தநிலையில், வணிக நோக்கத்தில் அரசு நிலத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக எழுந்த புகாரின்படி, அந்த நிலத்தை மீட்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார். இதையடுத்து பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய் துறையினர் பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் முரளி, ஆய்வாளர் செல்லப்பா ஆகியோருடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை துவக்கினர். அப்போது குத்தகை வீட்டில் இருந்தவர்களை வெளியேறும்படி தாசில்தார் ஆறுமுகம், போலீஸ் உதவி கமிஷனர் முரளி ஆகியோர் கேட்டுக்கொண்டபோது அங்கு வந்த வழக்கறிஞர் ஒருவர், ‘’ஒருநாள் அவகாசம் கொடுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள், அவகாசம் தர முடியாது. நீங்கள் நீதிமன்றத்தில் முறையிடுங்கள்’’ என்றனர்.

இதன்காரணமாக பொதுமக்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே வீட்டில் இருந்த உடைமைகளை தூக்கிவந்து வெளியே போட்டனர். இதன்பின்னர் ஜேசிபி மூலம் அங்கிருந்த சுற்றுச்சுவர்களை இடித்து அகற்றினர். அத்துடன் மின்சார இணைப்பை துண்டித்து வீட்டு கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹500 கோடியாகும். இதன்பின்னர் அங்கு இயங்கிவரும் வங்கி, தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவற்றிக்கு ஒருவாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

‘’குத்தகை காலம் முடிந்தபின்னரும் நிலத்தை ஒப்படைக்காமல் இருந்தவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான மதிப்பு நிலங்களை மீட்கப்பட்டுள்ளது’ என்று தாசில்தார் ஆறுமுகம் கூறினார்.

The post கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்: பரங்கிமலையில் ₹500 கோடி அரசு நிலம் அதிரடியாக மீட்பு; வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : PARANGIMALA ,Alandur ,Patrodu ,Mount Poontamalli Road, Chennai ,
× RELATED சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய்...