நன்றி குங்குமம் ஆன்மிகம்
26.11.2023 – கார்த்திகை தீபம்
கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை மாதத்தின் புண்ணிய தினங்களும் விழாக்களும் நம்முடைய கர்ம வினைகளைத் தொலைத்து, கவலைகளை சிதறடிக்கும். நல்வாழ்வைத்தரும். பொதுவாக, நாம் தினசரி காலையிலும் மாலையிலும் வீட்டில் தீபங்கள் ஏற்றுகின்றோம். அது இருட்டை விலக்கி வெளிச்சத்தைத் தருகிறது. ஆனால், கார்த்திகை மாதம் என்பது தீபத் திருவிழா மாதம் என்பதால், அந்த மாதத்தையே கார்த்திகை தீப மாதம் என்றே அழைக்கின்றோம். இப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தின் சிறப்பையும், விழாக்களையும் கார்த்திகை தீபத்தின் பெருமையையும் நாம் காண்போம்.
1. மாதப் பிறப்பின் சிறப்பு
மாதத்தின் முதல் நாளை மாதப் பிறப்பு நாள் என்று நாம் கொண்டாடுகிறோம். மாத பிறப்பே ஒரு பண்டிகைதான். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் மங்கலகரமான மகாலட்சுமியின் நாளாகிய வெள்ளிக் கிழமை பிறக்கிறது என்பது சிறப்பு. இரண்டாவதாக, அன்று சுப திதிகளான சதுர்த்தியும், பஞ்சமியும் கலந்திருக்கிறது. மூன்றாவதாக, அன்றைய தினம் சூரியன் தனது நட்பு ராசியான விருச்சிகத்தில், பலவீனம் நீங்கி பிரவேசிக்கிறார்.
அன்று சூரியனுடைய உத்திராட நட்சத்திரம் இருக்கும். தனுசு ராசியில்தான் சந்திரனும் இருக்கின்றார். சூரியனும் சந்திரனும் மாதா பிதாக்களைக் குறிக்கும் கிரகங்கள். தனுசு ராசிக்கு உரிய குரு பகவான் 9-ஆம் பார்வையால் சந்திரனை பார்வையிட, `கஜ கேசரி யோகம்’ மிகுந்த நாளில் துவங்குவது இந்த கார்த்திகை மாத பிறப்பின் மிக முக்கியமான ஒரு சிறப்பு.
2. தாமோதர மாதம்
வைணவ சமயத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெருமாளின் திருநாமத்தோடு இருக்கும். அந்த வகையில் கார்த்திகை மாதம் தாமோதரன் அம்சமாக இருக்கும். இந்த மாதத்தில்தான் கைசிக ஏகாதசி வருகிறது. இம்மாத ஏகாதசியில் தாமோதரனை வழிபட்டு துவாதசி பாரணை செய்தால், வேதத்தில் எத்தனை யாகங்கள் சொல்லப்பட்டு இருக்கிறதோ, அத்தனை யாகங்களும் முடித்த பலன் கிடைக்கும். கார்த்திகை மாத பிறப்பை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று சாஸ்திரத்தில் சொல்லுவார்கள். 12 மாதங்களை மூன்று பாகமாகப் பிரித்து, நான்கு மாதங்களை விஷ்ணுவுக்கும், நான்கு மாதங்களை சிவபெருமானுக்கும், நான்கு மாதங்களை பிரம்மனுக்கும் சமய மரபு தந்து இருக்கிறது.
அந்த அடிப்படையில் கார்த்திகை மாதம் விஷ்ணுவுக்கு உரிய மாதம் என்பதால் மாதப் பிறப்பை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று சொல்வார்கள். மன அமைதி ஏற்பட, குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீர, மோட்சம் பெற, பாவங்கள் தீர தவறவிடாமல் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் விரதம் மேற்கொள்ளலாம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் அருளும், மகாலட்சுமியின் அருளும் நிச்சயம் கிடைக்கும். விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப் பணங்கள் கொடுப்பது மிக சிறந்த பலன்களை அளிக்கும். வயதில் முதிர்ந்த தம்பதிகளுக்கு இந்த நாளில் பாதபூஜை செய்து வழிபடுவது மிக சிறப்பானது. ஆலயங்களில், அரிசி மாவு கோலமிட்டு, அகல் விளக்குகள் ஏற்றுவதும் வாழ்வில் மங்கலங்களை பெருகச் செய்யும்.
3. வைணவத்தில் கார்த்திகை மாதம்
24 ஏகாதசிகளின் கார்த்திகை மாதம் வரும் கைசிக ஏகாதசியும், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியும் புகழ்பெற்ற ஏகாதசிகளாகும். கார்த்திகை மாதத்தின் பரணி நட்சத்திரத்தில் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற ஆச்சாரியார் அவதரித்தார். கார்த்திகையில் கார்த்திகை நாள் திருமங்கை மன்னன் அவதாரம் செய்தார். கார்த்திகை மாதத்தில் ரோகிணி நாளில் திருப்பாணாழ்வார் அவதாரம் செய்தார். கார்த்திகை மாதம் உத்தர நட்சத்திரத்தில்தான் பகவானுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடைபெற்றது. இப்படி வைணவத்தில் கார்த்திகை மாதம் மிகவும் ஏற்றம் பெற்றது.
4. சைவத்தில் கார்த்திகை மாதம்
சைவத்திலும் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பு பெற்றது. கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு உரிய நாளாக கருதப்பட்டு கார்த்திகை சோம விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. அன்று பெரும்பாலான சிவாலயங்களில் சங்கு அபிஷேகம் விசேஷமாக நடைபெறும். பல மகான்களும் சித்தர்களும் அவதரித்த இந்த மாதத்தில்தான். திருவண்ணாமலை தீபம் எனும் உலக பிரசித்தி பெற்ற தீபத் திருவிழா நடைபெறுகிறது. 64 நாயன்மார்களில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்கநாயனார், கணம் புல்ல நாயனார், சிறப்புலி நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாம்பாட்டி சித்தர், கோரக்கர் சித்தர் முதலிய சித்தர்களின் குருபூஜை தினங்களும் இந்த கார்த்திகை மாதத்தில் வருகின்றது.
5. முருகனும் கார்த்திகையும்
கிருத்திகை நட்சத்திரத்திற்கு கார்த்திகை நட்சத்திரம் என்ற பெயர் உண்டு முருகனுக்கு இரண்டு நட்சத்திரங்கள் பிரியமானது. 1. அவன் அவதரித்த விசாக நட்சத்திரம். 2. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் அதாவது அக்னியில் இருந்து தோன்றியதால் சூரியனுக்கு உரிய கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதாலும் கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு உரிய நட்சத்திரமாகும். முருகனுக்கு கார்த்திகேயன் என்று திருநாமம். கார்த்திகை மாதம் என்று குறிப்பிடும் விருச்சிக மாதத்தில்தான் இந்த விசாக நட்சத்திரம் இருக்கிறது என்பதால், முருகனுக்கும் கார்த்திகை மாதம் உரியது. கந்தசஷ்டி விரதமும் சூரசம்ஹாரமும் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வருகிறது.
6. முடவன் முழுக்கு
ஐப்பசி மாதத்தில் காவிரியில் அனைத்துப் புண்ணிய நதிகளும் வந்து கலப்பதால் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதால் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பேறு கிடைக்கும். ஐப்பசி மாத கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீராடல் ‘‘கடை முகம் / கடை முழுக்கு’’ என்றும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடல் ‘‘முடவன் முழுக்கு’’ என்றும் அழைக்கப்படுகிறது.
அதன்படி, கார்த்திகை மாதத்தின் முதல் நாளான்று முடவன் முழுக்கு சிறப்பானது. அன்று, மயிலாடுதுறை மயூர நாதர் கோயில் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பின்னர், அஸ்திர தேவரை மட்டும் காவிரிக் கரைக்கு எடுத்துச் செல்வர். அங்கு அஸ்திரதேவருக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியப் பொடிகளால் அபிஷேகமும், தீர்த்தவாரியும் நடைபெறும். இதைத் தொடர்ந்து, பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபடுவர்.
7. திருவண்ணாமலை
கார்த்திகை தீபம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலை உலகப் பிரசித்தி பெற்றது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். நினைத்தாலே முக்தி தரக் கூடியதுமான திருவண்ணாமலை கோயில் 2668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் சிற்ப அம்சங்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. மூலவர் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், கற்தூண் வரிசை வைத்து கட்டப்பட்ட பிரகாரம், மற்றும் அம்மன் சந்நதி உள்ளிட்ட பல தெய்வங்களின் உப சந்நதிகள், 9 கோபுரங்கள், 5 பிரகாரங்கள், பல மண்டபங்கள், திருக் குளங்கள் ஆகியவற்றுடன் மிக பிரமாண்டமான கட்டிட அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள், வழிபாடுகள், அறச்செயல்கள் என விளங்கும் ஆலயம் இது.
8. ஒளிச்சுடராய் சிவபெருமான்
இத்தலத்தின் பெருமையை உணர்ந்துதான் பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சுவாமிகள் எனும் யோகிராம் சுரத்குமார், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன. அக்னித்தலமான இத்தலத்தில் இறைவன் அக்னி சொரூபமாய் காட்சிதருகிறார். ‘‘ஓதிமா மலர்கள் தூவியுமையவள் பங்காமிக்க சோதியே’’ என விளிப்பதால் சிவபெருமான் ஜோதிசுடராய் விளங்குகின்றார்.
“மண்ணாகி விண்ணாகி மலையுமாகி
வயிரமுமாய் மாணிக்கம் தானேயாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியுமாகிக்
கலையாகிக் கலைஞானம் தானேயாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகிப்
பிரளயத்துக்கு அப்பாலோர் அண்டமாகி
எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி எழுஞ்
சுடராய் எம்மடிகள் நின்றவாறே!’
என்று மலை மீது ஒளி வீசிடும் ஜோதிஸ்வரூபாய் காட்சி தருவதையே கார்த்திகை தீப பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
9. பாவங்கள் போக்கும் அண்ணாமலை
அண்டாதி அண்டங்கள் மற்றும் நாம் வாழும் நிலவுலகம் மற்றும் உயிர்கள் எல்லாமே ஒரு ஒளிப்பிழம்பிலிருந்துதான் தோன்றியது. பொதுவாக, நில உலகம் நட்சத்திரங்களில் இருந்து தோன்றியதாகச் சொல்வோம். நட்சத்திரம் என்பது ஒரு ஒளிப்பிழம்பு தானே. அதை போலவே மலை என்பதும் ஒளி பிழம் பிலிருந்து தோன்றுவதுதான். (from molten laavaa). அனலாய் உருகி, அழுத்தம் ஏற்பட்டு, வெளிக்கிளம்பி, அதன்பின் குளிர்ந்து திடப்பொருளாக மாறுவதுதான், மலை உருவாவதன் அடிப்படை என்று அறிவியலில் சொல்லப் படுகின்றது.
அதை போலவே, பக்தி என்கிற அழுத்தத்தில் சுடராய் விளங்குகின்ற சிவபெருமான் வெளியிலே வந்து, அந்த பக்தியில் உருகி, குளிர்ந்து, மலையாக திடமாக நிற்கிறார். அப்படி நின்ற ஒரு தலம்தான் திருவண்ணாமலை. அங்கே மலையாக சிவப்பரம்பொருளே விளங்குவதால் அண்ணாமலையைப் பார்த்தாலே நம்முடைய பாவங்கள் ஓய்ந்துவிடும் என்பார்கள் பெரியவர்கள்.
10. ஜோதியே சிவபெருமான்
ஏன், இறைவனை சுடராக, ஜோதியாக அனலாக சித்தரித்தார்கள்? ஜோதி, சுடர் என்பது விழிப்புணர்வையும், உயிரின் இயக்கத்தையும் காட்டுகின்றது. சக்தியின் ஆற்றலையும் காட்டுகின்றது. சூடு என்கிற உஷ்ணம் இல்லாவிட்டால், இயக்கம் நின்றுவிட்டது என்று பொருள். உடம்பின் சூடு இருக்கின்ற வரை நாம் உயிரோடும் உயிர்ப் போடும் இருக்கின்றோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அதை போல, நாம் உண்ணும் உணவுகள் ஜீரணம் ஆகி உயிருக்குத் தேவையான சக்தியாக பரிணமிக்க அக்னி தேவை. உயிரின் தன்மையையும் இயக்கத்தின் தன்மையையும் அக்னியால் நாம் உணர்வது போல, இந்த இரண்டையும் (உடலையும் உயிரையும்) கூட்டுவித்து நம்மைத் தொழில் படுத்தும் பரமாத்மாவின் இயக்கத்தின் குறுயீடாக அக்னியை உணர்கிறோம். அந்த அக்னிதான் பரம்பொருள். எனவேதான் திருக்கார்த் திகையில் அக்னி ஜுவாலையாக நாம் இறைவனை தரிசிக்கிறோம்.
11. மணிவாசகர் கண்ட ஜோதி
நம்முடைய வாழ்வும், நம்முடைய பூலோகத்தின் வாழ்வும் நெருப்பாகிய அனலில்தான் அடங்கி இருக்கிறது. அக்னி என்ற ஒன்று இல்லாவிட்டால் இந்த உலகமோ உயிர்களோ இருப்பதற்கு வழியே இல்லை. அந்த முதல் தோற்றமான அக்னியைத்தான் திருவண்ணாமலையில் தரிசிக்கிறோம். அதைத்தான்,
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்’’
என்று மணிவாசகப் பெருமான் அழைத்தார்.
இரண்டாவது பாடலிலும், ‘‘பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய்’’ என்று ஜோதியாகவே வர்ணிக்கிறார். அவர் சிவனை ஜோதியாகக் கண்டார். நாமும் காண்கிறோம்.
12. அக்னியே அனைத்துக்கும் காரணம்
யாகங்களிலும், ஹோமங்களிலும் நாம் இதை எளிதாக உணரலாம். நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை ஏற்படுத்துவது யாகத்தின் ஜோதியாய் சுடர்விடும் அக்னிதான். நாம் தருகின்ற பொருள்களை எல்லாம் (ஆஹுதிகளை எல்லாம்) அந்தந்த தேவதைகளுக்குத் கொண்டு போய் சேர்ப்பது அக்னிதான் (holy fire) (ஸ்வாஹா) என்று எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பரந்த தொடர்பை உணர்வதுதான் திருக்கார்த்திகையின் நோக்கம். ரிக் வேதம் முதலில் அக்னியைத்தான் கொண்டாடுகிறது.
அக்னிமீடே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்
ரித்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்
அடுத்த வேதமும் அக்னியைத் தான் முன்மொழிகிறது.
அக்ன ஆயாஹி வீதயே
க்ருணானோ ஹவ்யதாதயே
நி ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி
“அழகிய அங்கங்களை உடைய அக்னி தேவனே, இங்கே எழுந்தருள்வீராக. வேள்வியில் சமர்ப்பிக்கும் பொருட்களைப் ஏற்றுக் கொள்வீராக!” என்பது இதன் பொருள். அந்த அக்னிதான் தீபச்சுடராகி திருக்கார்த்திகை நாளில் காட்சியளிக்கிறார்.
13. ஒளியை வணங்குதல்
வேதத்தின் சாரம் காயத்ரி. அது ஒளியைத்தான் (மெய்யறிவு) குறிக்கிறது.
‘‘ஓம் பூர் புவஸ்ஸுவஹ,
தத்சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
தியோ யோநஹ பிரசோதயாத்’’
என்ற இந்த மந்திரப் பொருளை மகாகவி பாரதியார்,
செங்கதிர்த் தேவன் ஒளியினைத்
தேர்ந்து தெளிகின்றோம் அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக
– என்று அழகிய தமிழில் மொழிபெயர்த்து அருளினார்.
அவரே “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்” என்றும் பாடினார். ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் ‘‘தமஸோ மா ஜ்யோதிர் கமய’’ (இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாய்) என்ற மந்திரத்திலும் ஒளி இடம் பெற்றது. சூரியன், சந்திரன், அக்னி (நெருப்பு) ஆகிய மூன்றும் ஒளியை உண்டாக்கி இருளகற்றுகின்றனவோ, அதே போல, ஞான ஒளி, அறியாமை என்னும் இருளை அகற்றும்.
14. ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?
இருட்டு என்பது அஞ்ஞானத்தைக் குறிக்கிறது. மாயையைக் குறிக்கிறது. அது மனதில் இருக்கின்ற வரை, எதையும் நம்மால் உணர முடியாது அல்லது தவறாக உணர்வோம். இருட்டிலே ஒருவன் நடந்து செல்லுகின்ற பொழுது அவன் சரியான பாதையில் எப்படிச் செல்ல முடியும்? அடுத்து, அவனுடைய செயல்பாட்டை அது இடறிவிடவும் செய்து அவனுக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த அஞ்ஞானமாகிய இருட்டு இருக்கின்ற வரைக்கும், நாம் அடைந்த மனிதப் பிறவியால் நமக்கு ஏதும் பயனில்லை. நாம் எந்த உண்மையையும் உணர முடியாது. அதைவிட நாம் உணர்ந்ததுதான் உண்மை என்று பொய்யாக நினைத்துக் கொண்டிருப்போம். இந்த மாயா பாசமாகிய இருட்டை தொலைத்து நமக்கு அறிவு என்னும் வெளிச்சத்தை ஏற்றுவதன் குறியீடுதான் தீபங்கள் ஏற்றுவது.
15. அப்பர் காட்டும் நமசிவாய விளக்கு
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமசி வாயவே.
– அப்பர் தேவாரம் 4-11-8
இதில் நான்கு விளக்குகள் குறித்து அப்பர் காட்டுகின்றார். இந்த நாலு விளக்குகளையும் ஏற்ற வேண்டும்.
1. இல்லத்தினுள் உள்ள விளக்கானது இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது;
2. சொல்லினுள் உள்ள விளக்கானது ஜோதி வடிவில் உள்ளது;
3. பலருடைய மனதில் உள்ள விளக்கு, அது எல்லோரும் காண்பது.
4. நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு “நமசிவாய” என்ற மந்திரம்
நமசிவாய என்னும் விளக்கு அறியாமை எனும் இருளை அகற்றும்; சிவஜோதியில் கலக்க உதவும்.
16. அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெறலாம்
இந்த தீபங்களின் மூலமாக முதலில் நாம் நம்மை உணர்கிறோம். நாம் இருக்கும் சூழலை உணர்கிறோம். அந்த தீபத்தின் மூலமாக இறைவனையும் உணர்கிறோம். (உணர முயல்கிறோம்). எனவேதான் வழிபாட்டிலே தீபம் ஏற்றுவது என்பது மிக மிகப் பிரதானமாக முதன்மையாக இருக்கிறது. இறைவன் அக்னி பிழம்பாக தன்னை வெளிப்படுத்திய திருக்கார்த்திகை நாளில் எல்லா ஆலயங்களிலும், எல்லா வீடுகளிலும் தீபங்களை ஏற்றி கொண்டாடுகின்றோம். கார்த்திகை மாத வீடாகிய விருச்சிகத்தின் ஆறாம் வீடாகிய மேஷ வீட்டில் பரணி நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருப்பார்.
இந்த பரணி நட்சத்திரம் சுக்கிரனுக்குரிய நட்சத்திரம். சுக்கிரனுடைய அனுக்கிரகம் இருந்தால், சாட்சாத் மகாலட்சுமியின் அனுகிரகம் இருக்கும். எனவே, கார்த்திகையில் பரணியில் தீபம் ஏற்றுவதன் மூலமாக அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெறலாம். திருவண்ணாமலையில் தீபம் எந்த நேரத்தில் ஏற்றப்படுகிறதோ, அதை அனுசரித்துத்தான் ஒவ்வொருவர் இல்லத்திலும் திருக்கார்த்திகை விளக்குகளை ஏற்றி, தீபச் சுடராக விளங்குகின்ற சிவபெருமானை வணங்குவார்கள். அப்பொழுதுதான், அவர்கள் கார்த்திகை விரதத்தையும் முடித்துக் கொள்வார்கள்.
17. என்று தீபம்?
அக்னித்தலமான அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இவ்வாண்டு கார்த்திகை தீபப் பெருவிழா நவம்பர் மாதம் 17-ஆம் தேதி ஆரம்பித்து 26-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. நவம்பர் மாதம் 17-ஆம் தேதி வெள்ளிக் கிழமை விடியற்காலை 4:45 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. 20-ஆம் தேதி திங்கள் அன்று வெள்ளி கற்பக விருட்ச வாகனமும், வெள்ளி காமதேனு வாகனமும் திருவீதி உலா வர, 21-ஆம் தேதி செவ்வாய் அன்று, வெள்ளி ரிஷப வாகன திருவீதி உலா நடைபெறும்.
அதற்கு அடுத்த நாள் புதன்கிழமை வெள்ளி ரத உலா நடைபெறும். விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான தேர் உற்சவம், நவம்பர் மாதம் 23-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7:30 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் வடம் பிடித்து துவங்குகின்றது. பஞ்சமூர்த்திகள், மகாரதம் சீரும் சிறப்புமாக திருவண்ணாமலை தேர்வீதிகளில் வலம் வரும். அதன் கண்கொள்ளாக் காட்சியை தரிசிக்கலாம். நவம்பர் மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4:00 மணிக்கு திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6:00 மணி அளவில், மலையின் உச்சியில் “மகா தீபம்’’ எனப்படும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
18. பார்வதிக்கு சரிபாதி தந்த தினம் திருக்கார்த்திகை
சிவனுக்கு உமையொருபாகன் என்று பெயர். ‘‘மாமலை மங்கை ஓர் பால் குறியுடையன்’’ என்று அர்த்தநாரீஸ்வரர் திருமேனியைத் தனது திருப்பூந்துருத்தி முதலாம் பதிகத்தில் பாடுகிறார் அப்பர் சுவாமிகள். கைலாயத்தில் ஒருமுறை உமாதேவியார் சிவனின் கண்களை விளையாட்டாக மறைக்க பிரபஞ்சமே இருட்டில் தவித்தது. உயிர்கள் அனைத்தும் துயரத்தில் இருந்தன. அகில மாதாவாகிய தானே இப்படிப்பட்ட தவறு செய்து விட்டோமே என்று உமாதேவி வருந்தினார். தான் பாவம் செய்து விட்டதாகக் கருதி அதற்கு பிராயசித்தத்தைத் தேடி காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நோக்கி தவத்தில் இருந்தார்.
இறைவன் தேவிக்கு காட்சி அளித்தார். உமாதேவியாரை திருவண்ணாமலைக்கு வரும்படியாக அருள்புரிந்தார். உமாதேவியாரும் அண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையில் கௌதம மகரிஷியின் ஆசிரமத்தில் தவம் செய்தார். விருச்சிக மாதம் திருக்கார்த்திகை பௌர்ணமி நாள் அன்று இறைவன் தேவிக்கு காட்சியளித்து இடப்பாகத்தில் ஏற்று அருள் புரிந்தார். அந்த தினமே திருக்கார்த்திகை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
19. கார்த்திகை விரதம் இருப்பது எப்படி?
கார்த்திகை தீப விரதத்தைப் பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். பக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவு உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம், அரை வயிறு எடுத்துக் கொள்ளலாம். கார்த்திகை திருநாளில் அதிகாலை எழுந்து, நீராடி இறைவனை வணங்க வேண்டும். தெய்வத் துதிகளையும், பாமாலைகளையும் ஜபிக்க வேண்டும்.
காலையில் வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பூஜையறையில் உள்ள தூசுகளையும், அழுக்குகளையும் அகற்றி, பூஜையறையின் விளக்குகளைத் தேய்த்து, அலம்பி வைத்துக் கொள்ளவேண்டும். மாலையில், வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலமிட்டு, அகல் விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரிவைத்து விளக்கேற்ற வேண்டும். மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன், நம் பூஜை அறையில் பூஜை முடித்து தீபாராதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால், அன்று அரிசி உணவு உண்ணக் கூடாது. பால், ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம்பருப்பு கஞ்சி, நிவேதனங்கள் சாப்பிடலாம்.
20. கார்த்திகை பொரி, பனையோலைக் கொழுக்கட்டை
தீபம் அன்று விரதமிருக்க வேண்டும். அன்று கார்த்திகை பொரி அவசியம் படைக்க வேண்டும். பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பொரியும் வெல்லமும் சேர்த்த உருண்டை முக்கியம். சிலர் கொழுக்கட்டை செய்து படைப்பது உண்டு. தென் தமிழகத்தில் பனையோலைக் கொழுக்கட்டைபிரசாதம் படைப்பார்கள். பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து செய்வார்கள். பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும்.
21. சக்கரவர்த்தி யோகம் தரும் தீபம்
கோயிலில் ஒரு தீபத்தை ஏற்றினாலோ அல்லது அணையும் தீபத்தை தூண்டினாலோ, அது தரும் யோக பலனை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதனால்தான் தோஷ பரிகாரங்களுக்கு விளக்கு போடுவதை பிரதானமாகச் சொல்கிறோம். சுவாமிக்கு முன் விளக்கு ஏற்றினால், நம் வாழ்க்கையின் இருளாகிய கஷ்டம் தீராதா என்று நினைக்கிறோம். ஒருமுறை சிவாலயத்தில் நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது. தூண்டிவிடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும், அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியானார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார்.
22. ஞான விளக்கு பெறவே தீபம்
திருக்கார்த்திகையின் விளக்கு ஏற்றி, கோலாகலமாக நாம் கொண்டாடினாலும், அதனுடைய தத்துவத்தையும் புரிந்து கொள்வதன் மூலமாகத்தான், நாம் அந்த விழாவில் பூரணமான மனம் கொண்டு ஈடுபட முடியும். விளக்கு ஏற்றுவது இருளை நீக்குவதற்காக என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதன் ஒளி என்பது அறிவையும் (wisdom) ஆற்றலையும் (energy) குறிப்பது. ஒரு விளக்கில் இருந்து பல விளக்குகள் ஏற்றப்படுவதைப் போல, ஒருவருடைய ஆற்றலும் அறிவும் மற்றவர்களுக்கும் பயன்படும்; வழிநடத்தும்; அவர்கள் வாழ்வை உயர்த்தும். ஒரே ஒரு விளக்கு இருந்தால் போதும்; அந்த விளக்கின் ஒளியில் 100 பேர் நடந்து செல்லலாம். அதை போல ஒரே ஒரு மெய்யறிவு படைத்தவன் இருந்தால் ஒரு சமுதாயத்தையே வழி நடத்த முடியும். அப்படிப்பட்ட ஞான விளக்கைப் பெற வேண்டும் என்பதற்காகவே இறைவனாகிய பெருஞான விளக்கை வேண்டி விளக்கு ஏற்றுகின்றோம்.
23. குலவிளக்கு
விளக்கின் பெருமையை பண்டைய நூல்கள் பலபடியாகத் தெரிவிக்கின்றன. யார் ஒருவர் சிறந்தவரோ, அவரை “விளக்கு” என்கிற சொல்லாலே அழைக்கும் மரபு உண்டு. ராமனை, “அயோத்தி என்னும் அணி நகரத்தின் விளக்கு” என்று பாடுவார் குலசேகர ஆழ்வார். பகவான் கண்ணனை, “ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு” என்று பாடுவார், ஆண்டாள் நாச்சியார். ஏன், நமது குடும்பத்திலேயே ஒருவர் மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டினால் அவர்களை குடும்ப விளக்காக அழைக்கின்றோம்.
குலவிளக்கு என்று அவருடைய பெருமையைப் பேசுகின்றோம். திருமணம் ஆகி வீட்டுக்கு வருகின்ற மருமகளை, நல்லறமாகிய இல்லறம் நடத்த வருகின்றாள் என்பதை, ‘‘வீட்டில் விளக்கேற்ற வந்தாள்’’ என்ற சொல்லால்தான் குறிப்பிடுகின்றோம். வீட்டில் உள்ள பெண்களை குடும்ப விளக்கு என்று அழைக்கின்றோம். இந்த நல்லறமாகிய விளக்கினை தினம்தோறும் ஏற்றினாலும், திருக்கார்த்திகை என்று ஒரு தனி நாளை அதற்கு ஒதுக்கி அன்று சிறப்பாக அகல் விளக்குகளை ஏற்றுகின்றோம்.
24. பெருமாள் ஆலயங்களிலும் கார்த்திகை தீபம்
வைணவ வழிபாட்டுக்கு சிறப்பான இரண்டு ஆகமங்கள் உண்டு. ஒன்று பாஞ்சராத்திரம். இன்னொன்று வைகானசம். இந்த இரண்டிலுமே கார்த்திகை தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்கின்ற குறிப்பு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அன்று வீடுகளில் தீபம் ஏற்றவேண்டும். பெருமாளுக்கும் தீபத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கார்த்திகை மாதத்தில் பக்தியுடன் விஷ்ணு சந்நதியில் விளக்கு ஏற்றினால், ஒருவனுக்கு ஏற்படும் புண்ணியத்தின் அளவு சொல்லவே முடியாது என்று சௌனக மகரிஷி கூறுகிறார். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியில் ரிஷப லக்கினத்தில் விளக்கை ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றினால் நாட்டில் தானிய அபிவிருத்தி அமோகமாக இருக்கும். நாட்டு மக்களுக்கு நற்பலன்கள் ஏற்படும் என்றெல்லாம் வைணவ ஆகமங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன.
25. ஆழ்வார்கள் விவரிக்கும் விளக்கு
விளக்கு என்ற சொல் இரண்டு பொருளைத் தருகிறது. ஒன்று விளக்கு ஒளி (light) என்ற பொருளில் வரும். இரண்டாவது விளக்கம் பெறுவது, விளக்கம் தருவது, விளங்க வைப்பது (explaining) (detailing) (describing) விவரிப்பது என்ற பொருளில் வரும். இரண்டும் வழிகாட்டுதலைக் குறிக்கும் சொற்களாகவே அமைந்திருப்பதை நாம் பார்க்கலாம். அந்த ஒளியை உணரும் பொருட்டுதான் திருக்கார்த்திகையில் தீபங்களை ஏற்றுகின்றோம். இந்த தீபங்களை ஏற்றும் பொழுது எந்த மனநிலையில் ஏற்ற வேண்டும் என்பதை ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் விவரிக்கின்றார்கள்.
26. எப்படி ஏற்ற வேண்டும்? என்னென்ன வேண்டும்?
ஆழ்வார்கள் பகவானை, விளக்காகவும் சுடராகவும் தரிசிக்கிறார்கள்.‘‘அண்டமாம் எண்டிசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரமஜோதி நின் னையே பரவுவேனே’’ என்பது திருமங்கை ஆழ்வார் வாக்கு. அவரே ‘‘விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள்’’ என்றும் பகவானைக் குறிப்பிடுகின்றார். நம்மாழ்வார் ‘‘பாசம் வைத்த பரம் சுடர் ஜோதி’’ என்கிறார். அடுத்து மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றுவதுதான் மிகச் சிறந்தது.
இரும்பு சார்ந்த உலோகங்களில் விளக்கேற்றுவது சிறப்படையது அல்ல. அகல் விளக்கு தான் சிறந்தது. அந்த அகல் விளக்கு மண்ணால் செய்யப்படுவதால் பூமியைக் குறிக்கிறது. பூமிக்கு, “ப்ருத்வி’’ என்று பெயர். வெறும் அகல் இருந்தால், விளக்கு ஏற்ற முடியாது. அதிலே நாம் எண்ணெயை விட வேண்டும். அந்த எண்ணெய் அந்த அகல் விளக்குக்குள்ளே இருக்க வேண்டும். எண்ணெயும், அகலும் இருந்தால் மட்டும் விளக்கேற்ற முடியாது. அதிலே திரி இருக்க வேண்டும். ஆக, ஒரு தீபத்திற்கு அகல், எண்ணெய், திரி என்ற மூன்று பொருட்கள் தேவை.
27. புற இருள் அகல
இப்போது புற இருள் நீங்க, இந்த மூன்று பொருள்களைக் (அகல், எண்ணை, திரி) கொண்டு ஆழ்வார் விளக்கேற்றும் அழகைக் காணுங்கள்.
வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக … செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்
மாலை இடர் ஆழி நீங்குகவே என்று
(முதல் திருவந்தாதி / பொய்கையாழ்வார்)
வையகம் என்கிற பூமி அகல். வார் கடல் என்கின்ற கடல் நெய். கதிரோன் என்கின்ற சூரியன் எரியும் திரி (சுடர்). தினசரி அந்த விளக்கு வருவதால்தானே நாம் வெளிச்சம் பெறுகின்றோம். இது புற இருளை அகற்றுகின்றது.
28. அக இருளும் போக வேண்டும்
வெளியிலே ஆயிரம் வெளிச்சம் இருந்தாலும், நம்முடைய மனம் இருட்டில் இருந்துவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. இந்த அக இருட்டிற்கு மயக்கம், (மயர்வு) ஐயம், மருள் என்று பெயர். இதை விரட்ட வேண்டும். இதற்கும் ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும். இதற்கும் மூன்று பொருட்கள் தேவை. (அகல், எண்ணெய், திரி). ஆனால், இது வேறு மூன்று பொருட்கள். அன்புதான் அகல். ஊற்ற வேண்டிய நெய்தான் ஆர்வம். சுடர் விடுவதற்காக போடுகின்ற திரி நம்முடைய புத்தி (சிந்தனை). இந்த மூன்றையும் கொண்டு விளக்கு ஏற்றினால், அது ஞானப்பிரகாசமாக எரிந்து, நம்மையும் காட்டும்; நம்முடைய ஆத்மாவில் உறைகின்ற இறைவனையும் காட்டும். இந்த தத்துவத்தை உணர்ந்துதான் திருவிளக்கு ஏற்ற வேண்டும். இதை பாடுகிறார் பூதத்தாழ்வார்.
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்’’
29. எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?
வீடு முழுக்க எண்ணற்ற விளக்குகளை ஏற்ற வேண்டும். குறிப்பாக, 27 விளக்குகள் ஏற்றுவது என்ற முறை உண்டு. இந்த 27 விளக்குகள், 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். இப்படிச் செய்தால் சகல செளபாக்கியங்களும், மங்களங்களும் வாழ்க்கையில் கிடைக்கும். 27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள், குறைந்தது 9 (நவகிரகம் ஒன்பது அல்லவா) தீபங்களை ஏற்றலாம். முக்கியமாக ஒற்றைப் படை எண்ணிக்கையில் விளக்கை ஏற்றுவது சிறப்பு. குறைந்த பட்சம் 3 தீபங்களாவது ஏற்ற வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒன்று உங்கள் குடும்பத்துக்காக, ஒன்று உங்கள் மூதாதையர்களை வழிபடும்பொருட்டு, மூன்றாவது விளக்கு உங்கள் எதிர்கால சந்ததிகள் நலமுற்று வாழ என்று கூறப்படுகிறது.
30. எங்கெங்கு ஏற்றவேண்டும்?
நம்முடைய வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை, வீட்டில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் ஏற்ற வேண்டும். தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் கொண்டு தீபமேற்ற வேண்டும். பின்னர், மறந்துவிடாமல் சமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பால்கனி, வராண்டா, மாடிப் படிகளில் கோலம் போட்டு தீபம் ஏற்றலாம். துளசி செடிக்கு ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை இருந்தால் நிச்சயம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த மரங்கள் மகாலட்சுமி அம்சம் கொண்டவை. இன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபட, நம் இல்லங்களில் மட்டுமல்ல, உள்ளங்களிலும் மகாலட்சுமி குடியேறுவாள்.
தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி
The post முத்துக்கள் முப்பது-கவலைகளை தூள் தூளாக்கும் கார்த்திகை தீபம் appeared first on Dinakaran.