×

பாரெங்கும் ஒளிரும் கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை தீபம் 26-11-2023

அக்னியே பரம்பொருள்

பரம்பொருள் அக்னி ரூபமாகவே இருக்கிறான். எங்கும் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். நம் ஆன்மாவில் ஒளிவிடும் ஜோதியாக இருக்கின்றான். அந்த ஜோதியை உணர்வதே ஞானம். உணர முடியாததே இருட்டு எனும் அஞ்ஞானம். அந்த இருட்டை மாய்த்து பரம்பொருளை உணர வைப்பதே தீபம். ஒரு தீபம் ஏற்றினால், அது எல்லா திசையிலும் ஒளி பரவி நிற்கும். பரம்பொருளும் அப்படித்தான். அவன் கருணையும், ஆற்றலும் எல்லாத் திசையிலும் பரவிநிற்கும்.

எப்போதும் மேன்மையான எண்ணங்கள்

நாம் தினசரி காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கு ஏற்றுகிறோம். ஒருமுகவிளக்கோ, ஐந்துமுக விளக்கோ, சர விளக்கோ, குத்து விளக்கோ, எந்த விளக்காக இருந்தாலும், அதில் ஏற்றப்படும் தீபம் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை உணர்த்துகிறது. நீங்கள் கவனியுங்கள். எங்கே விளக்கேற்றினாலும், அதன் சுடர் மேல்நோக்கி மட்டுமே எழும். எத்தனை அகலம் அடியில் இருப்பினும் சுடர் தானே கூர்மையாகி மேலே எழும்பி, ஒரு ஒற்றைப்புள்ளியில் கூடும். அந்த புள்ளியே பரம்பொருள். விளக்கு ஏற்றும் போது நம் எண்ணங்கள் செயல்கள் எல்லாமே மேல் நோக்கியதாக இருக்க வேண்டும். அப்போதுதான், பரம்பொருள் என்ற புள்ளியை எளிதில் அடைய முடியும் என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டுவதுதான் தீபம்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்ஜோதி

ஒளி, ஜோதி, சுடர், நெருப்பு அனைத்தும் ஞானத்தின் குறியீடுகள். ஞானமே வடிவான இறைவனையும் இறை அருளையும் ஜோதி வடிவமாகவே ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். சைவம், வைணவம் என இரு பெரும் சமயங்களும் ஏற்றுக் கொண்ட உண்மை இது. மணிவாசகப் பெருமான் இறைவன் நெருப்புப் பிழம்பாய் எழுந்ததை, தம்முடைய திருவெம்பாவையின் முதல் பாடல் முதல் வரியிலேயே சொல்லிவிடுகின்றார். கார்த்திகை மாதத்தில் தீபச் சுடராய் எழுந்த திவ்ய மங்களப் பரம்பொருளை, திருவெம்பாவையின் முதல் பாடலாக, அவர் பதிவு செய்கின்றார்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள்
தடங்கண்
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
இதில் முக்கியமான வார்த்தை
‘‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்
பெரும் சோதி’’

பரஞ்சுடர் ஜோதி

வைணவத்தில் நம்மாழ்வார் பெருமாளை ‘‘பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி” என்று குறிப்பிடுகின்றார். திருமங்கை ஆழ்வாரும், “அண்டமாம் எண்டிசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரம ஜோதி” என்று ஜோதி ஸ்வரூபமாகவே பாடுகின்றார். அருணகிரிநாதர் இறைவனை, ‘‘தீப மங்கள ஜோதி நமோ நம:’’ என்று போற்றுகின்றார். வாழ்விக்க வந்த அருட்பிரகாச வள்ளலாரும் ‘‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி’’ என்று ஜோதி வடிவமாகவே இறைவனைப் போற்றுகின்றார்.

சாக்த நெறியில் அபிராமி பட்டர் அம்பாளை ஜோதி ஸ்வரூபமாகவே காணுகின்றார். ‘‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’’ என்று அம்பாளை உதிக்கின்ற சுடராக, அபிராமி அந்தாதியின் முதல் வரியிலேயே போற்றுகின்றார். மகாலட்சுமியை குறிப்பிடுகின்ற போது தீபலட்சுமி என்ற தீபத்தின் பெயரால் குறிப்பிடுவதை காண்கின்றோம். எனவே, இறைவன் அல்லது இறைவியின் ஒவ்வொரு வடிவமும் தீப வடிவம் என்பது நம்முடைய சமயத்தின் அடிப்படைச் சிந்தனை.

சந்திரனின் நீசம் போக்க தீபம் ஏற்ற வேண்டும்

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். ஐப்பசி அமாவாசையில் அவரிடமிருந்து ஒளி பெறும் சந்திரன் அவரோடு இருப்பார். நீசம் பெறும் அந்த சூரியன், பலம் பெறுவதற்காக, தீபத்தை ஏற்றி, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றோம் கார்த்திகை மாதத்தில் சூரியன் தன்னுடைய நீச ராசியை விட்டு நட்பு ராசியான விருச்சிகத்தை அடைகிறார். அவர் விருச்சிகத்தில் பிரவேசிக்கும் மாதமே கார்த்திகை மாதம். ஆனால், இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் சந்திரன் நீசம் அடைகிறார். சூரியன் நீசத்தை நீக்க தீபமேற்றியது போலவே, சந்திரனின் நீச தோஷத்தை, நீக்க விருச்சிக மாத மாகிய கார்த்திகையில் தீபம் ஏற்ற வேண்டும். இதன்மூலம் மனோகாரனாகிய சந்திரன் இருள் விலகி பிரகாசிக்கிறார்.

பரணி தீபமும், கார்த்திகை தீபமும்

சந்திரன் இருள்நீங்கி பிரகாசிக்கிறாரா என்றால், ஆம்; பிரகாசிக்கிறார். கார்த்திகையில், கார்த்திகை தீபத்திருநாள் அன்று, சந்திரன் நீசம் பெறும் விருச்சிகத்தில் சூரியன் இருக்க, அவரிடமிருந்து ஒளி பெறும் சந்திரன், தன்னுடைய உச்ச ராசியான ரிஷபத்தில் இருக்கிறார். அவர் ரிஷபத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் வேளையில்தான் கார்த்திகை தீபத்தை ஏற்றுகிறோம். அதற்கு முன்னால் ரிஷப சுக்கிரனுக்குரிய பரணி நட்சத்திரத்தில் இருக்கும் வேளையில் பரணி தீபம் ஏற்றுகிறோம். அவர் ரிஷப ராசியில் தனது சொந்த நட்சத்திரமான ரோகிணியில் இருக்கும் வேளையில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றுகிறோம். அதுவும் சந்திரன் இருக்கும் ரிஷப லக்ன வேளையில் தீப மேற்றுவது விசேஷமானது என்று ஆகம சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

திருவண்ணாமலை தீபம்

நம்முடைய சமய மரபில் ஏராளமான உற்சவங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட உற்சவத்தைச் சொன்னால், உடனே தொடர்புடைய தலம் நினைவுக்கு வரும். சைவம், வைணவம் இரண்டுக்குமே இது பொருந்தும். பங்குனி உத்தரம் என்றால் பழனி நினைவுக்கு வரும். சித்திரைத் திருவிழா என்றால் கள்ளழகரும் மதுரை மீனாட்சி அம்மன் கல்யாணமும் நினைவுக்கு வரும்.

வைகுண்ட ஏகாதசி என்றால் ஸ்ரீரங்கம் நினைவுக்கு வந்துவிடும். ஆருத்ரா தரிசனம் என்றால் சிதம்பரம் நினைவுக்கு வந்துவிடும். புரட்டாசி பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி நினைவுக்கு வந்துவிடும். கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர் நினைவுக்கு வந்துவிடும். கார்த்திகை தீபம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது பஞ்சபூத தலங்களில், அக்னி தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலையும், மலையின் உச்சியில் ஏற்றி வழிபடும் திருக்கார்த்திகை தீபமும்தான் நினைவுக்கு வரும்.

இருபத்தியோரு தலைமுறையினருக்கு முக்தி

‘திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது. ‘இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும். குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளியதாக பாடல் உள்ளது. அந்தப் பாடல்:

`கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு
ஜோதி
மலைநுனியிற் காட்ட நிற்போம்.
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிப்
பிணியில்லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும்
கண்டோர்
தவிரும் அது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலை
முறைக்கு
முத்திவரம் கொடுப்போம்’

திருமங்கை ஆழ்வாரின் கார்த்திகை உற்சவம்

ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரின் அவதாரம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. இவர் கலி இருள் அகற்ற வந்தவர் என்பதால், இவரை ஒரு விளக்காக வைணவத்தில் (கவிம் லோக திவாகரம்) என்று சொல்வார்கள். இவருடைய அற்புதமான தமிழ்ப் பாசுரங்கள் நெஞ்சில் உள்ள இருட்டை விலக்கும் என்பதால் நெஞ்சுக்கு இருள் கடி தீபம் என்றார்கள். இவருடைய அவதார தினத்தை, கார்த்திகை பௌர்ணமியில் விளக்கு ஏற்றி கொண்டாடுவார்கள்.

அந்த நாளில் ஆழ்வார் அவதரித்த திருவாலி திருநகரியில் ஆழ்வாருக்கு விசேஷமான திருமஞ்சனம் நடைபெறும். அதுமட்டுமல்ல, 10 நாட்கள் அவருடைய அவதார உற்சவம் தனி உற்சாகமாக நடைபெறும். இன்னுமொரு சிறப்பு, பெருமாளுக்கு இருப்பது போலவே ஆழ்வாருக்கும் தனியாக கொடிமரம் இந்த ஆலயத்தில் உண்டு.

திருமஞ்சனமும் தீபமும்

அன்றைக்கு எல்லா பெருமாள் கோயில்களிலும், பெருமாள் – தாயாருக்கு சிறப்பான திருமஞ்சனம் நடைபெறும். காலையில் சிறப்பு திருவாராதனம் நடைபெறும். மாலையில் திருவாராதனம் முடிந்து, பெரிய அகல் விளக்கு ஏற்றப்படும். பிறகு புண்ணியாகவாசனம் செய்து கார்த்திகைதீப பிரதிஷ்டை செய்யப்படும். அந்த தீபத்துக்கு தீபாராதனையும் நடந்து தீபம் புறப்படும். பிராகாரத்தை வலம் வந்து, ராஜகோபுரத்திலும் பெருமாள் சந்நதியிலும் தீபங்கள் வைக்கப்படும். பிறகு அந்த தீபம் தாயார் சந்நதிக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்படும். தாயாருக்கு வேத மந்திரங்களோடு தீபம் சமர்ப்பிக்கப்படும். பின்பு தாயார் விமானத்திலும் மடைப்பள்ளி நாச்சியார் முன்பும் தீபம் வைக்கப்படும்.

சொக்கப்பனைகார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி எல்லா கோயில்களிலும் நடைபெறும். பனைமரத்தினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத்தில் நடுவார்கள். அதில் சில அடி உயரத்திற்குப் பனையோலைகளைக் கூம்புபோன்று கட்டி அமைக்கின்றார்கள். இவ்வமைப்பு சொக்கப்பனை என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று சிவாலயக் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி, பஞ்சமூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படும்.

அதன்பின், பஞ்சமூர்த்திகளை சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். பின்னர், பஞ்சமூர்த்திகளுக்குத் தீபாராதனை காட்டப் பெற்று, அந்தத் தீபச்சுடரால் சொக்கப் பனையைக் கொளுத்துகின்றார்கள். எரிகின்ற சொக்கப்பனை அக்னி மயலிங்கமாகப் பக்தர்களால் வணங்கப் படுகிறது. “தூய்மைக்கு சொக்க” என்று பெயர். தூய்மையான தங்கத்தை சொக்கத்தங்கம் என்று சொல்கிறோம். தூய்மையானது அக்னி. எந்தப் பொருளை போட்டாலும் அக்னி தூய்மை கெடாது. தூய்மையுள்ள இறைவனை `அமலன்’ என்கிறோம். அவர்தான் சொக்கப்பனை. சொக்கப்பனையில் எரிதழலாக சொக்கப்பனை தரிசனம் செய்கிறோம்.

அகல் விளக்கு உண்மைகள்

நாம் தினசரி பூஜைகளை விளக்கேற்றித் தான் இறைவனை வணங்குகின்றோம் என்றாலும்கூட, விளக்கேற்றும் வைபவத்துக்கென்று ஒரு உற்சவம் கார்த்திகை உற்சவம். இதில் மக்கள் தங்கள் வீடுகளில், மாலை நேரத்தில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். அகல் விளக்கு என்ற வார்த்தையை ஆய்வு செய்தால் நமக்கு சில அற்புதமான உண்மைகள் தெரியவரும். மண்ணால் செய்யப்பட்ட விளக்கை அகல் விளக்கு என்று சொல்லுகின்றோம். அந்த மண் விளக்குகளைத் தான் நிறைய ஏற்றுகிறோம். இந்த விளக்கு ஏற்றுவதன் மூலமாக இருட்டு அகல்கிறது. மாயை அகல்கிறது.

கவலைகள் அகல்கின்றன. இப்படி இருட்டையும் துன்பத்தையும் கவலையையும் அகலச்செய்கின்ற விளக்கு என்பதால் இதனை “அகல் விளக்கு” என்று சொல்கின்றோம். இறைவனை வணங்கி ஒரு விளக்கேற்றி வைத்தால், எப்பேர்பட்ட துன்பங்களும் விலகி ஒரு நல்ல வெளிச்சம் மனதிற்கு கிடைக்கும் என்பதுதான் அகல் விளக்கின் தத்துவம். ‘‘ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்’’ என்றும், ‘‘பொய் இருள் அகல நெய்விளக்கு ஏற்றி’’ என்றும், பாடி வைத்தார்கள். இடராழி நீங்கவே சுடர் ஆழி ஏற்றினேன் என்பது ஆழ்வார் வாக்கு.

வழிகாட்டும் விளக்கு

இருட்டில் எது வழி என்று தடுமாறுகின்றவர்களுக்கு, ஒரு விளக்கின் வெளிச்சம் இருந்தால் வழி தெரியும். அதுபோல, நாம் வாழ்க்கையில் எது சரி என்பது தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற போது நமக்கு இதுதான் வழி என்று காட்டுவதற்குத் தான் விளக்கை ஏற்றுகிறோம். இதை ஒரு பாடலில் கவியரசு கண்ணதாசன் மிக அற்புதமாகச் சொல்லுவார். ஒரு படத் தயாரிப்பாளர் அவரிடம் வந்து, ‘‘புதிதாக படம் எடுக்கிறேன் அதற்கு முதல் முதலில் பூஜையின்போது ஒரு பாடல் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் என்னுடைய தொழில் நன்றாக நடக்கும் படியாக ஒரு பாடல் எழுதித் தரவேண்டும்’’ என்று கேட்டபோது கவியரசு கண்ணதாசன் எழுதி கொடுத்தாராம்.

“விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய
எரியட்டும்
நடக்கப் போகும் நாட்கள் எல்லாம் நல்ல
தாக நடக்கட்டும்’’

எங்கெங்கு விளக்கு ஏற்ற வேண்டும்?

கார்த்திகை தீபத்தன்று எங்கெங்கே விளக்கு ஏற்ற வேண்டும்? எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்? என்று பலருக்கு சந்தேகம் வரும். எங்கெல்லாம் இருட்டு இருக்கிறதோ, எங்கெல்லாம் வெளிச்சம் தேவைப்படுகிறதோ, எங்கெல்லாம் ஏற்றினால் உங்கள் மனதிற்கு நிம்மதி கிடைக்கின்றதோ, எங்கெல்லாம் ஏற்றினால் வீட்டின் அமைப்பும், அழகும் கூடுமோ அங்கெல்லாம் ஏற்றலாம்.

குறிப்பாக வாசலில், சமையல் அறையில், பூஜை அறையில், கூடத்தில், உங்களால் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ, அத்தனை விளக்குகள் ஏற்றலாம். பூஜையறையில் குத்து விளக்குகளும் அல்லது காமாட்சி, மஹாலஷ்மி விளக்குகளும், மற்ற இடங்களில் அகல் விளக்குகளும் ஏற்றலாம். அதோடு கார்த்திகைத் தீபத்தன்று விரதம் இருந்து, பிரத்தியேகமான நிவேதனமாக அவல்பொரி, நெல்பொரி, வெல்லஅடை, காரவடை முதலிய நிவேதனம் செய்து படைக்கலாம்.

கவலைகளை தூள்தூளாக்கும் கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை மாதத்தின் புண்ணிய தினங்களும் விழாக்களும் நம்முடைய கர்ம வினைகளைத் தொலைத்து, கவலைகளை சிதறடிக்கும். நல்வாழ்வைத் தரும். பொதுவாக, நாம் தினசரி காலையிலும் மாலையிலும் வீட்டில் தீபங்கள் ஏற்றுகின்றோம். அது இருட்டை விலக்கி வெளிச்சத்தைத் தருகிறது. ஆனால், கார்த்திகை மாதம் என்பது தீபத் திருவிழா மாதம் என்பதால், அந்த மாதத்தையே கார்த்திகை தீப மாதம் என்றே அழைக்கின்றோம்.

தாமோதர மாதம்

வைணவ சமயத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெருமாளின் திருநாமத்தோடு இருக்கும். அந்த வகையில் கார்த்திகை மாதம் தாமோதரன் அம்சமாக இருக்கும். இந்த மாதத்தில்தான் கைசிக ஏகாதசி வருகிறது. இம்மாத ஏகாதசியில் தாமோதரனை வழிபட்டு துவாதசி பாரணை செய்தால், வேதத்தில் எத்தனை யாகங்கள் சொல்லப்பட்டு இருக்கிறதோ, அத்தனை யாகங்களும் முடித்த பலன் கிடைக்கும். கார்த்திகை மாத பிறப்பை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று சாஸ்திரத்தில் சொல்லுவார்கள்.

12 மாதங்களை மூன்று பாகமாகப் பிரித்து, நான்கு மாதங்களை விஷ்ணுவுக்கும், நான்கு மாதங்களை சிவபெருமானுக்கும், நான்கு மாதங்களை பிரம்மனுக்கும் சமய மரபு தந்து இருக்கிறது. அந்த அடிப்படையில் கார்த்திகை மாதம் விஷ்ணுவுக்கு உரிய மாதம் என்பதால் மாதப் பிறப்பை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று சொல்வார்கள். மன அமைதி ஏற்பட, குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீர, மோட்சம் பெற, பாவங்கள் தீர தவறவிடாமல் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் விரதம் மேற்கொள்ளலாம்.

இந்த விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் அருளும், மகாலட்சுமியின் அருளும் நிச்சயம் கிடைக்கும். விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் கொடுப்பது மிக சிறந்த பலன்களை அளிக்கும். வயதில் முதிர்ந்த தம்பதிகளுக்கு இந்த நாளில் பாதபூஜை செய்து வழிபடுவது மிக சிறப்பானது. ஆலயங்களில், அரிசி மாவு கோலமிட்டு, அகல் விளக்குகள் ஏற்றுவதும் வாழ்வில் மங்கலங்களை பெருகச் செய்யும்.

சைவத்தில் கார்த்திகை மாதம்

சைவத்திலும் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பு பெற்றது. கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு உரிய நாளாக கருதப்பட்டு கார்த்திகை சோம விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. அன்று பெரும்பாலான சிவாலயங்களில் சங்கு அபிஷேகம் விசேஷமாக நடைபெறும். பல மகான்களும் சித்தர்களும் அவதரித்த இந்த மாதத்தில்தான். திருவண்ணாமலை தீபம் எனும் உலக பிரசித்தி பெற்ற தீபத் திருவிழா நடைபெறுகிறது. 64 நாயன்மார்களில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்கநாயனார், கணம் புல்ல நாயனார், சிறப்புலி நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாம்பாட்டி சித்தர், கோரக்கர் சித்தர் முதலிய சித்தர்களின் குருபூஜை தினங்களும் இந்த கார்த்திகை மாதத்தில் வருகின்றது.

முருகனும் கார்த்திகையும்

கிருத்திகை நட்சத்திரத்திற்கு கார்த்திகை நட்சத்திரம் என்ற பெயர் உண்டு முருகனுக்கு இரண்டு நட்சத்திரங்கள் பிரியமானது. 1. அவன் அவதரித்த விசாக நட்சத்திரம். 2. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் அதாவது அக்னியில் இருந்து தோன்றியதால் சூரியனுக்கு உரிய கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதாலும் கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு உரிய நட்சத்திரமாகும். முருகனுக்கு கார்த்திகேயன் என்று திருநாமம். கார்த்திகை மாதம் என்று குறிப்பிடும் விருச்சிக மாதத்தில்தான் இந்த விசாக நட்சத்திரம் இருக்கிறது என்பதால், முருகனுக்கும் கார்த்திகை மாதம் உரியது. கந்தசஷ்டி விரதமும் சூரசம்ஹாரமும் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வருகிறது.

அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெறலாம்

இந்த தீபங்களின் மூலமாக முதலில் நாம் நம்மை உணர்கிறோம். நாம் இருக்கும் சூழலை உணர்கிறோம். அந்த தீபத்தின் மூலமாக இறைவனையும் உணர்கிறோம். (உணர முயல்கிறோம்). எனவேதான் வழிபாட்டிலே தீபம் ஏற்றுவது என்பது மிக மிகப் பிரதானமாக முதன்மையாக இருக்கிறது. இறைவன் அக்னி பிழம்பாக தன்னை வெளிப்படுத்திய திருக்கார்த்திகை நாளில் எல்லா ஆலயங்களிலும், எல்லா வீடுகளிலும் தீபங்களை ஏற்றி கொண்டாடுகின்றோம்.

கார்த்திகை மாத வீடாகிய விருச்சிகத்தின் ஆறாம் வீடாகிய மேஷவீட்டில் பரணி நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருப்பார். இந்த பரணி நட்சத்திரம் சுக்கிரனுக்குரிய நட்சத்திரம். சுக்கிரனுடைய அனுக்கிரகம் இருந்தால், சாட்சாத் மகாலட்சுமியின் அனுகிரகம் இருக்கும். எனவே, கார்த்திகையில் பரணியில் தீபம் ஏற்றுவதன் மூலமாக அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெறலாம். திருவண்ணாமலையில் தீபம் எந்த நேரத்தில் ஏற்றப்படுகிறதோ, அதை அனுசரித்துத்தான் ஒவ்வொருவர் இல்லத்திலும் திருக்கார்த்திகை விளக்குகளை ஏற்றி, தீபச் சுடராக விளங்குகின்ற சிவபெருமானை வணங்குவார்கள். அப்பொழுதுதான், அவர்கள் கார்த்திகை விரதத்தையும் முடித்துக் கொள்வார்கள்.

பார்வதிக்கு சரிபாதி தந்த தினம் திருக்கார்த்திகை

சிவனுக்கு உமையொருபாகன் என்று பெயர். ‘‘மாமலை மங்கை ஓர் பால் குறியுடையன்’’ என்று அர்த்தநாரீஸ்வரர் திருமேனியைத் தனது திருப்பூந்துருத்தி முதலாம் பதிகத்தில் பாடுகிறார் அப்பர் சுவாமிகள். கைலாயத்தில் ஒருமுறை உமாதேவியார் சிவனின் கண்களை விளையாட்டாக மறைக்க பிரபஞ்சமே இருட்டில் தவித்தது. உயிர்கள் அனைத்தும் துயரத்தில் இருந்தன. அகில மாதாவாகிய தானே இப்படிப்பட்ட தவறு செய்து விட்டோமே என்று உமாதேவி வருந்தினார்.

தான் பாவம் செய்து விட்டதாகக் கருதி அதற்கு பிராயசித்தத்தைத் தேடி காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நோக்கி தவத்தில் இருந்தார். இறைவன் தேவிக்கு காட்சி அளித்தார். உமாதேவியாரை திருவண்ணாமலைக்கு வரும்படியாக அருள்புரிந்தார். உமாதேவியாரும் அண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையில் கௌதம மகரிஷியின் ஆசிரமத்தில் தவம் செய்தார். விருச்சிக மாதம் திருக்கார்த்திகை பௌர்ணமி நாள் அன்று இறைவன் தேவிக்கு காட்சியளித்து இடப்பாகத்தில் ஏற்று அருள் புரிந்தார். அந்த தினமே திருக்கார்த்திகை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை தீப விரதத்தைப் பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். பக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவு உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம், அரை வயிறு எடுத்துக் கொள்ளலாம். கார்த்திகை திருநாளில் அதிகாலை எழுந்து, நீராடி இறைவனை வணங்க வேண்டும். தெய்வத் துதிகளையும், பாமாலைகளையும் ஜபிக்க வேண்டும். காலையில் வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பூஜையறையில் உள்ள தூசுகளையும், அழுக்குகளையும் அகற்றி, பூஜையறையின் விளக்குகளைத் தேய்த்து, அலம்பி வைத்துக் கொள்ளவேண்டும்.

மாலையில், வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலமிட்டு, அகல் விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரிவைத்து விளக்கேற்ற வேண்டும். மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன், நம் பூஜை அறையில் பூஜை முடித்து தீபாராதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால், அன்று அரிசி உணவு உண்ணக்கூடாது. பால், ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம்பருப்பு கஞ்சி, நிவேதனங்கள் சாப்பிடலாம்.

சக்கரவர்த்தி யோகம் தரும் தீபம்

கோயிலில் ஒரு தீபத்தை ஏற்றினாலோ அல்லது அணையும் தீபத்தை தூண்டினாலோ, அது தரும் யோக பலனை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதனால்தான் தோஷ பரிகாரங்களுக்கு விளக்கு போடுவதை பிரதானமாகச் சொல்கிறோம். சுவாமிக்கு முன் விளக்கு ஏற்றினால், நம் வாழ்க்கையின் இருளாகிய கஷ்டம் தீராதா என்று நினைக்கிறோம். ஒருமுறை சிவாலயத்தில் நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.

விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது. தூண்டிவிடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும், அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியானார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

The post பாரெங்கும் ஒளிரும் கார்த்திகை தீபம் appeared first on Dinakaran.

Tags : Karthik Deepam ,Tiruvannamalai Deepam ,Agni ,Kartika Deepam ,
× RELATED அக்னி தீர்த்த கடற்கரையில் புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை