×

தஞ்சாவூரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல்

*உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் அதிரடி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தஞ்சாவூர் அய்யன்கடை தெருவில் உள்ள ஒரு பட்டாணி கடை, வடக்கு வீதியில் உள்ள ஒரு மளிகை கடை, காமராஜர் மார்க்கெட்டில் உள்ள ஒரு மிட்டாய் கடை என 3 கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இருப்பினும் தொடர்ந்து அந்த மூன்று கடைகளிலும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசாருடன் அய்யன் கடை தெருவுக்கு சென்றனர். அங்கு சம்பந்தப்பட்ட பட்டாணி கடைக்கு சென்று அதன் உரிமையாளரான மீனாட்சி என்பவரிடம் நோட்டீஸ் வழங்கி தொடர்ந்து குட்கா பொருள் விற்றதால் உங்கள் கடையை பூட்டி சீல் வைக்கிறோம் எனக் கூறினர். இதையடுத்து பொருட்கள் அனைத்தும் உள்ளே வைக்கப்பட்டு கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் வணிகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினர்.

தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டிற்கு சென்று மணிகண்டன் என்பவரின் மிட்டாய் கடையையும், வடக்கு வீதியில் உள்ள பஞ்சாபிகேசன் என்பவரின் மளிகை கடையையும் குட்கா விற்றதால் பூட்டி சீல் வைத்தனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று தஞ்சாவூரில் தொடர்ந்து குட்கா விற்பனை செய்த மூன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 7 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குட்கா விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் வணிகம் செய்ய தகுதியற்றது என முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.தஞ்சாவூரில் குட்கா விற்றதாக அடுத்தடுத்து மூன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தஞ்சாவூரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Thanjavur ,Food Safety Department ,Tamil Nadu government ,Thanjavur district ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...