×

திருவாரூரில் ரூ.78கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் ஆய்வு உரிய காலத்திற்குள் முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து

*அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை

திருவாரூர் : திருவாரூர் நகரில் ரூ.78 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஓப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வேறு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை விடுத்தார்.திருவாரூர் நகராட்சி பகுதியின் குடிநீர் விநியோகத்திற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற இடத்தில் ஓடம்போக்கி ஆற்று கரையில் மிகப்பெரிய போர்வெல் அமைக்கப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் திருவாரூர் மடப்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதன்பின்னர் கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த மறைந்த கோ.சி.மணி மூலம் கொள்ளிடம் -வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் திருவாரூர் நகருக்கு வழங்கப்பட்ட குடிநீருக்காக சந்தைபேட்டை பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மட்டுமின்றி தென்றல் நகர் மற்றும் கிடாரங்கொண்டான் என 4 இடங்களில் இருந்து வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் நகர் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குடிநீர் பற்றாகுறையாக தான் இருந்து வருகிறது.

மேலும் குடிநீர் குழாயானது அமைக்கப்பட்டு நீண்ட காலமாகி விட்டதால் பல்வேறு இடங்களில் சேதமடைந்து அதன்மூலம் குடிநீர் வீணாகியும் வருவதை கருத்தில் கொண்டும், அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான அளவில் குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிபடையின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் அம்ரூட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் தற்போது ரூ 78 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நகர் முழுவதும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை மேற்கொள்வதற்கான 18 மாத காலக்கெடுவில் 10 மாதம் முடிந்துவிட்ட நிலையில் நகர் முழுவதும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டிய 15 ஆயிரத்து 965 வீடுகளில் இதுவரையில் வெறும் 404 வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் டிஆர்பி ராஜா டெண்டர் பணியினை முடிப்பதற்கு 8 மாத காலமே எஞ்சியுள்ள நிலையில் 3 சதவிகித பணிகள் கூட முடிக்கப்படவில்லை. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இது போன்று பணிகள் நடைபெற்றால் எப்போது பணிகளை முடிப்பது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை முடிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஓப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வேறு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என ஓப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் திட்ட மேலாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வின் போது கலெக்டர் சாரு, எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, ஆர்.டி.ஒ சங்கீதா, தாசில்தார் நக்கீரன், நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், துணை தலைவர் அகிலாசந்திரசேகர், கமிஷனர் மல்லிகா, பொறியாளர் அய்யப்பன், கவுன்சிலர்கள் பிரகாஷ் மற்றும் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாரூரில் ரூ.78கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் ஆய்வு உரிய காலத்திற்குள் முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Minister ,TRP Raja ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி...