×

ஊட்டியில் மழை எதிரொலி பயணிகள் கூட்டம் குறைந்தது; வெறிச்சோடிய சுற்றுலா தலம்

ஊட்டி : மழையின் காரணமாக வழக்கத்தை விட தாவரவியல் பூங்கா, மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.

அதேசமயம் மழை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை சுற்று குறைந்து காணப்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. மேலும், சில இடங்களில் பாறைகள் விழும் நிலையிலும், மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், மழை ஓயும் வரை நீலகிரி மாவட்டத்திற்கு இவ்விரு வழித்தடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. குறிப்பாக, இரவு நேரங்களில் வருவதை தவிர்க்குமாக கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. அதேபோல், ஊட்டி மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைந்தே காணப்பட்டது.

The post ஊட்டியில் மழை எதிரொலி பயணிகள் கூட்டம் குறைந்தது; வெறிச்சோடிய சுற்றுலா தலம் appeared first on Dinakaran.

Tags : BOTANICAL PARK ,Dinakaran ,
× RELATED தடிப்புச்சொறி தவிர்ப்போம்!