×

ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் திருநள்ளாறு சனிபகவான் கோயில் மேம்பாட்டு பணிகள்

 

காரைக்கால்,நவ.25: ஒன்றிய அரசின் புனித யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மிக வளர்ச்சி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகம் மற்றும் காரைக்காலில் உள்ள நவகிரக கோயில்கள் மேம்படுத்துவது, ஆன்மிகத்தை மேம்படுத்துவது தொடர்பாக புதுடெல்லியில் இருந்து ஒன்றிய சுற்றுலா துறை துணைச் செயலர் ஆர்.ஆர்.வர்மா தலைமையில் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இதில் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் கோயிலுக்கு தலங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வந்தனர்.

ஆலயத்தின் அருகே அமைந்துள்ள ஆன்மிக பூங்கா, புனித தீர்த்தமான நளன்குளத்தை மேம்படுத்துவது, கோயில் நுழைவு பகுதியில் சிமென்ட் கூரை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை தொடர்வது தொடர்பாக ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒன்றிய சுற்றுலா துணைச் செயலர் ஆர்.ஆர்.வர்மா, திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகரன், நிர்வாக பொறியாளர் சிதம்பரநாதன், கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், சுற்றுலாத்துறை மேலாளர் ராஜவேலு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் திருநள்ளாறு சனிபகவான் கோயில் மேம்பாட்டு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Tirunallaru Sani Bhagavan Temple development ,Union Government ,Karaikal ,Pilgrimage Rejuvenation and Spiritual Development Movement ,Tamil Nadu ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...