×

ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்

 

திருப்பூர், நவ.25: திருப்பூரில், ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரதம் துவக்கி வைக்கப்பட்டது. ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த அரசால் இரு வார விழிப்புணர்வு விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்ட குடும்பநலச்செயலகம் சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின் பேரில், விழிப்புணர்வு ரதம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் துவக்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு ரதம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வலம் வரும். இதுகுறித்த விளம்பர கையேடுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் குடும்ப நலம் துணை இயக்குநர் (பொறுப்பு) சரவணபிரகாஷ், மாவட்ட குடும்ப நலத்துறையை சேர்ந்த மக்கள் கல்வி தொடர்பு அலுவலர் கிருஷ்ணகுமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ராணி, புள்ளிவிபர உதவியாளர் பிரபாகர் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது விளக்க கையேடு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இருவார விழாவினை முன்னிட்டு, ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் டிசம்பர் 4ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. குடும்பநல அறுவை சிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகை ரூ.1,100, மாவட்ட கலெக்டரின் சிறப்பு ஊக்கத்தொகை ரூ1,000 மற்றும் திருப்பூர் ரேணுகா டெக்ஸ்டைல் வழங்கும் அன்பளிப்பு ரூ.1,000 என மொத்தம் ரூ.3,100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரதம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்