×

சுகம் தரும் சுகப்பிரசவம்

நன்றி குங்குமம் தோழி

‘சுகப்பிரசவம் ஆச்சுனா, அன்னிக்கே எழுந்து உக்காரலாம்’ என்று நந்தினியின் தாய் சுகப்பிரசவம் பற்றி கூறியதால், நந்தினி என்னிடம் உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்ள வந்திருந்தார். அவருக்கு சுகப்பிரசவம் சார்ந்த அறிவுரைகளையும், உடற்பயிற்சிகளையும் பரிந்துரைத்து கற்றுக் கொடுத்தேன். இப்போது அவர் நலமாக தினமும் உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். இப்படி நந்தினி மட்டுமல்ல… அவரைப் போன்ற பல பெண்கள் நம்மிடையே மீண்டும் சுகப்பிரசவத்தை விரும்பி அதற்கான முன் ஏற்பாடுகளாக உடற்பயிற்சிகள் செய்வதை விரும்புவதால் இந்தக் கட்டுரை எல்லாப் பெண்களுக்கும் உபயோகமாகவும், விழிப்புணர்வாகவும் இருக்கக்கூடும்.

சுகப்பிரசவம்…

சுகப்பிரசவம் என்பது இயற்கையான நிகழ்வு. எப்படி சிறுநீர், மலத்தை உடம்பு ஒருகட்டதிற்கு மேல் வெளியேற்றுகிறதோ, அதைப்போலவே பத்து மாதம் முடிந்ததும் குழந்தையை தாயின் உடல் தானாகவே வெளியேற்றும். சிறுநீர் மற்றும் மலம் சரிவர வெளியேற எப்படி உணவு, வாழ்வியல் சூழல், தூக்கம், வேறு உடல் நலக் குறைபாடுகள் எனப் பல காரணங்கள் இருக்கிறதோ, அதனைப் போலவே சுகப்பிரசவத்திற்கும் சில காரணங்கள் உள்ளதால், சுகப்பிரசவம் நிகழவில்லையெனில் அறுவை சிகிச்சை செய்கின்றனர்.

காரணங்களும் காரணிகளும்…

* குழந்தையின் தலை தாயின் இடுப்புக் கூட்டில் வந்து இறுக இணைந்திருக்க வேண்டும். தலை திரும்பாமல் மேலே இருந்தாலும் சுகப்பிரசவத்திற்கான வலி வரலாம். ஆனால், குழந்தை தலையே முதலில் வெளியே வர வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது.

* கருப்பையில் உரிய நேரத்தில் வலி ஏற்பட்டு சுருங்கி விரிந்துகொடுக்க வேண்டும்.

* கருப்பையின் நீண்ட வாய் (Cervix) உரிய நேரத்தில் சுருங்கி குழந்தை எளிதில் வெளியே வர உதவியாய் இருக்க வேண்டும்.

* கருப்பை வாய் சுருங்குவதுடன் பத்து சென்டி மீட்டர் திறக்க வேண்டும். உரிய நேரத்தில் 10 செ.மீ திறந்திருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர இயலும்.

* குழந்தையின் கழுத்தை தொப்புள்கொடி சுற்றி இருத்தல் கூடாது. ஏனெனில் குழந்தை வெளியே வரும்போது மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது.

* வலி வரும்போது போதுமான ஆற்றல் தாய்க்கு இருக்கவேண்டும். சில பெண்களுக்கு ஒரு மணி நேரத்தில் சுகப்பிரசவம் ஆகலாம். சில பெண்களுக்கு இரண்டு நாட்கள் கூட ஆகலாம் என்பதால் பலம் அவசியம் தேவை.

இயன்முறை மருத்துவம்…

* கருத்தரித்ததும் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி ஆரம்பம் முதலே உடற்பயிற்சிகள் செய்து வரலாம். அப்படி செய்ய தவறியவர்கள் ஏழாம் மாதம் தொடங்கியதிலிருந்து உடற்பயிற்சிகள் செய்யலாம்.

* ஒருவர் எவ்வகையான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், எவ்வளவு முறை செய்யவேண்டும் என யாவற்றையும் பரிசோதனை செய்து உடற்பயிற்சிகளை இயன்முறை மருத்துவர் பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர்.

* இடுப்பு மற்றும் கால் பகுதி தசைகள் வலிமை பெறுவதற்கான பயிற்சிகளை வழங்குவர்.

* முதுகு வலி, கால் வலி வராமல் இருக்க தசைகள் இறுக்கமாக இல்லாமல் இலகுவாக்க உடற்பயிற்சிகள் வழங்குவர்.

* இதய நுரையீரலின் தாங்கும் ஆற்றல் (Endurance) அதிகமாய் இருக்கவும் உடற்பயிற்சிகள் வழங்குவர். எனவே, எத்தனை மணிநேரம் வலி இருந்தாலும் தாங்கிக் கொண்டு குழந்தை வெளியே வர ஒத்துழைக்க முடியும்.

* தேவையான மூச்சுப் பயிற்சிகளை கற்றுக்கொடுப்பர். ஏனெனில், வலி வரும்போது பதட்டத்தில் வேகமாக மூச்சு விடுவதால் குழந்தைக்கு சீரான பிராண வாயு கிடைக்காது. மேலும் தாய்க்கும் உயர் ரத்த அழுத்தம் வரலாம் என்பதால் மூச்சுப் பயிற்சிகள் இன்றியமையாதது.

* இவை இல்லாமல் வலி வந்த பின் எவ்வகை உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், எப்படி சூழலைக் கையாள்வது போன்ற அறிவுரைகளையும் வழங்குவர்.

மகப்பேறு நிபுணர்கள்…

சமீபகாலமாக கருத்தரிக்க, பேறுகால உடற்பயிற்சிகள் கற்றுக்கொடுக்க என நிபுணர்கள் பலர் சமூக ஊடகங்களில் வலம் வருகிறார்கள். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில்தான் பயின்று நிபுணர்கள் ஆனார்களா என்பதனை நாம் உறுதி செய்யவேண்டும். மேலும், இயன்முறை மருத்துவம் நான்கு ஆண்டு படிப்பு மற்றும் ஆறு மாத பயிற்சிக் காலம் கொண்ட பட்டப் படிப்பு என்பதால், மேலே சொன்னவாறு மூன்று மாதம், ஆறு மாதப் படிப்பு என முடித்துவிட்டால் நிபுணர்கள் என முழுவதுமாக சொல்ல முடியாது. எனவே, அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி உரிய வகையில் உடல் தசைகளை பரிசோதனை செய்து அதற்கு ஏற்றவாறு பரிந்துரைத்து கற்றுக்கொடுக்கும் உடற்பயிற்சிகளை செய்து வந்தால் முழுப்பலன் கிடைக்கும்.

வீட்டில் செய்ய வேண்டியவை…

உடற்பயிற்சிகள் செய்ய விரும்பாதவர்களுக்கும் சுகப்பிரசவம் நடக்க வேண்டும் எனத் தோன்றும் அல்லவா. அவர்களுக்கான டிப்ஸ் இதோ…

* நாற்காலி பயன்படுத்தாமல் தரையில் அமர்ந்து எழுவது.

* குத்துகால் வைத்து உட்கார்ந்து (இந்திய முறை கழிவறையில் உட்காருவது போல) துணிகளை துவைப்பது.

* தினமும் நடைப்பயிற்சி, நடனம், நீச்சல் குளத்தில் நடப்பது, மாடிப் படிகள் ஏறி இறங்குவது என ஏதேனும் ஒன்றை நாற்பது நிமிடங்கள் செய்ய வேண்டும்.

* மற்ற வாழ்வியல் மாற்றங்களாக கடைக்கு செல்லும்போது நடந்து செல்வது, காய்கள் நறுக்குவதற்கு கீழே அமர்வது, குத்துகால் வைத்து கோலம் போடுவது என நம் முன்னோர்கள் எவ்வழியை கடைபிடித்தனரோ அவ்வாறு நாமும் செய்யலாம்.

* ஆனால், எப்போதும் ஏதேனும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை. இடையிடையில் போதிய ஓய்வும் அவசியம்.

பலன்கள்…

* சுகப்பிரசவத்தின் போது எத்தனை மணி நேரமானாலும் வலியினை பொருத்துக்கொண்டு குழந்தை வெளி வரும் வரை முயற்சி செய்ய முடியும்.

* தசைகள், ஜவ்வுகள், இடுப்பு எலும்பு என எல்லாம் இலகுவாக விரிந்து கொடுக்க வசதியாக உடற்பயிற்சிகள் உதவும்.

* உடற்பயிற்சிகள் மனதளவில் நம்பிக்கை கொடுப்பதால் பதட்டம் இல்லாமல் இயல்பாய் இருக்க உதவும். இதனால் முதலில் சொன்னது போல இயற்கையான நிகழ்வாய் குழந்தை இயல்பாய் வெளியே வரும்.

* கர்ப்பக் காலம் முதலே உடற்பயிற்சி செய்வதால் பிரசவத்தின் போது கருப்பையை தாங்கி நிற்கும் திசுப்படலம் (perineum) வலுவாக இருக்கும். எனவே, பிரசவத்தின் போது அதிக பாதிப்பு இந்தப் படலத்திற்கு ஏற்படாது. இதனால் குழந்தை பிறந்த பின் எளிதில் சிறுநீர், மலம் கழிக்க முடியும். மேலும், ஹெரன்யா (Hernia) போன்ற பாதிப்புகளும் பிற்காலத்தில் வராது.

கட்டுக்கதைகள்…

* உடற்பயிற்சி செய்வதால் மட்டும் சுகப்பிரசவம் நிகழாது. மேலே சொன்ன காரணங்களும், காரணிகளும் இருக்கும் என்பதால், நூறு சதவிகிதம் உடற்பயிற்சியை மட்டுமே நம்பி இருத்தல் வேண்டாம். ஆனால், இந்த உடற்பயிற்சிகள் அறுவை சிகிச்சை செய்த பின்மும் உதவும் என்பதால், அனைத்து கர்ப்பிணிகளும் செய்வது நல்லது.

* தலை திரும்பிவிட்டால் உடனே சுகப்பிரசவம் நிகழ்ந்துவிடும் என்பது இல்லை. கருப்பை வாய் திறக்க வேண்டும், வலி ஏற்பட்டு கருப்பை சுருங்கி விரிய வேண்டும், தாயின் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு எல்லாம் சீராய் இருக்க வேண்டும். மேலும், குழந்தையின் இதயத் துடிப்பும் எவ்வித இடையூறும் இன்றி சீராய் இருத்தல் அவசியம் என்பதால், தலை திரும்பி இருக்கும் பெண்களுக்கும் கடைசி நேரத்தில் அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுக்க இதுவே காரணங்கள்.

மொத்தத்தில் பாசிட்டிவாக பயம், பதட்டம் எதுவும் இல்லாமல், ஆரம்பம் முதலே உடற்பயிற்சிகள் செய்து வந்தால் போதும், குழந்தை இயல்பாய் இயற்கையாகவே சுகப்பிரசவத்தினால் பிறக்க 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது என்பதை நாம் மனத்தில் பதிய வைத்துக்கொண்டு ஆரோக்கியமான மழலையினை பெற்றெடுக்கலாம்.

The post சுகம் தரும் சுகப்பிரசவம் appeared first on Dinakaran.

Tags : kungumum ,Nandini ,Dinakaran ,
× RELATED அறிந்த தலம் அரிய தகவல்கள்