×
Saravana Stores

மூளையின் முடிச்சுகள் எண்ணங்களின் வெளிப்பாடு

நன்றி குங்குமம் தோழி

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

எண்ணம் போல் வாழ்க்கை என்ற புத்தரின் பொன்மொழிகளிலிருந்து நாம் எண்ணங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும். மனதின் முக்கியமான வேலைகளில் ஒன்று தொடர்ந்து எண்ணங்களை உருவாக்குவதாகும். இந்த எண்ணங்கள் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது எண்ணங்கள் உணர்வுகளாக கடத்தப்படுகின்றது. அந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது அது செயலாக மாறுகின்றது. எனவே நம் மனதின் செயல்பாடுகளை தீர்மானிப்பது இந்த எண்ணங்களேயாகும்.இந்த எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றது என்பதையும் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் எண்ணங்கள் என்பது நமது அனுபவத்திலிருந்து, பார்த்தது, கேட்டது மற்றும் படித்தது போன்றவற்றில் இருந்து தோன்றலாம்.

இத்துடன் மட்டுமில்லாமல், சில எண்ணங்கள் நமது கட்டுப்பாட்டையும் மீறி ஏற்படுகின்றது என்பதே உண்மையான விஷயமாகும். அவ்வாறு ஏற்படும் எண்ணங்களுக்கு, உதாரணங்களாக சந்தேக எண்ணங்களை கூறலாம். ஒவ்வொரு எண்ணங்களும் மிக மிக முக்கியமானது என்று உளவியலில் சொல்லப்படுகிறது. எண்ணங்களை உருவாக்கும் மூளைக்குள் சிறு உரசல்கள் நடந்தாலும் போதும், ஒட்டு மொத்த ஆழ்மனமும் விழித்துக் கொண்டு, மேல்நோக்கி வந்து விடும்.

மனம் மேல்நோக்கி வந்தால் என்னாகும்? கடலின் அடித்தளத்தில் பூகம்பம் ஏற்பட்டு, சுனாமி வருவது போல், ஒரு தடவை வருவதும், அடிக்கடி கடல் உள்வாங்குவதும் போல் மனிதர்கள் மாறி விடுவார்கள். அந்த மனிதர்களின் மனதுக்குள் இருந்து எழுப்பப்படும் எண்ணங்களுக்கு சமூகத்தாலும் சரி, நெருங்கிய உறவுகளாலும் சரி பதில் சொல்ல ஒரு ஜென்மம் பத்தாது என்பதே சவாலான உண்மையாகும்.

உண்மையில் ஆழ்மன எண்ணங்களின் பாதிப்பு என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு, உதாரணமாக ஒரு விஷயத்தை நாம் எடுத்துக் கொள்வோம். மனிதனின் மூளைக்குள் டோபமைன் போன்ற நரம்புக் கடத்திகள் அதிகமாக சுரக்கும் போது, அசாதாரணமான சிந்தனைகள் தொடங்கி எல்லாவற்றையும் சந்தேகிக்கும் குணமும் ஏற்படும். பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்குள், அதுவும் அந்யோன்யமான கணவன்/மனைவி இருவரில் யாரோ ஒருவருக்கு இந்த சந்தேகம் சார்ந்த பிரச்னை என்பது பொதுப் பிரச்னையாக மாறியுள்ளது.

அதனால் இங்கு குடும்ப வன்முறை பற்றி பலரும் அவரவர் துறையிலிருந்து தொடர்ந்து, விழிப்புணர்வு செய்து கொண்டிருக்கிறோம். இதில் பொதுவாக சமூகத்தாலும், நமக்கு கொடுக்கப்பட்ட விழிப்புணர்வுகளாலும், தொடர்ந்து சொல்லப்பட்ட செய்தி என்னவென்றால், நெருங்கிய உறவுகளால்தான், குடும்ப வன்முறை நடக்கிறது என்கிறோம். அது உண்மையும் கூட. அதை மறுக்கவுமில்லை. ஆனால் அந்த உண்மைக்குள் மறுபக்கம் ஒன்று மனநல மருத்துவத்துறையில் உள்ளது. அதுவும் மிக முக்கியமானதாக பேசப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன்.

உதாரணத்திற்கு சத்தம் போடாதே படத்தில், நிதின் சத்யா அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் எடுத்திருப்பதால், அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு, உடலைக் கெடுத்து வைத்திருப்பார். ஆனால், நிதின் சத்யாவோ அதற்கு எதிர்மாறாக, பத்மப் பிரியாவிடம் அதீத சந்தேக உணர்வும் கொண்டு அடிப்பது, அடுத்த நொடியே காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது என்று மாறி மாறி செயல்களை தொடர்ந்து செய்வார். அதனால் எது உண்மையான பிரச்னை என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் ஒட்டு மொத்தக் குடும்பமும் குழம்பிப் போவார்கள். படமென்பதால், எளிதாக அடுத்த சீனில் பிரித்திவிராஜை வைத்து நகர்த்தி விட்டார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான சந்தேக குணத்துடனும், அதே நேரத்தில் செய்தது தவறென்று காலில் விழுவதும் மாறி மாறி நடக்கும் போது, சாதாரண மனிதர்கள் குழம்பித்தான் போவார்கள்.

மூளைக்குள் நடக்கும் கெமிக்கலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேக எண்ணங்களின் உச்சக்கட்டமாக, தங்களின் பெற்றோர் அல்லது தங்களுக்கு நெருங்கிய உறவுகளே தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று கூறுவார்கள். உதாரணமாக, தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என்றும், நெருங்கிய உறவுகளே தன்னைத் தவறாக சித்தரித்து பேசுகின்றனர் என்றும் கூறுவார்கள். ஏற்கனவே நமக்கு கற்பிக்கப்பட்ட வாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மனநலத் துறைக்குள் வரும் போது, இங்கு யார் குற்றவாளிகள் என்று யூகிக்க நமக்கும் குறைந்தபட்சம் மனநோயின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகத் தேவைப்படுகிறது.

இங்கு நாம் கட்டமைக்கப்பட்ட கருத்துகளிலிருந்து மாறுபட்டு, மனநலத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் சேர்ந்து தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் மனநலத்தால் பாதிக்கப்பட்ட நபருக்குள் ஏற்படும் எண்ணங்களின் மாற்றத்தால் அவர்கள் சொல்வதை முழுவதும் உண்மை என்று நம்பி, அவர்கள் கூட அவர்களுடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை இன்னும் நாம் காயப்படுத்தாமல் இருக்க வேண்டியது நம் கடமையென்று அடிப்படையாக நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஏனென்றால், இன்றைக்கு டிவி, செய்தித்தாள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் மனநலம் பற்றி பேசுகிறார்கள். அனைவரும் கூறுவது அடிப்படையான விஷயமென்றால், அதீத கவலை என்றால், கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். அதனால் பாதிக்கப்பட்ட நபரை விட, குடும்பத்தில் கூட இருக்கும் நபர்கள்தான், கவுன்சிலிங் வேண்டுமென்று வருகின்றனர். வேரை சரிப்படுத்தாமல், கிளையை மட்டும் சரி செய்வது சரியாகுமா? அதனால் ஒரு நபருக்கு கவுன்சிலிங் வேண்டுமென்றால், அதற்கு பின்னால் இருக்கும் மற்றவர்களுக்கும் முறையான ஆலோசனை கொடுக்க வேண்டும்.

The post மூளையின் முடிச்சுகள் எண்ணங்களின் வெளிப்பாடு appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi Gayatri Mahathi ,Buddha ,
× RELATED குளத்தூரில் முப்பெரும்விழா