×

மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு

சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினமானது, ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம்
நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளினால் சிறப்புக் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை மேம்படுவதுடன், அவர்களின் சமூக ஒருங்கிணைப்பும் வலுப்பெறும்.

அவ்வகையில், இன்று (24.11.2023) திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 18 மாணவர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் திருச்சிராப்பள்ளியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு, அவர்களுக்கு சிறப்பானதொரு பயண அனுபவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் பார்வை, செவி மற்றும் அறிவுசார் மாற்றுத்திறன் மாணவர்கள் 189 நபர்கள் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் அனுபவத்தினை பெறும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உதவியுடன் 27.11.2023 அன்று காலை 11.30 மணியளவில் எழும்பூர் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையம் வரை சென்று மீண்டும் திரும்பும் வகையில் பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 27.11.2023 அன்று மாலை 3.30 மணியளவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மேற்காணும் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான அனுபவமளிக்கும் வகையில் இராயப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் திரையரங்கில் திரைப்படக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்ட சிறப்பு பள்ளிகளில் பயிலும் 58 மாற்றுத்திறன் மாணவர்கள் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சுற்றுலா தலமான மகாபலிபுரம் சுற்றுலா தலத்தினை “புதிய வால்வோ சிறப்பு பேருந்தில்” பயணித்து, கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியினை 29.11.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைப்பார்கள். இத்தகைய பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் வாயிலாக, சிறப்பு குழந்தைகள் மிகவும் தன்னம்பிக்கை பெற்று உற்சாகமடைவதுடன். அவர்களது சமவாய்ப்பு மற்றும் சமூகத்துடனான முழுபங்கேற்பு ஆகியவை உறுதி செய்யப்படும்.

இந்நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் சத்தியம் திரையரங்கம் ஆகிய அமைப்புகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

The post மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,World Day of Persons with Disabilities ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED மலேசியாவில் வெல்டர், கட்டிட பணிக்கு...