×

உளவு பார்த்ததாக கூறப்படும் புகாரில் கைதான 8 கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை: இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்றது கத்தார் அரசு.!

டெல்லி: கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் இருந்து வந்த 8 இந்தியர்கள் வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறப்படும் புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது. உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தாரின் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ள கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. விரிவான தீர்ப்பு கிடைத்ததும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறோம். இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், தூதரக உதவி மற்றும் சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்றும் 8 பேருக்கு விதித்துள்ள மரண தண்டனை தொடர்பாக கத்தார் அரசுடன் பேச இருப்பதாகவும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 8 கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் அரசு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் கடந்த மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேல்முறையீட்டை ஆராய்ந்த பின்னர், கத்தார் நீதிமன்றம் விசாரணை தேதியை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 8 பேரும் ஆகஸ்ட் 2022ல் உளவு பார்த்ததற்காக கத்தாரின் உளவுத்துறை நிறுவனத்தால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. இவர்களது ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான தீர்ப்பை கத்தாரில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது.

கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை வீரர்கள் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்த் மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் ஆவார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் அனைவரும் இந்திய கடற்படையில் 20 ஆண்டுகள் வரை சிறப்பான சேவை செய்து சாதனை படைத்தவர்கள் மற்றும் படையில் பயிற்றுனர்கள் உட்பட முக்கிய பதவிகளை வகித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பெருக்கும் தூதரக அணுகல் வழங்கப்பட்டு, இந்திய அதிகாரிகள் அவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

The post உளவு பார்த்ததாக கூறப்படும் புகாரில் கைதான 8 கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை: இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்றது கத்தார் அரசு.! appeared first on Dinakaran.

Tags : Marines ,Qatar government ,India ,Delhi ,Indians ,Qatar ,Dinakaran ,
× RELATED போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல கடும்...