×

மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே பட்டப்பகலில் கைவரிசை

வந்தவாசி, நவ.24: வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் மின் ஊழியர் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(30). மாம்பட்டு துணை மின் நிலையத்தில் லைன் மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்ய பிரியா(25). இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில், ஏழுமலை வீடு மீச நல்லூர் கிராமம் செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே தனியாக உள்ளது. சத்யபிரியா வந்தவாசியில் உள்ள தனியார் தட்டச்சு பயிற்சி மையத்தில் தினந்தோறும் பயிற்சிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 9 மணி அளவில் ஏழுமலை மாம்பட்டு மின் நிலையத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். சத்யபிரியா காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டிக்கொண்டு வந்தவாசியில் உள்ள தட்டச்சு பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு மீண்டும் 11.30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து நான்கரை சவரன் தங்க நகை, ₹2500 ரொக்க பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக சத்யபிரியா ஏழுமலைக்கு தகவல் கொடுத்தார். ஏழுமலை விரைந்து வந்து பார்த்த பின்னர் தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரேகாமதி, குற்றப்பிரிவு ஏட்டுகள் முருகன், அயாத், வெங்கடேசன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகே பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டதில் தெள்ளார் பகுதியில் இருந்து வந்த நபர் திருடிவிட்டு மீண்டும் தெள்ளார் நோக்கி பைக்கில் செல்வது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக தெள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே பட்டப்பகலில் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Nadukkuppam ,
× RELATED சுகாதாரமற்ற சூழலில் காய்கறி விற்பனை