×

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கோரிக்கை ஆரணி நகராட்சியில்

ஆரணி, நவ.24: ஆரணி நகராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் வதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆரணி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்நிலையில், நகராட்சியில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்களின் கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்து வளர்க்காமல், சாலைகளில் அவிழ்த்து விடுகின்றனர். இதனால், ஏராளமான கால்நடைகள் பகல், இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது. இதனால், ஆரணி சுற்றுவட்டார கிராமங்கள், வெளியூர்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக நகரத்திற்கு வாகனங்களில் வந்து செல்வோர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதில், குறிப்பாக ஆரணி டவுன், புதிய, பழைய பஸ்நிலையம், ஆரணி- வேலூர் சாலை, நகராட்சி செல்லும் சாலை, எம்ஜிஆர் சிலை, காந்திசாலை, சத்தியமூர்த்திசாலை, அண்ணாசிலை, ஷராப்பஜார், தச்சூர் செல்லும் சாலை, கோட்டை மைதானம், அரசு மருத்துவமனை, விஏகே நகர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. அதேபோல் சாலைகளின் நடுவில் நின்றும், படுத்துக்கொள்வதாலும், சாலையில் குறுக்கும் நெடுக்கும் செல்வதாலும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகளை முட்டிதள்ளி விடுவதால், ரத்தகாயங்களுடன் விழுந்து எழுந்து செல்கின்றனர். மேலும், சில சமயங்களில் சாலையின் நடுவில் மாடுகள் கூட்டமாக நீண்ட நேரம் நின்றுவிடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலைகளில் மாடுகளால் அவ்வபோது விபத்துகளும் ஏற்படுகிறது.

இதனால் பலர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்தும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, மாடுகளை கோசாலைகளில் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கோரிக்கை ஆரணி நகராட்சியில் appeared first on Dinakaran.

Tags : Arani Municipality ,Arani ,Municipality ,Dinakaran ,
× RELATED குளோரினேஷன் செய்து சுத்தமான குடிநீர்...