×

நடிகை நமீதா, அவரது கணவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு சின்னம் தவறாக பயன்படுத்திய இரண்டு பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலத்தில் நடிகை நமீதா, அவரது கணவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிறுகுறு தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் என்ற அமைப்பின் கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் பாஜவைச் சேர்ந்த நடிகை நமீதா, தனது கணவர் சவுத்ரியுடன் கலந்துகொண்டார். இந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமனும், தேசிய செயலாளரான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த துஷ்யந்த் யாதவும் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பதவி தருவதாக கூறி ரூ.41 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக சேலத்தை சேர்ந்த கோபால்சாமி புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, காவல்துறை மிகைப்படுத்தி காட்டி வழக்கு பதிவு செய்துள்ளது. பணம் வாங்கிய புகாரில் பணத்தை திருப்பி கொடுத்ததால் சமரசம் ஏற்பட்டு உள்ளது என்றார். காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அறக்கட்டளைக்கு ஒன்றிய மாநில அரசுகளுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அதுபோன்ற பெயரை கொண்ட அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் என கூறி, பிரதமரின் புகைப்படம், அரசின் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளதால், அரசின் முக்கிய பிரமுகர் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளதாக சுட்டிக்காட்டி, ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஒன்றிய மாநில அரசுகளின் எந்த அங்கீகாரமும் இல்லாத ஒரு அமைப்பு, அரசின் சின்னங்களை பயன்படுத்துவதும், பதவிக்காக பணம் பெறுவதும், விஐபி அல்லது உயர் பதவியில் உள்ளவர் போல தோற்றத்தை உருவாக்குவதும் அவமானகரமானது என குறிப்பிட்டுள்ளார். மகளின் திருமணத்திற்காக இடைக்கால ஜாமீன் பெற்ற முத்துராமன், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சமரசம் செய்துள்ளதை சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தார். பின்னர் இருவரின் ஜாமீன் மனுக்க ளை தள்ளுபடி செய்தார்.

 

The post நடிகை நமீதா, அவரது கணவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு சின்னம் தவறாக பயன்படுத்திய இரண்டு பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nameetha ,Chennai ,Nameeta ,Salem ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...