×

தண்டலம் ஊராட்சியில் 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலைபணி

திருப்போரூர்: தண்டலம் ஊராட்சியில் 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை, விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் மேட்டு தண்டலம் பிரதான சாலை மற்றும் தண்டலம் கிராம பிரதான சாலை ஆகியவற்றை புதியதாக அமைக்க ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்சாலை பணிக்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.1 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி இச்சாலை பணிகள் தொடங்கப்பட்டது.

ஏற்கனவே இருந்த பழைய சேதமடைந்த தார் சாலை அகற்றப்பட்டு, புதிய மண் கொட்டி சமப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பெரிய அளவிலான ஜல்லிகள் மற்றும் சிமென்ட் கலந்த ஜல்லிகள் கொட்டி இரண்டாம் நிலைப்படுத்தும் பணி நிறைவடைந்தது. ஆனால், 4 மாதங்களை கடந்தும், இதுவரை சாலைப்பணி முழுமை அடையவில்லை. இதுகுறித்து சாலை பணியினை மேற்கொண்டு வருவோர் கூறுகையில், ‘ஏற்கனவே இருந்த சாலையை விட தற்போது சாலை அகலப்படுத்தி அமைக்கப்படுவதால், 16 இடங்களில் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்து வாரியத்தின் சார்பில் மின்கம்பங்களை இடமாற்றம் செய்வதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதிப்பீடு தயாரித்து வந்த பிறகு அதற்கான தொகையை தண்டலம் ஊராட்சி செலுத்திய பின்னர்தான் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்ய முடியும்’ என்றனர்.  இதனிடையே, இந்த பணிகள் எப்போது முடியுமோ, சாலைப்பணி எப்போது முடியுமோ என்ற புலம்பலுடன் பொதுமக்கள் போடப்படாத அரைகுறை சாலையிலேயே பயணித்து வருகின்றனர். விரைவில் இச்சாலைப்பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என்பதே தண்டலம் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post தண்டலம் ஊராட்சியில் 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலைபணி appeared first on Dinakaran.

Tags : Thandalam Panchayat ,Tirupporur ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்...