திருப்பூர்: ‘ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாலைக்கண் நோய் என்பதால்தான் தமிழகத்தில் தீண்டாமை அதிகம் என்று கூறுகிறார்’ என கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்து உள்ளார். திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒன்றிய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூரில் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் இருந்து ரூ.4000 கோடி துணி இங்கு வந்தடைந்திருக்கிறது. இது வணிகர்களை கடுமையாக பாதித்துள்ளது. 12.6 சதவீதம் காங்கிரஸ் ஆட்சியில் இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட்டது. அதனால் வங்கதேச துணிகள் வரவில்லை. ஆனால் பாஜ வரி விதிக்காததால் வங்க தேச துணிகள் வருகின்றன. ஒன்றிய அரசு இதனை சரி செய்ய வேண்டும்.
கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசு கையில்தான் உள்ளது. மன்னர் காலத்திலும் மன்னர் கையில்தான் கோவில்கள் இருந்தன. கோவில்கள் அரசுக்கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சிறந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாலைக்கண் நோய் அதனால்தான் தமிழகத்தில் தீண்டாமை அதிகம் என தெரிவிக்கிறார். சட்டமன்றத்தின் மூலம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமா? உச்சநீதிமன்றம் சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா? என கேட்கும் அளவிற்கு உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு நடிகர், நடிகைகளை அழைத்தவர்கள் உலகக்கோப்பை வென்றவர்களை அழைக்கவில்லை. அந்த ஸ்டேடியம் சர்தார் வல்லபாய் படேல் பெயர் இருந்தது. அதனை மோடி தன் பெயருக்கு மாற்றிக்கொண்டார். நில அபகரிப்பு போல் ஸ்டேடியம் அபகரிப்பு இருக்கிறது. வல்லபாய் பட்டேல் பெயரில் இருந்த ஸ்டேடியத்தை புனரமைத்து மோடி பெயரில் மாற்றிக்கொண்டார். இது நில அபகரிப்பு போல ஸ்டேடியம் அபகரிப்பாக உள்ளது. அமலாக்கத்துறை மணல் அள்ளும் விஷயத்தில் எந்த மாநிலத்திற்கு சென்று சோதனை செய்தது.
தமிழகத்தில் மட்டும் அமலாக்கத்துறை முனைப்பு காட்டுவதன் நோக்கம் என்ன? அமலாக்கத்துறை பணபறிமாற்றத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். மணல் பரிமாற்றத்தில் அல்ல. அமித்ஷா மகன் சொத்து மதிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஏன் அந்த பக்கம் செல்வதில்லை. அமலாக்க துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. 5 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் அமோகமாக வெற்றி பெறும். ஆளுநர் வேண்டாம் என்றோ, அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதோ காங்கிரஸ் கருத்தல்ல. மரபை மீறக்கூடாது என்று தான் சொல்கிறோம். இழுக்கு ஆர்.என்.ரவிக்கு அல்ல, தமிழ்நாடு ஆளுநருக்குதான். இவ்வாறு அவர் கூறினார்.
The post தீண்டாமை அதிகம் என்று சொல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாலைக்கண் நோய்: கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு appeared first on Dinakaran.
