×

ங போல் வளை!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகம் அறிவோம்!

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

முக்குணமும் சத்தியமே..!

ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள், பெருந் தத்துவங்களை எளியோருடன் உரையாட தேர்ந்தெடுக்கும் வழிகளில் முக்கியமானது கதை சொல்லுதல். அவருடைய கதை சொல்லும் பாணி அலாதியானது. அதிலொன்று. மூன்று திருடர்கள்.

ஒரு வறண்ட பிரதேசத்தில், வழிப்போக்கர்களைக் கொள்ளையடித்து வாழும் மூன்று திருடர்கள் இருந்தனர். ஒரு நாள் அவ்வழியே வந்த ஒரு மனிதனை தாக்கி அவனுடைய பொருட்களையும், பணத்தையும் பறித்துக்கொண்டனர். இறுதியில் வழிப்போக்கனை என்ன செய்வது என மூவருக்கும் கேள்வி எழுந்தது. முதல் திருடன், வழிப்போக்கனைக் கொன்றுவிடலாம். அதுவே, நமக்குப் பாதுகாப்பு, இல்லையெனில் நாளை காவலாளிகளுடன் வந்து நம்மைப் பிடித்துவிடுவான் எனத் தன் யோசனையைச் சொல்கிறான்.

இரண்டாவது திருடனோ ‘கொல்ல வேண்டாம். மரத்தில் கட்டிப்போட்டு விட்டு போய்விடலாம் ‘என்கிறான். மூன்றாவது திருடன், எதுவும் சொல்லாமல் இருந்துவிடுகிறான். இறுதியில் வழிப்போக்கனை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு மூவரும் சென்று விடுகின்றனர்.சிறிது நேரம் கழித்து மூன்றாவது திருடன் திரும்பி வந்து, வழிப்போக்கனின் கட்டுகளை அவிழ்த்து விட்டுச் செல்கிறான் எனக் கதை முடியும்.

இதில் இந்த மூன்று திருடர்களும் யார்? அவர்களுடைய குணங்கள் என்னென்ன? எதன் அடிப்படையில் அப்படி இயங்குகிறார்கள் என விரிவாகப் பேசி, தனி மனிதர்களாகிய நாம் இதில் யாரைப் போல இருக்கிறோம் அதற்குக் காரணம் என்ன? என்று ஆராய்ந்தால் நமது மரபு சொல்லக்கூடிய முக்குணங்கள் எனும் கருத்தில் தெளிவாக இதற்கான விடையையும், மேற்கொண்டு நாம் செய்ய வேண்டியவற்றையும், தெரிந்துகொள்ளலாம்.

இந்த ‘குணங்கள்’ என்பது ஒருவகை மரபின் நம்பிக்கையோ, கருதுகோளோ அல்ல, இந்தப் பிரபஞ்ச இயக்கம் முழுவதையுமே இந்திய ஞானம் குணங்களின் அடிப்படையிலேயே வகுக்கிறது. ஒன்றிலிருந்து வேறொன்றாக மாறிக்கொண்டே இருக்கக்கூடிய இந்த இயற்கை நியதி முதல், மனிதனின் உடல், மனம் , ஆற்றல் என அனைத்தையும் குணத்தின் அடிப்படையிலேயே வகுக்க முடியும் என ஆயுர்வேதமும் நம்புகிறது. ஆகவே, திரிதோஷம் எனும் அடிப்படைகூட குணத்தின் பரிமாணமே. ‘சர்வமிதம் த்ரிகுணாத்மீகம் அஸ்தி ‘ என்கிறது இங்கிருக்கும் அனைத்திலும் முக்குணங்கள் நிறைந்துள்ளது என்கிறது.

எனினும் யோகமரபு இந்த ‘குணங்கள்

‘ எனும் பிரபஞ்ச இயக்கத்தின் சாரத்தை சாங்கிய தத்துவத்திலிருந்துப் பெற்றுக்கொள்கிறது. சாங்கியம் ஒரு தத்துவம் என்றால் அதன் பயிற்சி திட்டம்தான் யோகம்.
யோக மரபு குணங்களை மூன்றாகப் பகுக்கிறது. முதலில் அடிப்படை நிலையான தமோ குணம் – இது செயலின்மையும், ஆற்றலின்மையும், எதிர் நிலை பண்புகளும் கொண்ட ஒரு தேக்க நிலை. இரண்டாவது ரஜோ குணம் எனும், செயலும் , விழைவும், ஆற்றலும் , ஊக்கமும் கொண்ட நிலை.

மூன்றாவது, சத்வ குணம் எனப்படும் உற்சாகமும்,அமைதியும், ஆனந்தமும் , சமநிலையும் கொண்ட நிலை.இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்திலும் இந்த முக்குணங்களின் தன்மையே நிறைந்திருக்கிறது. எனினும் இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்தும், திரிந்தும், பிரிந்தும், மேலெழுந்தும், கீழிறக்கியும் இயங்குபவை என்பதால் ஒரு பொருளையோ , மனிதரையோ, ஒற்றைக் குணம் என வகுக்க முடியாது.

இந்த மூன்று குணங்களின் சேர்க்கை நொடிக்கு நொடி மாறிக்கொண்டும், திரிப்படைந்து கொண்டும் இருப்பதால், எந்த குணம் கீழ்மையானது, எது மென்மையானது என வகுப்பதைவிட, ஒவ்வொரு குணத்தின் ஆகச்சிறந்த பகுதியை மனித வாழ்வின் மேன்மைக்குப் பயன்படுத்திக்கொள்ள, இந்திய மரபு எண்ணற்ற பாடத் திட்டங்களை வகுத்துள்ளது. கல்லில் தெய்வத்தை காண்பவருக்கும், தெய்வமில்லை என்பவருக்கும்கூட இக்குணங்களே அவருடைய வாழ்வை தீர்மானிக்கிறது என்பதால், வைதீக மரபுகளுக்கு இணையாகவே , அவைதீக மரபுகளும் இக்குணங்களை ஏற்று அவற்றை சமன் கொள்ளச்செய்யும் ஏதேனும் ஒரு வழியை சொல்கிறது.

உதாரணமாக, மனம் அமைதியற்ற ஒரு நிலையில் நமக்குப் பிடித்த பாடல் அல்லது ஒரு செயலை செய்வதன் மூலம் ஒரு சிறிய மன அமைதியை பெறுகிறோம். ஏன் அல்லது எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறது? மன அமைதியற்ற, கொந்தளிப்பான நிலை என்பது அடிப்படை குணமான தமோ குணத்தின் ஒரு பகுதி. ஆனால், நாம் அதே நிலையில் நீண்ட நேரம் இருப்பதில்லை. ஆகவே ஒரு பாடலை கேட்கவோ, செயலை செய்யவோ தூண்டப்படுகிறோம். அதன் மூலம் சற்று ஆசுவாசம் அல்லது மகிழ்ச்சி அடைகிறோம். செயலும், அதைத் தொடர்ந்துவரும் மகிழ்ச்சியும் ரஜோ குணத்தின் அடிப்படை என்பதால் இந்த மாற்றம் நிகழ்கிறது.

எனினும் இதே மகிழ்வுடன் நாட்கணக்கில் , மாதக் கணக்கில் நம்மால் இருக்க முடிவதில்லை. ஏனெனில், மேலே சொன்னது போல, முக்குணங்களும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும் மாபெரும் ஆடல். அதன் ஆடுகளம் நம் வாழ்வு எனலாம்.இதுதான் நாம் மேலே படித்த ராமகிருஷ்ணரின் கதையில் வரும் மூன்றாவது திருடன், மீண்டும் வந்து வழிப்போக்கனின் கட்டுகளை அவிழ்த்துவிட வைத்த காரணி, கொள்ளையில் ஈடுபடும் போதும், வழிப்போக்கனை மரத்தில் கட்டிப்போடும் போதும் இருந்த, தமோ குணமும், ரஜோ குணமும் ஏதோ ஒரு கணத்தில் துளி கருணையாக, சத்வகுணம் எனும் நிலையில் மூன்றாவது திருடனில் நிகழ்கிறது. அந்த சத்வ குணம் அவனை உந்தித் தள்ள, சென்றவன் மீண்டு வந்து கட்டுகளை அவிழ்க்கிறான்.

ஆகவே, அனைத்து மரபார்ந்த பாடங்களும், சத்வ குணத்தை அடைவதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகின்றன. சத்வ குணத்தை வளர்த்துக்கொள்ளச் சொல்கிறது. பாதையை வகுக்கிறது. சாங்கிய மரபின் நீட்சியான யோகமும் முக்குணங்களை பற்றி தெளிவான பார்வை கொண்டுள்ளது. இங்கிருக்கும் அனைத்தும் எதிலிருந்து தோன்றியதோ அதில் ஐக்கியமாவதே யோக முழுமை. அதாவது, மூலப் பிரக்ருதியை நோக்கிய பயணமே யோகம், அதில் தடைகளாக வரும் குணங்களை நீக்கி, முக்குணங்களைச் சரியாக நிர்வகித்து, ஒரு கட்டத்தில் குணங்களைக் கடந்தவனாக மாறக்கூடியவனே யோகி. குணங்களை கடந்தவன் என்பதால் யோகியானவன் ‘குணாதீதன்’ எனப்படுகிறான்.

இதில் யோகப் பயிற்சிகள் எவ்வகையில் உதவும்? என்பதற்கு, தாமச குணம் எனும் செயலின்மை, உடலில் தொடங்கி உள்ளம் தொட்டு ஆழ்மனம், சித்தம் வரை பரவக்கூடியது. அது தரும் போதையில், ஒருவன் தேங்கி நின்று விடவே வாய்ப்புகள் அதிகம் என்பதால் முதலில் உடலில் தொடங்கப் பரிந்துரை செய்கிறது ஆசன மரபு.

ஆசனங்களைச் செய்து பிராணனைச் சேமிக்கத் தெரிந்த உடல் அதை மனம் நோக்கிச் செலுத்தும். சோம்பிக் கிடக்கும் மனம் செயலூக்கம் பெற்று, ரஜோ குணத்தில் திளைக்கும். ரஜோ குணம் மிக்க ஒருவன் உடலாலும் உள்ளத்தாலும் சித்தத்தாலும் தீவிரமானவனாக இருப்பான். அவனுக்கே மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்து நிற்கும். இவ்வகை மகிழ்ச்சி சத்வ குணத்தின் முதல் கூறு என்பதால், சத்வகுணம் நோக்கி அவன் பயணிக்க இந்த செயலூக்கம் துணை செய்யும். காலத்தால், அனுபவத்தால், கனிந்து சத்வ குணம் மிக்க ஒருவனாகத் தன்னை வடிவமைத்துக்கொள்வான். பின்னர், அவனுடைய நீண்ட கால சாதனா எனும் பயிற்சி அவனை குணாதீதனாக மலரச்செய்யும்.

இந்த படிநிலைக்கு ‘முதலில் சித்த சுத்தி இன்றியமையாத ஒன்று என்பதால் ஆசன, பிராணாயாம, தியானப் பயிற்சிகள் ஒவ்வொரு நாளும் அவனுக்கு சித்த சுத்தியையே வழங்குகின்றன.  ஆக, ஒரு பாடத்திட்டம் என்பது ஏதோ வெறுமனே ஆரோக்யம் சார்ந்த பயிற்சி அல்ல. அதில், பல அடுக்குகள் உள்ளன. அது நம்மில் பல தளங்களில் மாற்றங்களையும் விதைக்கக்கூடிய ஒன்று. அவ்வகை பாடத்திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதும் நமது முக்கியமான கடமைகளுள் ஒன்று.

சைதல்ய ஆசனம்!

இந்தப் பகுதியில் நாம் ‘சைதல்ய ஆசனம்’ எனும் பயிற்சியைப் பார்க்கலாம்.கால்களை நீட்டி அமர்ந்து, வலது காலை மடித்து, உடலுக்கு அருகில் அழுத்தி வைத்து, இடது காலைப் பின்புறமாக மடித்துக்கொள்ளவும். பின்னர் நிமிர்ந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து, அதை வெளியிடும்பொழுது, வலது புறமாகத் தரையை நோக்கி நெற்றி நிலம் பட சாய்ந்து, இறுதி நிலையில் மூன்று மூச்சுகள் வரை ஓய்வெடுக்கவும், இதே போல இடது புறமும் காலை மடித்து செய்து முடித்தால், ஒரு சுற்று நிறைகிறது. ஐந்து முறை செய்யலாம். முழுமையான ஓய்வையும் இலகுவான உடலையும் தரவல்ல முக்கியமான பயிற்சி.

The post ங போல் வளை! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Yoga ,Selandararajan.ji ,Mukkunum Sathyame ,Ramakrishna Paramahamsa ,
× RELATED டூர் போறீங்களா?