×

இயர் பட்ஸில் அழகான ஜூவல்லரி!

நன்றி குங்குமம் தோழி

வரிசையாக பண்டிகைகள் வருகிறது. நம் உடைக்கு மேட்ச்சாக காது குடையும் இயர் பட்ஸ் கொண்டு அழகாக தோடு, நெக்லஸ் செய்து நாமே போட்டுக் கொள்ளலாம். இதனை நாமே தயாரிப்பதால், நம்முடைய உடைகளின் நிறத்திற்கு ஏற்ப அதனை விதவிதமாக வடிவமைத்துக் கொள்ளலாம். எளிதாகவும் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு செய்யப்படும் இந்த அழகான நகையினை எவ்வாறு செய்யலாம் என்று அழகான பட விளக்கத்தோடு அளித்துள்ளார் சுதா செல்வகுமார்.

காது குடையும் இயர் பட்ஸ் கொண்டு நாம் செய்யும் இந்த டாலரை கழுத்தில் மாலையாக மட்டுமில்லாமல், குழந்தைகளின் தலையில் பயன்படுத்தப்படும் ஹேர்கிளிப்பிலும் பொருத்திக் கொள்ளலாம். மேலும் பர்ஸ், உடையில் பேட்ச் வேலைப்பாடு போலவும், காலணிகளை அலங்கரிக்க என ஒரு டாலரைக் கொண்டு பலவிதமாக அலங்கரித்துக் கொள்ளலாம். இதனை எவ்வாறு செய்யலாம் மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: இயர் பட்ஸ் – 10, ஒட்டுவதற்கு வெள்ளை பசை, திரெட் டாசில்ஸ் (Thread Tassels), இட்லி மணி – சிறிது, திரெட் வளையம் சிறிது – 3, கோல்டன் மணிச்
சரம் 1 முழம், முத்து மணிகள் – சிறிதளவு, தோடு பேஸ் (Base) – 2, கார்ட்போர்டு அல்லது நோட்டு அட்டை – 1 சிறியது, செயின் – 1.

செய்முறை:

ஸ்டெப் 1: Cardboard (கார்ட்போர்ட் அட்டை) அல்லது நோட்டு அட்டையில் டாலர் செய்ய ஒரு சிறிய வட்டம் பென்சிலில் வரைந்து கொண்டு அதனை வெட்டி தனியே வைக்கவும்.

ஸ்டெப் 2: அதே அளவிற்கு வெள்ளை நிற காகிதம் ஒன்றை எடுத்து அதையும் கார்ட்போர்ட் அட்டையினை வட்ட வடிவத்தில் கத்தரிப்பது போல் அதே அளவில் வெட்டிக்கொள்ள வேண்டும். பிறகு காகிதத்தை அட்டை போர்ட் மேல் ஒட்டவும்.

ஸ்டெப் 3: இயர் பட்ஸின் நுனியை பஞ்சு இருப்பது போல் சிறிய அளவில் வெட்டி எடுத்துக் கொண்டு கார்ட்போர்ட் அட்டையின் பின்புறம் வட்டமாக படத்தில் உள்ளது போல் வட்டமாக ஒட்ட வேண்டும். பாதி வட்டம் ஒட்டினால் போதும்.

ஸ்டெப் 4: வெள்ளைக் காகிதம் ஒட்டப்பட்டு இருக்கும் பக்கம் மேல்புறம் கோல்டன் சரமணியினை சுற்றி ஒட்ட வேண்டும். நடுவே நூல் வளையம் (Thread ring) ஒட்டி அழகுப்படுத்தவும். இதனை மேலும் அலங்கரிக்க விரும்பினால் விருப்பமான மணிகள் ஒட்டி அலங்கரித்துக் கொள்ளலாம். அழகான டாலர் தயார்.

ஸ்டெப் 5: கார்ட்போர்ட் அட்டையின் மேற்புறம் ஒரு சின்ன கொக்கி போல் பொருத்தி அதற்குள் செயினை இணைக்கலாம். அவ்வாறு இணைத்தால் அழகான டாலர் கொண்ட செயின் தயார். இதனை பென்டென்டாக அணிய விரும்பாதவர்கள் குழந்தை டிரஸ் முன்புறம், பிளவுஸ் கை பகுதியில் பேட்ச் வேலைப்பாடு போல் ஒட்டி பயன்படுத்தலாம்.

ஸ்டெப் 6: டாலர் செய்தாயிற்று அடுத்து தோடு செய்வதை தெரிந்து கொள்ளலாம். தோடு செய்ய அதற்கான பேஸ் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 7: தோட்டின் பேஸ் பகுதியில் ஏற்கனவே டாலர் செயினுக்கு கத்தரித்து வைத்து இருக்கும் இயர் பட்ஸின் நான்கு துண்டுகளை மட்டும் அதன் மேல் ஒட்ட வேண்டும். இது ஒரு காது கம்மலுக்கானது. மற்றொரு கம்மலுக்கு மேலும் ஒரு 4 துண்டுகள் இயர் பட்ஸினை ஒட்ட வேண்டும். அது நன்கு காய்ந்ததும், டாலருக்கு மேட்சாக தொட்டை சுற்றி நூல் வளையம், கீழ்புறம் திரெட் டாசில்ஸ் ஒட்டி நடுவே மணி வைத்து அலங்கரிக்கலாம். நன்கு காய்ந்த பிறகு அணிந்து கொள்ளலாம். அழகாக Ear Studs ரெடி மற்றும் செயின் ரெடி. செய்வது சுலபம், விலையும் குறைவு, உடைகளுக்கு ஏற்ப மேட்சிங்காக நாமே தயார் செய்து கொள்ளலாம்.

தொகுப்பு: ப்ரியா

The post இயர் பட்ஸில் அழகான ஜூவல்லரி! appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!