×

வெளிநாடுகளுக்கு பறக்கும் சுங்குடி புடவைகள்!

நன்றி குங்குமம் தோழி

பலவகையான புடவைகள் வந்தாலும் காட்டன் புடவைகள்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். அதுவும் இந்த தலைமுறையினை சார்ந்த பெண்கள் இந்த புடவை மேல் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். காட்டன் புடவைகளிலும் சந்தேரி காட்டன், பூம்காய் சேலை, டன்ட் சேலை, காதி காட்டன், கோட்டா காட்டன் மற்றும் சில்க் காட்டன் என பல வகைகள் உள்ளன. என்னதான் பல டிசைன்களில் புடவைகள் வந்தாலும் மதுரை சின்னாளப்பட்டியின் சுங்குடி காட்டன் புடவைகளுக்கு ஈடு இணை கிடையாது.

இந்த புடவைகள் பல இடங்களில் விற்பனையில் இருந்தாலும், தலைமுறை தலைமுறை கடந்து சுங்குடி சேலைகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உற்பத்தி செய்து விற்று வருகிறார் சென்னையை சார்ந்த தீபிகா.‘‘நாங்க தலைமுறை தலைமுறையாக இந்த சேலைகளை தயாரித்து வருகிறோம். எங்க ஊர் மதுரை மாவட்டத்தின் கீழ் வந்ததால் இந்த புடவைகள் மதுரை சுங்குடி புடவைகள், மதுரை சின்னாளப்பட்டி சுங்குடி புடவைகள் என பெயர் சொல்லி வந்தாங்க. ஆனால் தற்போது எங்க ஊர் திண்டுக்கல்லின் கீழ் வந்தாலும் இதே பெயர் வைத்துதான் இப்போதும் இந்த புடவைகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது’’ என பேச ஆரம்பித்தார் தீபிகா.

‘‘இந்த புடவை தொழிலை தாத்தாதான் முதலில் துவங்கினார். அவரைத் தொடர்ந்து அப்பா பார்த்துக் கொண்டார். எத்தனை காட்டன் புடவைகள் வந்தாலும், இந்த புடவைக்கு என தனி மதிப்பு உண்டு. அதற்கு முக்கிய காரணம் இந்த புடவைகளை கைகளால்தான் டிசைன் செய்வார்கள். வெள்ளை புடவையில் ஆங்காங்கே நூலைக் கொண்டு கட்டி முடிச்சுப் போட்டு விடுவார்கள். அதன் பிறகு அதனை குறிப்பிட்ட சாயத்தில் முக்கி எடுப்பார்கள். சாயம் அனைத்தும் காய்ந்து புடவையை விரித்துப் பார்த்தால், முடிச்சு போட்ட இடத்தில் புடவையின் சாயமும் வெள்ளை நிறத்தின் கலவையும் சேர்ந்து அது ஒரு டிசைனாக இருக்கும். புடவையின் மற்ற இடங்களில் அந்த புடவையின் சாயம் பரவி இருக்கும்.

இந்த புடவைகளை வடிவமைப்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான். அதனாலேயே இந்த புடவைகள் தயாரிக்கவே சில சமயம் ஒரு மாதம் கூட ஆகும்’’ என்றவர், கொரோனாவுக்கு பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் அப்பாவின் வழியே பின்பற்ற ஆரம்பித்துள்ளார். ‘‘புடவை உற்பத்தியில் மூன்றாவது தலைமுறையாக அப்பாவைத் தொடர்ந்து நான் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். புடவைகளுக்கு தேவையான நூல் கொள்முதல் செய்வது முதல் அதன் விற்பனை வரை அனைத்தும் அப்பா தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.

கொரோனா காலத்தில் புடவைகளின் உற்பத்தி குறைய ஆரம்பிச்சது. அப்போதுதான் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், புடவைகளை ஆன்லைன் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம்னு முடிவு செய்தோம். பொதுவா ஒரு உடை வாங்கும் போது அதன் நிறம், தரம், டிசைன், விலை இதையெல்லாம் பார்த்து, அது தனக்கு அழகாக இருக்குமா என்பதனையும் பார்த்து பார்த்துதான் வாங்குறோம். அதனால் இந்த ஆன்லைன் யோசனை எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியாது.

அப்பாவுக்கு ஆன்லைன் பிசினஸ் பற்றி அவ்வளவாக தெரியாது. அதனால் அவருக்கு உதவியா எங்களுடைய இந்த புடவை பற்றி ஆன்லைனில் எல்லோருக்கும் தெரியப்படுத்தி விற்பனையை துவங்கினேன். புடவை தயாரிக்கும் இடம் எங்களுடைய சொந்த ஊரான சின்னாளப்பட்டியில் தான் இருக்கு. அங்கு தயாரிக்கும் புடவைகளை சில சமயங்களில் அங்கிருந்தே ஏற்றுமதி செய்வோம். சிலவற்றை அங்கிருந்து கொண்டு வந்து சென்னையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய துவங்கினேன்.

ஆரம்பத்தில் கடைகளுக்கு தேவையான புடவைகளை மொத்தமாக தயாரித்து கொடுத்து வந்தோம். நான் இந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்த பிறகு ஒன்று அல்லது இரண்டு புடவைகள் என்றாலும் சரி மொத்த வியாபாரமாக இருந்தாலும் ஆர்டரின் பேரில் கேட்பவர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். எங்களுக்கு தனியா நிறுவனமோ அல்லது கடையோ கிடையாது. வீட்டிலிருந்துதான் செய்து வருகிறோம். இந்த புடவையின் ஆரம்பமே மதுரையின் சின்னாளப்பட்டி தான். என்னதான் தற்போது மாவட்டங்கள் மாறி வந்தாலும் மதுரை சுங்குடின்னு சொன்னால் மட்டும்தான் எல்லாருக்கும் தெரியும்.

பொதுவா சுங்குடி என்றாலே ‘‘இயற்கையான சாயங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உடை’’ எனவும், தெலுங்கில் ‘‘மடிப்பு’’ எனவும், சவுராஷ்டிராவில் ‘‘வட்ட வடிவ புள்ளி’’ என்றும் அர்த்தம். ஆரம்ப காலத்தில் இந்த புடவைகளை கைகளின் மூலம் பல ஆயிரம் முடிச்சுகளை கட்டி, புள்ளிகள் வைத்து, சாயம் போட்டு தயாரிப்பாங்க. நாளடைவில் ரசாயன சாயம், பிரின்ட் ஆகியவற்றை கொண்டு இந்த புடவைகள் தயாரிக்குறாங்க. இன்னும் சொல்லப்போனால், தற்போது இருக்கும் டிரெண்டுக்கு ஏற்ப மக்கள் இந்த புடவைகளில் டிசைன் செய்து தர சொல்றாங்க.

புடவைகள் எல்லாம் அப்பாவின் மேற்பார்வையில்தான் இன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு டெலிவரிக்காக நான் சென்னைக்கு கொண்டு வந்திடுவேன். இங்கிருந்துதான் தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற நாடுகளுக்கும் முழுவதும் டெலிவரி செய்து வருகிறோம். ஒரு புடவை அப்படினு தனியா சொல்ல முடியாது.. ஒரு நாளைக்கு அதிக பட்சம் நூறு புடவைகளாவது நாங்க தயாரிப்போம். முதலில் காரிகம் என சொல்லப்படும் ஒரு வகையான புடவையை உற்பத்தி செய்வோம்.

வெளிர் சந்தன நிறத்தில் இருக்கும் இந்த புடவைகளை பிளீச் செய்து முழுமையான வெண்மை நிறமாக மாற்றி எடுப்போம். அந்த புடவையில் நமக்கு தேவையான டிசைன்களை பிரின்ட் செய்துக்கலாம். அவ்வாறு போடப்படும் டிசைன்கள் மூன்று வகைப்படும். அதில் ஒரு வகை பாந்தினி டிசைன். கைகளால் புடவையில் முடிச்சிட்டு சாயங்களில் நனைத்து தருவது தான் இந்த புடவை. அடுத்து, காரிகம் புடவைகளில் சாயம் போட்டு, மெழுகு பயன்படுத்தி தேவையான டிசைனை அச்சிட்டு, காய வைத்து, கஞ்சி போட்டு தேய்த்து தருவோம்.

காரிகம் புடவைகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறங்களில் ரெடி செய்து நேரடியாக டிசைன்களை பிரின்ட் போட அனுப்பிடுவோம். இந்த மூன்று முறைகளில் தான் மதுரையின் பெயர் போன சின்னாளப்பட்டி காட்டன் புடவைகளை நாங்க தயாரிக்குறோம். இங்க எங்களிடம் வேலை செய்யும் அனைவரும் பெண்கள்தான்.

பொதுவாகவே காட்டன் புடவைகள் தண்ணீரில் போட போட மிருதுவாக மாறிட்டே வரும். வெயில் காலங்களில் சாதாரணமா ஒரு சாப்ட் சில்க் புடவையே கட்டினாலும், சிலருக்கு அலர்ஜி மாதிரி ஆகிடும். ஆனால் இந்த சுங்குடி புடவைகள் அந்த மாதிரி எந்த விதமான அலர்ஜியும் ஏற்படுத்தாது. தற்போது இதில் பல விதமான டிசைன்களை மக்கள் விரும்புறாங்க. இந்த தீபாவளிக்காக மார்பில் டிசைன் சுங்குடி சேலை தான் நிறைய ஆர்டர் வந்திருக்கு. நாங்க சுங்குடி புடவைகள் மட்டுமில்லாமல், பாந்தினி டிசைனில் சுடிதார்களும் உற்பத்தி செய்து வருகிறோம்’’ என்றார் தீபிகா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post வெளிநாடுகளுக்கு பறக்கும் சுங்குடி புடவைகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Chungudi ,Dinakaran ,
× RELATED கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!