×

கைவினைப் பொருட்கள் ஒவ்வொருவரின் வீட்டையும் அலங்கரிக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

டிசைனர் சகோதரிகள் தான்யா, சுஜாதா

‘‘நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஏழு வருஷம் முன்பு துவங்கினோம். எங்களின் நோக்கம் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு நிரந்தர
வருமானம் ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தான். பெரும்பாலான நெசவாளர்கள் நிரந்தர வருமானத்திற்கு வழி இல்லாமல் இருக்கிறார்கள்’’ என்றார் சுஜாதா. இவர் தன் தங்கையுடன் இணைந்து ‘சுடா’ (SUTA) என்ற பெயரில் கைத்தறி உடைகள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

‘‘நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் பொருட்கள் நம் ஒவ்வொருவரின் வீட்டினையும் அலங்கரிக்க வேண்டும். அதனாலேயே நானும் தான்யாவும் இந்த துறைக்கு வந்தோம். நாங்க பொறியியல் பட்டதாரிகள். அதன் பிறகு எம்.பி.ஏ படிச்ேசாம். ஜவுளி துறைப் பற்றி எங்களுக்கு அடிப்படை அனுபவம் கிடையாது. ஆனால் நாங்க இன்றைய இளம் தலைமுறையினரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒவ்வொன்றையும் வடிவமைத்து இருக்கிறோம். பல பெண்களுக்கு புடவை கட்டுவது என்றால் பெரிய யோசனையாக உள்ளது.

காரணம், ஒரு புடவை வாங்கினால் அதற்கு பால்ஸ் தைக்கணும், மேட்சிங் பிளவுஸ் வாங்கணும். பால்ஸ் தைக்கப்பட்ட புடவைகள், மார்டனாக வடிவமைக்கப்பட்ட மேட்சிங் பிளவுசும் பல சைஸ்களில் இருக்கு. ஒரு புடவைக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது தான் சுடாவின் ஸ்பெஷாலிட்டியே என்றவரை தொடர்ந்தார் தான்யா.

‘‘பொதுவாக புடவைக்கு என தனிப்பட்ட பிராண்ட் இருக்காது. ஜவுளிக்கடைக்கு போனாலும், அங்கு புடவைக்கு அன்றைய லேட்டஸ்ட் பெயர்தான் வைத்திருப்பார்களே தவிர தனிப்பட்ட பிராண்ட் புடவையினை பார்க்க முடியாது. அப்படிேயே இருந்தாலும் புடவை விற்கப்படும் கடையினைப் பொறுத்துதான் நிர்ணயிக்கப்படும். அதற்காகவே நெசவாளர்களின் புடவைக்கான பிராண்ட் ஒன்றை நாங்க அமைக்க விரும்பினோம். எங்களுக்கு புடவைப் பற்றி பெரிய அளவில் அனுபவம் இல்லைதான். ஆனால் துணிகளின் ரகம் பற்றி ஓரளவிற்கு எங்க இருவருக்கும் அனுபவம் உண்டு. என் அப்பாவிற்கு இடமாற்றம் ஏற்படக்கூடிய வேலை. அதனால் அவ்வப்போது இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு மாற்றம் ஏற்படும்.

அதனால் ஒடிசா, மேற்குவங்காளம் போன்ற இடங்களுக்கு நாங்க மாற்றலாகி செல்வோம். ஒவ்வொரு வார இறுதி நாட்களும் அம்மா நாங்க இருக்கும் ஊரில் அமைந்துள்ள கிராமத்திற்கு செல்வது வழக்கம். அங்குதான் எங்களுக்கு துணி எடுப்பாங்க. அப்படித்தான் எங்களுக்கு ஜவுளிப் பற்றி தெரிய வந்தது. எல்லாவற்றையும் விட எனக்கும் சுஜாவுக்கும் புடவை ரொம்ப பிடித்தமான உடை. காரணம், வீட்டில் அம்மா, அத்தை எல்லோரும் புடவைதான் கட்டி இருப்பாங்க. நாங்க நல்லா வரைவோம், தைக்கவும் செய்வோம். அதனாலேயே பொறியியல் படிச்சிருந்தாலும், எங்களுக்கு ஃபேஷன் மேல் தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது. அதுவும் சிம்பிள் டிசைனாக இருக்கணும். மேலும் தரம் மாறாமல் இருக்கணும். அதனால் ஆரம்பிச்ச போது நாங்களேதான் டிசைன் செய்து வந்தோம்’’ என்றார் தான்யா.

‘‘நாங்க எந்த பிராண்டினையும் பின்பற்றியது கிடையாது. தரம் நல்லா இருக்கணும். தலைமுறை தலைமுறைக்கு நீடிக்கணும். அதனால் எதுவுமே தெரியாமல்தான் இந்த துறைக்குள் குதித்தோம். அதன் பிறகு அனுபவரீதியாகத்தான் நாங்க பல விஷயங்களை கற்றுக் கொண்டோம். ஆரம்பகட்டத்தில் நிறைய ஏமாற்றப்பட்டு இருக்கோம். நாங்க சொல்வது ஒன்றாக இருக்கும். ஆனால் அவர்கள் தருவது வேறாக இருக்கும். அதன் பிறகு அதில் உள்ள அனைத்து சூட்சுமங்களையும் தெரிந்து கொண்டோம். இந்த தொழில்தான் செய்யப்போறோம்னு முடிவு செய்தாலும், யாரைப் பார்க்கணும் என்ன செய்யணும்னு தெரியல. அப்பா ரயில்வேயில் இருந்ததால, அவரிடம் கேட்டோம்.

அப்பாவின் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களின் உதவியுடன் மேற்குவங்காளத்தில், சாந்திபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் நெசவாளர்களை சந்தித்தோம். ஆனால் நாங்க என்ன செய்யப்போகிறோம் என்று சொன்ன போது யாருமே எங்களுடன் வேலை செய்ய தயாரா இல்லை. இரண்டு சின்ன பொண்ணுங்க பொழுதுபோகாமல் வேலை பார்க்க சொல்றாங்கன்னு தான் நினைச்சாங்க. அந்த சமயத்தில் எங்கள் மேல் நம்பிக்கை வைத்தார்கள் அந்த தம்பதியினர்.

கணவன்-மனைவி இருவருமே நெசவாளர்கள் என்பதால் சம்மதம் ெதரிவித்து எங்களுடன் இன்று வரை இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அவர்களிடம் நாங்க பழக ஆரம்பித்த பிறகுதான் அவர்களின் வாழ்க்கை முறைகள், சுற்றுப்புறச்சூழல் அனைத்தும் தெரிந்து கொண்டோம். சொல்லப்போனால் அவர்கள் நம்மை விட ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறார்கள்.

முதலில் நாங்க ஐந்து நிற மல் மல் புடவைகளை நெய்ய சொன்னோம். பொதுவாகவே மல் மல் புடவைக்கு கஞ்சி போடுவது வழக்கம். ஆனால் நாங்க கஞ்சி போட வேண்டாம்னு சொல்லிட்டோம். கஞ்சி போட்டா அந்த புடவையின் அழகே போயிடும். உடலை தழுவிக் கொண்டு இருக்கும் போது நம்மால் அதன் பேப்ரிக்கினை உணர முடியும். முதலில் முகநூலில்தான் நாங்க எங்க விற்பனையை துவங்கினோம். நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று துவங்கி எங்களுக்கான வாடிக்கையாளர் வட்டாரம் அதிகமாச்சு. மேலும் புடவைகளை தொட்டுப் பார்த்து தேர்வு செய்ய விரும்புபவர்களுக்காக அவ்வப்போது நாங்க கண்காட்சியினை நடத்தினோம். ஆனால் கண்காட்சியின் இரண்டாவது நாளிலேயே எங்க புடவைகள் அனைத்தும் விற்றுவிடும்.

அப்போதுதான் இதற்கான டிமாண்ட் அதிகமாக இருப்பது தெரியவந்தது. மும்பையில் ‘சுடா’ வின் பிரத்யேக ஹாண்ட்லூம் புடவைக்கான ஷோரூமினை துவங்கினோம். அதனைத் தொடர்ந்து பெங்களூர், தானே, கொல்கத்தா, புவனேஸ்வர், சென்னை, ஐதராபாத் என எங்களின் கிளை வளர்ந்தது. எங்களிடம் பனாரசி, கலம்காரி, பாந்தினி என அனைத்து ஹாண்ட்லூம் புடவைகளும் உள்ளன’’ என்றார் சுஜாதா. மேலும் அவர் கூறுகையில், ‘‘இந்தியா முழுக்க 17 ஆயிரத்திற்கும் மேல் நெசவாளர்கள் இருக்கிறார்கள். நாங்க இந்தியாவின் அனைத்துப் பகுதியில் இருக்கும் நெசவாளர்களை அந்தந்த ஊரின் சிறப்பு டிசைன்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறோம்.

எங்களின் தேவை அறிந்து அவர்களும் வேலை பார்க்கிறார்கள். முதலில் நானும் தான்யா மட்டுமே டிசைனிங் செய்து வந்தோம். தற்போது இதற்காக தனிப்பட்ட டீம் ஒன்றை அமைத்திருக்கிறோம். எங்களிடம் பெண் நெசவாளர்கள்தான் அதிகம். அவர்கள் அனைவருக்கும் எங்கள் மூலம் ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அம்மா புடவை நெசவு வேலை பார்ப்பாங்க. மகள் புடவைக்கான கொசுவங்களை கட்டுவார்.

புடவை மட்டுமில்லாமல் குர்தா, ஆண்களுக்கான உடைகள், பிளவுஸ்கள் என அனைத்தும் இங்கு கிடைக்கும். தற்போது மெட்ரோ நகரத்தில் எங்களின் கிளைகள் உள்ளன. மேலும் டயர் 2 நகரத்திலும் இதனை துவங்கும் எண்ணம் உள்ளது. எங்களின் அனைத்து கிளைகளும் பெரும்பாலும் பிரான்சைசி முறையில்தான் நாங்க கொடுத்து வருகிறோம். எங்களின் வாடிக்கையாளர்களே எங்களுடன் இணைந்து பிசினஸ் செய்ய முன்வருகிறார்கள் என்று நினைக்கும் போது மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு. தற்போது இந்தியா மட்டுமில்லாமல் நம்முடைய பாரம்பரிய உடைகளை உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்’’ என்றனர் டிசைனர் சகோதரிகள்.

தொகுப்பு: ஷன்மதி

The post கைவினைப் பொருட்கள் ஒவ்வொருவரின் வீட்டையும் அலங்கரிக்க வேண்டும்! appeared first on Dinakaran.

Tags : Tanya ,Sujata ,Dinakaran ,
× RELATED வேலூர் கிருபானந்த வாரியார் சாலை...