×

தமிழ் ‘சொற்குவை’ வலைதளத்தில் 14 லட்சம் தமிழ் சொற்கள்: இணைய நிர்வாகம் தகவல்

சிறப்பு செய்தி
தமிழ்நாடு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘சொற்குவை’ இணையத்தில் இதுவரை 14 லட்சம் தமிழ்ச் சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் 3 லட்சம் பேர் சொற்குவை இணைய தளத்தில் இணைந்துள்ளனர்.

‘தமிழ் அயரத் தாழ்ந்தான் தமிழன்- அவனே தமிழ் உயரத் தான் உயர்வான்’ என்பார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். ‘ஒரு இனம் காக்கப்பட வேண்டும் என்றால் முதலில் அந்த இனத்தின் மொழி காக்கப்பட வேண்டும். என்பார்கள் மொழியியல் அறிஞர்கள். மொழியைக் காக்க வேண்டும் என்றால், சொற்களை காக்க வேண்டும். சொல் வளம் பெற்றால் தான் மொழியும் நலம் பெறும் என்பதும் அறிஞர்கள் கருத்து. அந்தவகையில் தமிழ் மொழியின் நலன் காக்க உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம். அதன் பயனாக இன்று உலகளாவிய அளவில் தமிழ் மொழி இணையம் வழியாக எளிதில் சென்றுசேர்ந்துள்ளது. தற்போது அதன் வளர்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுவதும் நமது கடமை.

இது குறித்து தமிழ்நாடு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர் விசயராகவன் கூறியதாவது:
கடந்த 1974ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் தொடக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ் மொழியைக் காக்க அதன் சொற்களையும் காக்க வேண்டும் என்பதுடன், தமிழ் மொழியின் வளத்தை பெருக்க, அதில் இருக்கின்ற அத்தனை ெசாற்களையும் பதிந்து பாதுகாப்பதோடு காலத்துக்கேற்ப புதிய கலைச் சொற்களையும் வடிவமைத்துப் புழக்கத்துக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை முன்னெடுத்து செல்லும் வகையில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் ‘சொற்குவை ’ என்ற வலை தளம் கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

நாள்தோறும் பல்வேறு புதிய புதிய துறைகள் உருவாகி வரும் இன்றைய அறிவியல் உலகில், அந்தந்த துறை சார்ந்த கலைச் சொற்களை எல்லாம் ஒன்றாக திரட்டி, அவற்றுக்கு இணையான தமிழக் கலைச் சொற்களை வடிவமைத்து இணைய தளத்தின் வழியனாக பொதுவெளியில் வெளியிடுவது, தமிழில் உள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் ெசாற்களையும் ஒன்று திரட்டி, அவற்றில் மீண்டும் வந்த சொற்களே வராமல் நிரல்படுத்ி தமிழின் சொல் வளத்தை உலகறியச் செய்வதும் அதன் வழியே தமிழின் சொல் வளத்தைப் பெருக்குவது, தமிழ்ச் சொல் வளத்தைப் பதிவேற்றிப் பாதுகாப்பதும் அகரமுதலி இயக்கச் சொற்குவையின் நோக்கம். சொற்குவைக்காக உருவாக்கப்பட்ட www.sorkuvai.com என்ற இணைய தளத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 3 லட்சத்து 91 ஆயிரத்து 682 சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தன. இவற்றுள் தமிழ்நாட்டின் 15 பல்கலைக் கழகங்களின் கலைச் சொல்லாக்கக் குழுவினரால் திரட்டப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் பதிப்பிக்கப்பட்ட தமிழ் இணையக் கல்விக் கழக கலைச் சொல் பேரகராதியின் 2 லட்சத்து 50 ஆயிரம் கலைச் சொற்கள், தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் ஆட்சிச் சொல் அகராதியின் சொற்கள், இந்த இயக்ககத்தின் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் சொற்கள், தமிழ்க் கலைக் கழகத்தால் வடிவமைக்கப்படும் கலைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ’அகராதியியலாளர்கள், தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஊடக நண்பர்கள், மாணவ மாணவியர் கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபட்டு சொற்குவை வலை தளத்தில் அனைத்து துறைகளின் கலைச் சொற்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தார். அதன் பேரில் சொற்குவையில் சொற்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அகர முதலி இயக்ககம் மேற்கொண்டது.

அதன்படி, தமிழ்க் கலைக் கழகம், வல்லுநர் குழுக்கூட்டம், சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டம், துறைசார் புதிய கலைச் சொற்கள் கலந்தாய்வுக் கூட்டம், இணைய வழிப் பன்னாட்டுக் கலைச் சொல்லாக்கப் பயிலரங்கம், ஆகியவற்றின் வழியாகவும் கலைச் சொற்கள் பெறப்பட்டு, அவை சீராக்கம் செய்யப்பட்டு சொற்குவையில் சேர்க்கப்பட்டன. கல்லூரி அளவில் ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் ஜெயா கலை அறிவியல் கல்லூரி, பொன்னேரி தேவி கலை அறிவியல் கல்லூரி, சென்னை டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை குருநானக் கல்லூரி, ஆவடி புனித பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி, பட்டாபிராம் தருமமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, கிண்டி செல்லம்மாள் கல்லூரி, பெரும்புதூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 166 மாணவ மாணவியருக்கு கலைச் சொல்லாக்கம் மற்றும் தூயதமிழ்ப் பயன்பாடு குறித்த அகப்பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் தொகுத்துக் ெகாடுத்த கலைச் சொற்களும் சொற்குவை வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அகராதிகள், கலைச்சொல் நூல்கள் வைத்துள்ள தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், அயல்நாடுவாழ் தமிழர்கள், ஊடகங்களில் இருந்தும், கணினி இணையம், திறன்பேசி, ஆகியவற்றின் உதவியுடன் பல்வேறு இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்தும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழக் கலைச் சொற்களைத் திரட்டியும், வடிவமைத்தும் சொற்குவைக்கு வழங்கி வருகின்றனர். அதன்பயனாக 3.9.2021ல் 4 லட்சத்து 30 ஆயிரத்து 186 சொற்கள் என்று தொடங்கி 22.11.2023ம் தேதி வரையில் 14 லட்சத்து 2,350 சொற்கள் சொற்குவையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பணியில் 10 பேர் குழு ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்து 10 ஆயிரம் சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 15 லட்சமாக உயர்த்தும் வகையில் சொல் திரட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு உதவியுடன் சொற்குவை வலைதளத்தில் 3 லட்சம் பேர் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இயக்குநர் விசயராகவன் தெரிவித்தார்.

The post தமிழ் ‘சொற்குவை’ வலைதளத்தில் 14 லட்சம் தமிழ் சொற்கள்: இணைய நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu Senthamil ,Dinakaran ,
× RELATED வணக்கம் நலந்தானே!