×

வங்கி கடன் பாக்கிக்காக வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ‘‘கடன் பாக்கிக்காக வீடுகளை ஜப்தி செய்யும் வங்கிகளின் நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமாகவும், அரசியல் சாசனத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து தொடர்ந்து பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கவர்னர் தனது போக்கை தொடர்ந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றிய மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பில் போட்டு தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை முடக்கி வருகிறார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அவர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் அவருக்கு அனுப்பியுள்ளது. அரசியல் சாசனப்படி கவர்னர் இம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, தாமதமில்லாமல் உடனடியாக கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளாலும், கொரோனா பாதிப்புகளாலும் சிறு-குறு தொழில்கள் நெருக்கடியில் சிக்கி அதன் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் விழி பிதுங்கி தவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், சிறு-குறு தொழில்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக அராஜகமான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்கிறது. இதை ஒன்றிய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

கடன் பாக்கிக்காக கோவை மாவட்டம் கணேஷ் ஆனந்த் என்பவரது வீட்டுக்கு வந்த வங்கி நிர்வாகம் முகம் தெரியாத அடியாட்களோடு, இரவுநேரம் என்றும் பாராமால் அந்த குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றி சீல் வைத்துள்ளனர். வங்கியின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். வீட்டுக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி அவரிடம் வீட்டை ஒப்படைக்கவும், அவரது கடன் பாக்கிக்கு சட்டத்தின் படி குழு அமைத்து தீர்வு காண வேண்டும். எதிர்காலத்தில் கடன் பாக்கிக்காக வீடுகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post வங்கி கடன் பாக்கிக்காக வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Marxist ,CHENNAI ,
× RELATED குளச்சலில் கண்ணில் கருப்புத்துணி கட்டி லெனினிஸ்ட் போராட்டம்