×

நேஷனல் ஹெரால்டு சொத்துகளை முடக்குவது ஒன்றிய பாஜ அரசின் அப்பட்டமான சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கை: திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டது என்று கே.எஸ்.அழகிரி தாக்கு


சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து 2004ல் ஒன்றிய பாஜ அரசை அகற்றி, மன்மோகன்சிங் தலைமையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அத்தகைய ஆட்சியை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் மீது ஏதாவது ஒரு வகையில் ஊழல் வழக்கில் சிக்க வைக்க மோடி அரசு பகீரத முயற்சிகளை மேற்கொண்டது.

அதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் 2014ல் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகாரை பயன்படுத்தி, பழிவாங்கும் நோக்குடன் நேஷனல் ஹெரால்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ரூ.750 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய அசோசியேட் ஜர்னல் லிமிடெட் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது 5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் அடையப்போகும் தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் பாஜவின் அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனை இல்லை. குற்ற நடவடிக்கை இல்லை. உண்மையில், ஏமாற்றப்பட்டதாகக் கூறும் புகார்தாரர் ஒருவர் கூட இல்லை. தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் திசை திருப்ப, வஞ்சகம், பொய்களால் முன்கூட்டியே திட்டமிட்டு, ஜோடிக்கப்பட்ட நடவடிக்கை இது. சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற எந்தவொரு கூட்டணியினராலும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜ அடையப் போகும் தோல்வியைத் தடுக்க முடியாது.

அசையா சொத்துகளை அடமானம் வைத்தே கடன் பெறப்பட்ட நிலையிலும், பணப் பரிமாற்றத்தில் விதிமீறல் இல்லாத நிலையிலும், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமாக திகழும் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துகளை முடக்குவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது ஒரு அப்பட்டமான சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கையாகும். இத்தகைய அற்பத்தனமான பழிவாங்கும் உத்தியை வைத்து எந்த வகையிலும் இந்திய தேசிய காங்கிரசை அச்சுறுத்த முடியாது. இதை சட்டரீதியாக காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நேஷனல் ஹெரால்டு சொத்துகளை முடக்குவது ஒன்றிய பாஜ அரசின் அப்பட்டமான சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கை: திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டது என்று கே.எஸ்.அழகிரி தாக்கு appeared first on Dinakaran.

Tags : KS Alagiri ,National Herald ,Union BJP government ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,President ,KS Azhagiri ,All India Congress ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...