×

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நவ.23ம் தேதி ஈரோட்டில் கருத்தரங்கம்

 

ஈரோடு, நவ. 22: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி, நவம்பர் 23ம் தேதி ஈரோட்டில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் நிகழ்வாக இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு கருதப்படுகிறது.

2030ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை எட்டுவதை நோக்கிய தமிழ்நாடு அரசின் தளர்வறியாப் பயணத்தில் முக்கிய படிநிலை இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆகும். எனவே, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்னோட்டமாக நவம்பர் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்குக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் வணிக நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

தொழில் நிறுவனங்கள் தொடங்கவும், தொய்வின்றி நடத்தவுமான அரசு சார் நடைமுறைகள், அரசு தரும் ஆதரவுகள், தொழில்நுட்ப, நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உரிய ஆளுமைகள், வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உரை நிகழ்த்துவர். தொழில் துறையினர், வணிகர்கள், தொழில் முனைவோர்கள், கைவினைஞர்கள், தொழில் வணிக வல்லுநர்கள், ஆலோசகர்கள், கல்வி நிறுவன வழிகாட்டிகள், சுயதொழில் ஊக்குநர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post உலக முதலீட்டாளர்கள் மாநாடு நவ.23ம் தேதி ஈரோட்டில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : World Investors Conference Seminar ,Erode ,World Investors Conference ,Dinakaran ,
× RELATED உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்,...