×

கார் கம்பெனி ஊழியர் உட்பட 2 பேரின் மண்டை உடைத்து கொள்ளை முயற்சி முகமூடி கும்பலுக்கு வலை வந்தவாசி அருகே நள்ளிரவு துணிகரம்

வந்தவாசி, நவ. 22: வந்தவாசி அருகே நள்ளிவில் கார் கம்பெனி ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கும்பல், 2 பேரின் மண்டையை உடைத்துவிட்டு தப்பி சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவரது மனைவி வடிவுக்கரசி. மகன் வேல்முருகன்(27). சென்னை ஒரகடத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு 8 மாதத்தில் லக்‌ஷனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் வீட்டின் வெளிபுறத்தில் உள்ள வராண்டாவிலும், வேல்முருகன், அவரது மனைவி, மகள் மற்றும் தாயார் வடிவுகரசி ஆகியோர் வீட்டிற்குள்ளும் தூங்கிக்கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்குள் யாரோ நடமாடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வேல்முருகன் கண் விழித்து பார்த்தபோது பிரிட்ஜ் அருகே முகமூடி அணிந்த மர்ம ஆசாமி ஒருவர் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டதும் உடல்நிலை பாதித்த நிலையில் வராண்டாவில் படுத்திருந்த ரமேஷ் எழுந்து கூச்சலிட்டாராம். அப்போது வீட்டின் மற்றொரு அறையில் இருந்து 2 பேரும், சமையல் அறையில் இருந்து ஒருவரும் முகமூடி அணிந்துகொண்டு பையுடன் ெவளியே ஓடி வந்துள்ளனர். அவர்களை பிடிக்க முயன்றபோது முகமூடி ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த கட்டையால் வேல்முருகனை சரமாரி தாக்கிவிட்டு வீட்டின் பின்பக்க வழியாக ஓடியுள்ளனர். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த வேல்முருகன், முகமூடி கும்பலை பிடிக்க முயன்றபோது அணிந்திருந்த முகமூடியும், துண்டும் கீழே விழுந்துள்ளது. அவர்களை துரத்தி சென்றபோது வீட்டிற்கு வெளியே செடிகளுக்கு அருகே நின்றிருந்த மற்றொரு முகமூடி ஆசாமியுடன் சேர்ந்து 5பேரும் தப்பியோடியுள்ளனர்.

அப்போது சத்தம் கேட்டு எதிரில் வீட்டில் இருந்த வெளியே வந்த ரங்கநாதன்(50) கொள்ளை கும்பலை பிடிக்க முயன்றார். அவரையும், கொள்ளை கும்பல் தடியால் தாக்கியதில் அவரது மண்டையும் உடைந்தது. விவசாய நிலம் வழியாக தப்பிய கும்பல் மருதாடு கிராமத்தில் உள்ள புறவழிச்சாலையில் நிறுத்தி வைத்திருந்த 2பைக்குகளில் தப்பி சென்றுள்ளது. இந்த கொள்ளை கும்பல் எடுத்து சென்ற பையை விவசாய நிலத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அதில் பத்திரம் மற்றும் நகைக்கடை மணிபர்ஸ்கள் இருந்தது. அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து வேல்முருகன் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டிஎஸ்பி ராஜூ, இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர் சுந்தரராஜன் மற்றும் குழுவினர் தடயங்களை சேகரித்தனர். திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் வீராவை வரவழைத்து துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டின் பின்புறமாக ஓடி சென்று புறவழி சாலை அருகே நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முகமூடி கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கார் கம்பெனி ஊழியர் உட்பட 2 பேரின் மண்டை உடைத்து கொள்ளை முயற்சி முகமூடி கும்பலுக்கு வலை வந்தவாசி அருகே நள்ளிரவு துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Velabandavasi ,Vandavasi ,Nallivil ,
× RELATED (தி.மலை) கர்ப்பமாக்கி கடத்திய நெல்...