×

மழையால் வீட்டின் சுவர் இடிந்து பள்ளி மாணவி பலி கலசபாக்கம் அருகே பரிதாபம்

கலசபாக்கம், ஜூன் 6: கலசபாக்கம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவி பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சி, மதுரா வடகரை நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சுசி(14). இவர் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை மாணவி சுசி வீட்டின் அருகே விறகு எடுத்துக்கொண்டிருந்தார். அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இவரது வீட்டின் சுவர் திடீரென இடிந்து சுசி மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு வீரலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டின் சுவர் இடிந்து மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மழையால் வீட்டின் சுவர் இடிந்து பள்ளி மாணவி பலி கலசபாக்கம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Munuswamy ,Nammayanthal ,Mathura Vadakarai ,Melchozhanguppam Panchayat, Tiruvannamalai District ,
× RELATED கலசபாக்கம் அருகே பரிதாபம்: மழையால் வீட்டின் சுவர் இடிந்து பள்ளி மாணவி பலி