×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 27 மாடியில் பிரமாண்ட கட்டிடம்: 400 கோடியில் மத்திய சதுக்கம் அமைப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 27 மாடியில் பிரமாண்ட கட்டிடம் கட்டும் பணிக்காக டெண்டர் விடும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். சென்னை மாநகரமானது நாளுக்கு நாள் பொருளாதாரத்திலும், சமூக அளவிலும் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் வாழ்வதற்கு ஏற்ற நகரமாக விளங்குவதால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு படையெடுப்பவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு சென்னை மாநகரின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தற்போது சென்னையை அழகுபடுத்தும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி சென்னை மாநகரின் தரம் உயர்ந்து கொண்டே சென்றாலும், சென்னை மக்களின் மிகப் பெரிய பிரச்னையாக விளங்குவது போக்குவரத்து நெரிசல் என்றே சொல்லலாம். அதுவும் ‘பீக் அவர்ஸ்’களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதற்கு மக்கள் தடுமாறுவதை அதிகமாக காண முடிகிறது. இத்தகையை நிலையை போக்க சென்னையின் முக்கிய பகுதிகளில் அடுக்குமாடி பார்க்கிங் அமைக்கும் வசதிகளை சென்னை மாநகராட்சி கட்டி வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், சென்னையின் மையப் பகுதியில் கம்பீரமாக செயல்படும், தமிழகத்தின் மிகப் பழமைவாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையால் பார்க்கிங் வசதி இல்லாமல் திணறி வருகிறது.

குறிப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையமானது ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ரயில்களைக் கையாளும் நிலையமாக உள்ளது. சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இட நெருக்கடி என்பது பயணிகளுக்கும், பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை சென்ட்ரலுக்கு வரும் பயணிகள் வாகனங்களை நிறுத்த பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. மேலும், வரும் காலத்தில், வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பல அடுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், இங்கு 27 மாடி கொண்ட மெகா கட்டிடம் ஒன்றை கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ரூ.400 கோடி செலவில் ‘மத்திய சதுக்கம்’ (சென்ட்ரல் ஸ்கொயர்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரல், மெட்ரோ ரயில் நிலையம், ரிப்பன் வளாகம், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பூங்கா நகர் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைத்து ஒரே சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மேலும் இச்சுரங்கப்பாதையை சென்னையின் அடையாளமாக மாற்றும் அளவிற்கு அழகிய செடிகள், நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ‘மத்திய சதுக்கம்’ பகுதிக்கு வருகின்றனர். இப்படி பரபரப்பாக மக்கள் கூடும் இடத்தில் தான், அடுத்தகட்டமாக 27 மாடியில் பிரமாண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் வரும் பயணிகளின் வசதிக்காகவும் மெட்ரோ ரயில் பயன்படுத்தும் பயணிகளின் வசதிக்காகவும் இந்த மெகா பார்க்கிங் கட்டிடம் கட்டப்பட உள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்ல எளிதாக இருக்கும் வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 27 மாடிக் கட்டிடம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, 8 நிலைகளுடன் கூடிய பிரமாண்டமான வாகன நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டு தயாராக உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 1,650 இருசக்கர வாகனங்கள் மற்றும் 600 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 2,250 வாகனங்கள் நிறுத்தலாம். முதலில், இங்கு 33 அடுக்கு கட்டிடத்தை கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் பின்னர் இரு கட்டிடங்களை அமைக்கும் திட்டமே முதலில் இறுதி செய்யப்பட்டது, இருப்பினும், ஏற்கெனவே இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், 2 கட்டிடம் என்பது அதை மேலும் மோசமாக்கும் என்பதால், மாற்றுத்திட்டங்கள் யோசிக்கப்பட்டன. தற்போது, 27 மாடிகளைக் கொண்ட ஒரே கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும் வகையில் அடுத்த மாதம் ஒப்பந்த புள்ளி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்தும் வகையில் ஆலோசகர் ஒருவரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நியமித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 27 மாடியில் பிரமாண்ட கட்டிடம்: 400 கோடியில் மத்திய சதுக்கம் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Central Railway Station ,Metro Rail ,Chennai Metro Rail Corporation ,Central Railway Station ,Chennai Central Railway Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில்...