×

சில்லிபாயின்ட்…

* ஆஸி.யில் நடைபெறும் மகளிர் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ், சிட்னி தண்டர் அணிகள் மோதின. சிட்னியில் நடந்த அந்த ஆட்டத்தில் அடிலெய்டு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன் குவித்தது (வுல்வார்ட் 70* ரன்). சிட்னி தண்டர் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 118 ரன் மட்டுமே சேர்த்தது. அதனால் அடிலெய்டு 3 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் பைனல் வாய்ப்பை நெருங்கி உள்ளது.

* உலக கோப்பை தோல்விக்கு சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டதும், தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டதும் ஒரு காரணம் என விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு அதே சூரியகுமாரை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணிப்பது, உலக கோப்பை பைனலுக்கு கிரிக்கெட்டுக்கு தொடர்பில்லாத விஐபிகளை எல்லாம் அழைத்த பிசிசிஐ, உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு அழைப்பு விடுக்காதது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

* ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் பந்துவீச்சில் தாமதம் செய்வதை தவிர்க்கும் வகையில், நடுவர்கள் ‘ஸ்டாப் வாட்ச்’ உபயோகித்து குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை பூர்த்தி செய்ய உதவ உள்ளனர். ஒரு நிமிடத்துக்குள்ளாக அடுத்த ஓவரை தொடங்காமல் 3 முறை தவறிழைத்தால் 5 ரன் அபராதம் விதிக்கவும் ஐசிசி முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் டிசம்பர் முதல் 2024 ஏப்ரல் வரை பரீட்சார்த்த அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும்.

* இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ (34 வயது) சேர்க்கப்படவில்லை. 2027 ஒருநாள் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தலைவர் டெஸ்மாண்ட் ஹெயின்ஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் ‘சிஸ்டம் சரியில்லை’ அது மீண்டும் தோல்வியடைந்துள்ளது என்று டேரன் பிராவோ சகோதரரும் முன்னாள் நட்சத்திர வீரருமான டுவைன் பிராவோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

The post சில்லிபாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Adelaide Strikers ,Sydney Thunder ,Women's Big Bash League T20 ,Aussie ,Sillypoint ,Dinakaran ,
× RELATED ஸ்டாய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி