×

நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரம்: இயந்திர நடவுகளில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்


நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்து நிலையில், இயந்திர நடவுகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடவு பணிகளுக்கு கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் என செலவிட்டு இயந்திர நடவுகளை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்தாண்டு பிசான சாகுபடியும், இவ்வாண்டு கார் சாகுபடியும் பொய்த்த நிலையில், விவசாயிகளுக்கு தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை சற்று ஆறுதலாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளிலும் ஓரளவுக்கு நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. குளங்கள், கிணறுகளில் தற்போது தண்ணீர் பெருகி வரும் நிலையில், விவசாயிகள் பிசான சாகுபடியை நடத்திவிடலாம் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நெல்லை சுற்றுவட்டார பகுதி வயல்களில் தொளி அடித்தல், நாற்றங்கால் அமைத்தல், நேரடி நெல் பாவுதல், நீரை வடிகட்டுதல் உள்ளிட்ட பணிகள் முனைப்புடன் நடந்து வருகின்றன. விவசாயிகள் வழக்கமாக பிசான சாகுபடியில் சிறிய நெல் ரகங்களுக்கு பதிலாக அம்பை 16 உள்ளிட்ட பெரிய ரக விதைகளை பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்வது வழக்கம். சமீபகாலமாக சிறிய ரக அரிசி வகைகளுக்கு நல்ல டிமான்ட் உள்ளதால், அவற்றை பயிரிட்டு சாகுபடியில் லாபத்தை அள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை சுற்றுவட்டாரங்களில் விவசாயிகள் இயந்திர சாகுபடியிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பேட்டை, நரசிங்கநல்லூர், கருங்காடு, பாளை அருகே மணப்டைவீடு, சீவலப்பேரி பகுதிகளில் விவசாயிகள் ஏக்கர் கணக்கில் இயந்திர நடவுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக வயல்களை உழுது, தொழி அடித்த நிலையில், மெழுகு தன்மையோடு இயந்திர நடவு செய்வோரிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். அவர்கள் ஒரு ஏக்கருக்கு 100 துண்டுகள் என அடிப்படையில் நாற்றாங்காலில் நெல் நாற்றுக்களை வளர்த்து வயல்களில் இயந்திரங்கள் மூலம் நடவு செய்து கொடுக்கின்றனர். இதுகுறித்து இயந்திர நடவு மேற்கொள்ளும் பேட்டையை சேர்ந்த குமார் கூறுகையில் ‘‘ஈரமும், மெழுகுதன்மையும் கலந்த வயலில் நாங்கள் முதலில் பாலிதீன் பாய்களை விரிப்போம். அதன்மேல் ஏக்கருக்கு 100 துண்டுகள் என கணக்கிட்டு, எத்தனை ஏக்கர் தேவையோ அதற்கேற்ப விதைகளை இடுவோம். விதைகள் வளரும் முன்பு செங்கல் அறுப்பது போல சதுர வடிவில் பிரேம் அமைத்துவிடுவோம். நெல் விதைகளை கொக்கு போன்ற பறவைகள் கொத்தாமல் இருக்கவும், சூடு அதிகரிக்கவும் சேலைகள் கொண்டு மூடிவிடுவோம்.

8 முதல் 10 தினங்களுக்குள் விதைகள் வளர்ந்து நாற்றுக்களாக மாறி காட்சியளிக்கும். இடைப்பட்ட நாட்களில் தேவையான தண்ணீரையும் நாற்றுகளுக்கு பாய்ச்சுவோம். நாற்றுகள் வளர்ந்தவுடன் அவற்றை ஆட்கள் மூலம் கொண்டு வயல்களில் இயந்திர நடவை மேற்கொள்வோம். ஒரு ஏக்கர் நடுவைக்கு ரூ.3500 வரை கூலி கிடைக்கிறது. தொலை தூரங்களில் உள்ள இடங்கள் என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.4500 வாங்குவோம்’’ என்றார். நெல்லை சுற்றுவட்டாரங்களில் தற்போது பொன்னி, வெள்ளை பொன்னி போன்ற ரகங்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டும் நிலையில், அவற்றையே இயந்திர நடவு மூலம் வெகு நேர்த்தியாக நடவு செய்து வருகின்றனர். வேலையாட்கள் கிடைக்கும் இடங்களில் சில விவசாயிகள் பாரம்பரியமாக தங்கள் பயிரிடும் அம்பை 16, ஆடுதுறை நெல் ரகங்களையும் பயிரிட்டு வருகின்றனர். அவர்கள் நேரடி நெல் விதைப்பில் ஆர்வம் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

The post நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரம்: இயந்திர நடவுகளில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Paddy District ,Nellai ,Nellai district ,Dinakaran ,
× RELATED முண்டந்துறை வனப்பகுதியில்...