×
Saravana Stores

முண்டந்துறை வனப்பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண் குட்டியானை சாவு


விகேபுரம்: முண்டந்துறையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண் குட்டியானை பரிதாபமாக இறந்தது. நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலி, யானை, கரடி, மிளா, மான், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், பல்வேறு உயர் ரக மரங்களும் உள்ளன. இதையடுத்து களக்காடு – முண்டந்துறை புலிகள் வனக்காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் வனச்சரகம் தைலாத்து ஓடை பீட்டில் பிராந்தி ஓடை பகுதியில் சேர்வலாறு நீர்த்தேக்க பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பெண் குட்டியானை தவறி விழுந்துள்ளது. தண்ணீரில் அடித்து வரப்பட்டு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் குட்டி யானை இறந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டக துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் வனச்சரகர் கல்யாணி, வனத்துறை கால்நடை மருத்துவர் மகேந்திரன், வன கால்நடை பேராசிரியர் மற்றும் நெல்லை கால்நடை மருத்துவமனை உடற்கூறியல் துறை தலைவர் முத்துகிருஷ்ணன், வன கால்நடை குழுவினர்கள், வனப் பணியாளர்கள் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண்குட்டி யானையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

The post முண்டந்துறை வனப்பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண் குட்டியானை சாவு appeared first on Dinakaran.

Tags : Mundanthurai forest ,Vikepuram ,Mundanthurai ,Western Ghats ,Nellai district ,
× RELATED விகேபுரம் அருகே பூட்டிய வீட்டினுள் அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு