×

காருக்குள் இறந்த நிலையில் கிடந்த பிரபல மலையாள நடிகரின் மரணத்தில் மர்மம் நீடிப்பு: போலீசார் தீவிர விசாரணை


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே காருக்குள் சடமாக கிடந்த பிரபல மலையாள நடிகர் வினோத் தாமசின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த தீர்மானித்து உள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மீனடம் பகுதியை சேர்ந்தவர் வினோத் தாமஸ் (47). பிரபல நடிகர் ஆவார். ஐயப்பனும் கோஷியும், ஜூன், ஹேப்பி வெட்டிங், அயாள் சசி, ஒருமுறை வந்து பார்த்தாயா உள்பட பல மலையாளப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார். இந்தநிலையில் கடந்த 18ம் தேதி கோட்டயம் பாம்பாடி பகுதியில் உள்ள ஒரு மது பாருக்கு காரில் வந்தார்.

நீண்ட நேரமாக அவரது கார் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது. காரில் இருந்து இறங்காததால் சந்தேகம் அடைந்தவர்கள் சென்று பார்த்தனர். அப்போது வினோத் தாமஸ் காருக்குள் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்ததும் பாம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். வினோத் தாமஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் ஏசியை தொடர்ந்து இயக்கியதால் விஷப் புகை வெளியாகி அதை சுவாசித்து அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்தது தான் வினோத் தாமசின் மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. காருக்குள் கார்பன் மோனாக்சைடு வாயு எப்படி வந்தது? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார், மோட்டார் வாகனத் துறையினர் நடத்திய பரிசோதனையில் காரில் எந்த பழுதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மெக்கானிக்கல் இன்ஜினியர்களை வரவழைத்து காரில் கூடுதல் பரிசோதனைகள் நடத்த போலீசார் தீர்மானித்து உள்ளனர்.

குறும்படத்தில்…
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வினோத் தாமஸ் ஒரு குறும்படத்தில் நடித்து இருந்தார். அது காருக்குள் ஏற்படும் மின் கசிவு, ஏசியில் இருந்து வெளியாகும் விஷப்புகை உள்பட விபத்துகளால் நடக்கும் மரணங்களை தவிர்ப்பது எப்படி? என்பதை விளக்கும் படமாகும். அந்த படத்தில் வினோத் தாமஸ் விஷப்புகையை சுவாசித்து மரணமடையும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதேபோலவே தற்போது அவரது மரணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post காருக்குள் இறந்த நிலையில் கிடந்த பிரபல மலையாள நடிகரின் மரணத்தில் மர்மம் நீடிப்பு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Vinod Thomas ,Kerala ,Kottayam ,
× RELATED கொல்லம் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை