×

சொர்க்க நரகங்களைவிட சிறந்தது இந்த பூ உலகமே!

அபிராமி அந்தாதி – சக்தி தத்துவம்

“அயனும் பரவும்”

“அயனும்” என்பதனால் படைத்தல் தொழிலை செய்யும் பிரம்ம பதவியில் உள்ள தேவதையான பிரம்மாவையே குறிப்பிடுகிறார். ஆன்மாக்களுக்கு உடலை படைத்து தருவதே இவர் வேலை. கரும வினைகளுக்கு தக்கவாறு அந்த உடலானது அமையும். மேலும், ஆன்ம அறிவுக்கு தக்கவாறு அமையும். இதை ‘படைத்தும்…. திபவராம்’ (26) என்பதிலிருந்து அறியலாம். ஒவ்வொரு அண்டத்திலும் ஒரு பிரம்ம பதவியிருக்கும் அந்தந்த பிரம்மாக்கள், அந்தந்த உலகிற்கு தகுந்தார் போல் யாக்கைகளை அமைப்பர்.

(உதா) பூ உலகத்தில் வாழும் ஆன்மாக்களுக்கு யாக்கையான அஸ்தி, சுக்லம், ரத்த, மாமிரச, மஜ்ஜா போன்ற ஏழுவகை தாதுக்களால் அமைந்திருக்கும். பித்ரு லோகத்தில் உள்ள ஆன்மாக்களானது காற்று வடிவத்திலிருக்கும், தேவலோகத்தில் இருக்கும் ஆன்மாக்களுக்கு ஒளியுடல் அமைந்திருக்கும். இதுபோல் பிற உலகத்திற்கும் என உணர்ந்து கொள்ள வேண்டியது. இவை அனைத்திற்கும் உமையம்மையே தலைவி. ‘ஸ்ருஷ்டி கர்த்த பிரம்ம ரூபினி’ உமையம்மை படைப் பவள். பிரம்மாவின் வடிவில் இருப்பாள் என்பதனால் அறியலாம்.

மேலும், பிராம்மி என்ற சக்தியானவள் பிரம்மாவிற்கு படைக்கும் தொழிலுக்கு உதவுபவளாவாள். மேலும், சப்த ப்ரஜாபதி என்று ஆன்மாவின் அறிவு சார்ந்து ஓர் அறிவு, ஈர் அறிவு என்று உடலானது அறிவு சார்ந்து ஏழு உடலாக படைக்கப்படுகிறது. அதாவது மரம், நத்தை, பாம்பு, பறவை, விலங்கு, மனிதன், தேவதை என்று உடல் சார்ந்தே ஆன்மாக்கள் பெயர் பெறுகிறது. “அய” என்ற சொல்லிற்கு தமிழில் பரப்புவது என்று பொருள். இது ஆலமரத்தை குறிக்கிறது. ஆலமரமானது தனது விழுதுகளால் ஊன்றி தன் பரப்பளவை அதிகப்படுத்திக்கொள்ளும் அது போலவே, சப்த ப்ரஜாபதிகளும் தன் வம்சத்தை குழந்தைகள் பெறுவதால் வளர்கிறார்கள்.

இதை மையமாகக் கொண்டே அயன் என்று பிரம்மாவை குறிப்பிட்டார். “அயனும் பரவும்” என்பதனால் பிரம்மாவையும் அவர் பணியும் அவர் செய்யும் படைக்கும் தொழிலையும் சேர்த்தே குறிப்பிட்டு இருக்கிறார். பரவும் என்பதற்கு வழிபாடு செய்வது என்பது பொருள். பிரம்மா தன் தொழிலை செய்ய உமையம்மையை வணங்குகிறார் என்கிறது திருக்கடையூர் தலபுராணம். அதையும் சூட்டியே “அயனும் பரவும்” என்கிறார்.

“அபிராம வல்லி அடியிணையை”

“அபிராம வல்லி” என்ற சொல்லை ஐந்து பொருளில் பயன்படுத்துகிறார். இந்த பாடலை பொறுத்தவரை வேதமும் என்ற சொல்லால் ஆன்மாக்களையும் அவர்களின் பொருட்டு பிரம்மா, விஷ்ணு, ருத்ர என்ற மூன்று தேவதைகளுக்கும் அருள்புரிந்தவாய் குறிப்பிடுகின்றார். இம்மூவருமே திருக்கடவூரில் உள்ள உமையம்மையையும், சிவபெருமானையும் பூஜித்து பேறு பெற்றார்கள் என்கிறது திருக்கடவூர் தலபுராணம். அதன்வழி ஒரு முகூர்த்தத்தில் உற்பத்தியாகும் வில்வ விதையை நட்டு பூஜித்தார் பிரம்மா. இதனால், வில்வ வனம் என்பது திருக்கடவூருக்கு பெயர்.

கள்ள வாரணரால் அமிர்தம் லிங்கமான பிறகு தேவர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு தனது அனைத்து ஆபரணங்களையும் ஒன்றாக இணைத்து அதிலிருந்து உமையம்மையைத் தோற்றி வழிபாடு செய்தார் விஷ்ணு, அவர்தான் அமிர்தநாராயண பெருமாள் என்று இன்றும் கோயிலில் எழுந்தருளியுள்ளதைக் காணலாம். அமிர்தத்தை பெற வேண்டி இரண்டு அஸ்வினி தேவர்கள், அஷ்ட வசுக்கள், துவாதச ஆதித்யர்கள், ஏகாதசருத்தர்கள், முப்பத்து முக்கோடி தேவர்களும் திருக்கடவூரில் பூஜித்தனர் என்கிறது தலபுராணம். அதன் சான்றாக அஸ்வினி தேவர்கள், அஷ்ட வசுக்கள் சிவ சூரியனை தவிர்த்து.

மேலும், ஒரு சூரியன் காலசம்ஹாரமூர்த்திக்கு பதினோரு அபிஷேகம் என்பதை கொண்டு அவர்கள் வழிபட்டதை அறியலாம். மேலும், இவர்கள் அனைவருக்கும் மானுட தேகம் தாங்கிய ஆன்மாக்களான காரி நாயனார், கலய நாயனார், மார்க்கண்டேயர் இவர்களுக்கு அருளியதையே “வேதமும்” என்ற சொல்லால் அபிராமி அம்மையானவள் ‘மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும்’ (4) என்பதனால் அறியலாம்.

இவர்களுக்கு அருள்செய்த உமையம்மையையே “அபிராமவல்லி” என்றும், அவர்களே பூசித்ததை முன்னர் சொன்ன “பரவும்” என்ற வார்த்தையாலும் மேலும் “அடியிணையை” என்றால் இவர்கள் அனைவருக்கும் அருள் செய்த உயர்ந்த திருவடியை குறிப்பிடுகிறார். இதை ‘பத்ம பதயுகம் சூடும் பணி’ (27) என்பதனால் பூசனையையே “அடியிணையை” என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

“பயனென்று கொண்டவர்”

என்ற வார்த்தையால் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொருள், ஆற்றல், செயல்பாடு, பதவி இவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் உபாசனை நெறியினாலேயே உமையம்மையை வழிபடுவதையே தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள செய்யும் வழிபாட்டையே, வழிபாட்டினால் பெறும் பயனையே விருப்பமாகக் கொண்ட மனிதர்கள், முனிவர்கள், சிறுதேவர்கள், முதல் தேவர்கள் என்று வழிபட்டு பேறு பெற்றவர்களையும் இப்பொழுது வழிபட்டு கொண்டிருப்பவர்களையும் இனி வழிபடப் போகிறவர்களையும் “பயனென்று கொண்டவர்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

இதை ‘வந்திப்பர் உன்னை வானவர் தானவர் ஆனவர்’ (14) ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன், ‘போதில் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி, காதிபெருபடை கந்தன், கணபதி, காமன்’ (97) இவர்கள் அனைவரையுமே குறிப்பிடுகின்றார். இலக்கை இயம்புவது இலக்கணம். இலக்கு என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்ற புருஷார்த்தம் எனப்படும். வடமொழியில் தர்ம அர்த்த காம மோட்சத்தையே பூசனையின் பயனால் அடைகிறார்கள். அதை அடைவிக்கும் செயலாக பூசனையையே கருதுபவர்களை “பயனென்று கொண்டவர்” என்கிறார்.

இதை ‘சரணம் அரண் நமக்கே’ (15) என்பதனால் அறியலாம். ‘விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும்’ (15) என்பதனாலும் அறியலாம். ‘பரமென்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பக்தருக்குள் தரமன்று இவனென்று தள்ளத் தகாது’ (88) என்பதனால் உமையம்மையினிடத்து அன்பு கொண்டு அவளது அருளையே பயனாக கொண்டு பக்தி செய்தலையே தொழிலாக கொண்ட வரையே “பயனென்று கொண்டவர்” என்கிறார்.

“பாவையர் ஆடவும்”

பூவுலகத்தில் வழிபாடு செய்த ஆன்மாக்கள், அறத்தை செய்த ஆன்மாக்கள் உடல் நீங்கிய பிறகு சொர்க்கத்தை அடையும். சொர்க்கத்தில் இருக்கும் அளவற்ற அழகுடைய அப்சரஸ் என்னும் ஆடல் மங்கையர்களான தேவ பொதுமகளிர் தன்னைச் சார்ந்த ஆன்மாக்களை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவற்றின் எண்ணங்களை ஒரு சிறிதும் மாறுபடாமல் நிறைவேற்றுவர்களாகவும் இருப்பார்கள். ஊர்வசி, மேனகா, ரம்பா, திலோத்தமா, க்ருதாச்சி, சுகேசி, காமினி, காமவர்தினி இவர்கள் அனைவருமே உபாசகன் பூவுலகத்தில் இழந்த செல்வங்கள் புலன் இன்பங்கள் அவற்றை தவத்தின் பொருட்டு இழந்ததனால் மேல் உலகத்தில் செல்வமாக தருவர். இது பூவுலக இன்பங்களைப் போல் அல்ல என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

பூவுலக இன்பத்திற்கு சரீர ஆனந்தம் என்று பெயர். ஆன்மா ஆனந்தமான முக்தி என்பது சிவானந்தத்தை குறித்தது. இதையெல்லாம் மனதில்கொண்டே “பாவையர் ஆடவும்” என்கிறார்.

“பாடவும்”

என்ற வார்த்தையினால் தேவ உலகத்தில் வசிக்கும் ஆன்மாக்களுக்கு ஒளி மற்றும் ஒலியே உணவாக கருதப்படுகிறது. அந்த வகையில் சந்திரன் கிரணத்தையும், முன்சொன்ன ஆடல் மகளிர்களின் ஒளி பண்பையும் உணவாக கொள்வார்கள். அது ஆன்மாவிற்கு உணவை தரும். நாம் கருதுவது போன்ற உடலல்ல. ஒலி உடலை பெற்றவர்கள். ஹாஹா, ஹூஹூ, விச்வாவஸூ, சித்ராங்கத, சித்ரரத, கந்தர்வ, விலோசனீ, விலாங்க இந்த எண்வரும் ஒலி உடலை பெற்றவர்கள். சொர்க்கலோகத்தில் இருக்கும் ஆன்மாக்களானது மகிழ்ச்சியடையும்.

உதாரணமாய் வாய்க்கு அறுசுவை உணவு, கண்ணுக்கு நல்ல காட்சி, காதுக்கு இனிய இசை, மெய்க்கு சீதோஷணம், மனதிற்கு புகழ், அன்பு, காதல், அமைதி போன்ற உணர்வு எப்படி பூவுலகத்தில் இருக்கிறதோ அதுபோல், மேல் உள்ள தேவ உலகத்தில் வசிக்கும் ஆன்மாக்களுக்கு சுகமளிக்கும், உணவளிக்கும் இந்த எட்டு தேவதைகளையே “பாடவும்” என்கிறார்.

“பொன் சயனம் பொருந்து”

என்பதனால் தேவர் உலகத்தில் இருக்கும் ஆன்மாக்கள் தங்குவதற்கு உண்டான இடத்தை குறிப்பிடுகிறார். குருவி கூட்டிலும், பாம்புப் புற்றிலும் மகிழ்வாக தங்கும். அதுபோல சொர்க்க லோகத்தில் உள்ள ஆன்மாவானது பொன் சயனம் என்னும் தங்க ஒளியினால் ஆன இருப்பிடத்தில் தங்கும் அதையே இங்கு பட்டர் குறிப்பிடுகின்றார். அந்த வீட்டில் ஆன்மா மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு பூலோகத்தில் உள்ள நீச்சல்குளம், விளையாட்டு இடம், பூங்கா, போக்குவரத்து வசதி என்பது போல மேல் உலகத்தில் கங்கை சொர்ணநதி என்ற நதியும், நந்தனம் என்ற வனமும், இருக்கிறது என்கிறார்.

அதை பயன்படுத்தி ஆன்மாக்கள் மகிழலாம். மேலும், வெளியிடத்திற்கு சென்று வர அஸ்வ என்ற ஒளி கற்றறைகளால் ஆன யானம் [போக்குவரத்து சாதனம்] இருக்கும். மேலும், அமுதம் என்ற நீர் உணவு சிறப்பாக இருக்கும். தேவ வைத்தியர்கள் இருப்பார்கள். இவர்கள் அஸ்வினி தேவர்கள் எனப்படுவார்கள். இது மகிழ்ச்சியான ஆன்மா இருப்பதற்கான சூழலையே “பொன் சயனம் பொருந்து” என்கிறார்.

“தமனியக் காவினில்”

தேவர் உலக காடு என்பது அதன் பொருள். இதில் மந்தாரம், பாரிஜாதம், சந்தன கல் பவிருக்ஷ, ஹரி சந்தன என்பது ஆன்மாக்களுக்கு மகிழ்வூட்டக்கூடிய மரங்கள் என்கிறார்கள். இம்மரத்தின் கீழ் இருந்து ஆன்மாக்கள் என்ன நினைக்கிறதோ அதை உடனடியாக தோற்றுவிக்க வல்லது. அனுபவச் சாத்தியப் படுத்தி தருவது இந்த மரங்களை பேணி வளர்ப்பது மந்தாகினி, சுரதீர்த்தம், சுர் நதி, வியத்கங்கா, சரோஜினி என்ற ஐவகை நதிகள் அம்மரத்திற்கு செழிப்பூட்டுகிறது. இந்த நதிகள் ஐந்தும் ஆன்மாக்களுக்கு அகஇன்பத்தை அளிக்க வல்லது.

இம்மரங்களானவை புற இன்பத்தை தருபவை. சுதர்மா என்ற ஒரு பெரிய தேவர்கள் கூடும் சபை உள்ளது. அங்கிருந்தபடியே அனைத்து உலகங்களில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். பூவுலகத்தில் உள்ளவர்களை மேலுலகத்தில் உள்ளவர்கள் காண்பார்கள். மேலும், சொர்க்கத்தில் வாழ்பவர்களுக்கு பிணி, மூப்பு சாக்காடு என்ற வருந்தத்தக்க இயல்புகள் ஏதுவுமில்லை. புண்ணியம் செய்த ஆன்மாக்களுக்கு நன்மை மகிழ்ச்சியை தருவதை
“தமனியக் காவினில்” என்கிறார்.

“தங்குவரே”

என்ற சொல்லால் உலகத்திலுள்ள புண்ணியம் செய்த ஆன்மாக்கள் சொர்க்கத்திலும் பாவம் செய்த ஆன்மாக்கள் நரகத்திலும் தங்குவார்கள். பாவ – புண்ணிய அளவைப் பொறுத்தே தங்கும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தக் காலத்தையே “தங்குவர்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். தங்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்தான் அதன்பின் பிறப்பெடுத்து பாவ புண்ணியங்களை ஈட்ட வேண்டும். இதை குறிப்பிடவே “தங்குவர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

பூவுலகம் என்பது பாவ புண்ணியங்களை ஈட்டும் இடமாகும். சொர்க்கத்திலோ, நரகத்திலோ, பாவ புண்ணியத்தை ஈட்ட முடியாது அனுபவிக்க முடியும். அதனால் தான் சொர்க்க நரகங்களைவிட சிறந்தது இந்த பூவுலகமே. இந்தப் பூவுலகத்தில் தேவர்களும் வந்து பூஜிக்கிறார்கள். காரணம், பாவ புண்ணியத்தின் வழியேதான் வழிபாடு முதலியவற்றைச் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால்தான் சொர்க்கத்தில் தங்க முடியும். பெரும் செல்வத்தை திரட்ட ‘பல கோடி தவங்கள் செய்வார். மண்ணளிக்கும் செல்வமோ பெறுவர் விண்ணளிக்கும் செல்வமும்’ (15) என்பதனால் “தங்குவரே” என்கிறார்.

“அந்தமாக”

“நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும் ஆயனும் பரவும்” என்பதால் ஆன்மாக்களுக்கு உடல்களை படைத்து காத்து அழித்து, அருள்புரியும் உமையம்மையை வணங்கி. நிற்கும் முதல்தேவர் முவரையும், “அபிராமவல்லி அடியிணையை பயனென்று கொண்டாவர்” முதல்தேவர் உதவியால் தேகத்தைத் கொண்டு மேலும், வளர்வதற்கு உமையம்மையின் அருளையே நாடி நிற்கும் ஆன்மாக்களையும், “பாவையர், ஆடவும் பாடவும் பொன், சயனம் பொருந்தும் தனியக் காவினில் தங்குவரே” அப்படி நாடி நின்றோர்க்கு அருள சொர்க்கத்தின் மகிழ்ச்சிகான சூழலையும், உமையம்மையே அளிக்கிறாள் என்று வணங்கியோர் பெறும் பயனையும் குறிப்பிடுகிறார். இதனால், பாவம் செய்யாமல் புண்ணியம் செய்ய வலியுறுத்துகிறார். புண்ணியம் செய்வோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post சொர்க்க நரகங்களைவிட சிறந்தது இந்த பூ உலகமே! appeared first on Dinakaran.

Tags : Abirami Antadi ,Shakti Tattva ,Brahma ,
× RELATED நின் குறிப்பறிந்து தெளிவாக நடப்பேன்