×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகை

 

சேலம்: சேலத்தில் நாளை (22ம் தேதி) நடக்கும் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றிரவு சேலம் வருகிறார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு வரும் டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது. திமுக இளைஞரணி செயலாளராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாநாடு என்பதால், மிக பிரம்மாண்டமான முறையில், சிறப்பாக நடத்த தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார். அதன்படி சேலம் மத்திய, சேலம் மேற்கு மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நாளை (22ம் தேதி) காலை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இன்றிரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகிறார்.

இன்று மாலை நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், கார் மூலம் இரவு சேலத்திற்கு வந்து தனியார் ஹோட்டலில் தங்குகிறார். பின்னர் நாளை காலை 10 மணிக்கு சீலநாயக்கன்பட்டி-உடையாப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதன்லால் மைதானத்தில் நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ேபசுகிறார். பின்னர் இளைஞரணி மாநாடு நடக்கும் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும், அங்குள்ள அலுவலகத்தில் மாநாட்டு வரவேற்பு குழுவுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் செயல்வீரர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ேக.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட செயலாளர்கள் சேலம் மத்தியம் ராஜேந்திரன் எம்எல்ஏ, சேலம் மேற்கு டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகை appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Salem ,DMK ,Dinakaran ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...