×

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் களத்தை வலுப்படுத்தும் வகையில் பூத் கமிட்டிகளை அமைத்து அதற்கேற்ப பணிகளை மேற்கொள்வர். தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 65 ஆயிரம் பூத்துகள் உள்ளன.

அதன்படி, ஒரு பூத் ஒன்றுக்கு 20 ஆண்கள் கொண்ட ஒரு கமிட்டி, 20 பெண்கள் கொண்ட ஒரு கமிட்டி, 25 பேர் கொண்ட இளைஞர்கள், இளம் பெண்கள் கமிட்டி உருவாக்கப்பட வேண்டும். அந்தவகையில் அதிமுகவில் ஏற்கனவே பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அதனை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தமைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக பூத் கமிட்டியின் பெயர் பட்டியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. அதேபோல், பாஜ – அதிமுக கூட்டணி முறிந்துவிட்டதாக வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வந்தாலும், தற்போதும் மறைமுகமாக ஆதரவு கரத்தை அதிமுக நீட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் ஆளுநரால் திரும்பி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு முதல்வர் தனி தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு அல்லது ஆதரவா என்ற நிலையை தெரிவிக்காமலேயே பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதன் மூலம் கூட்டணி முறிவு என்று கூறி வந்தாலும் தங்களின் ஆதரவை மறைமுகமாகவே பாஜவிற்கு அளித்து வருவதாக அரசியல் விமர்சகர்களும் கருத்துகளை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து எதிர்க்கொள்வதா அல்லது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜ-அதிமுக கூட்டணி முறிந்துவிட்டதாக வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வந்தாலும், தற்போதும் மறைமுகமாக ஆதரவு கரத்தை அதிமுக நீட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,general secretary ,Dinakaran ,
× RELATED காலி மது பாட்டில்களை உடனடியாக...