×

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தீ: 40 படகுகள் எரிந்து சேதம்: சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு


திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40க்கும் ேமற்பட்ட படகுகள் எரிந்து சேதமானது. தொழில்போட்டி காரணமாக மர்ம நபர்கள் தீ வைத்தார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகள் மூலம் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். இதற்காக சுமார் 700க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதன்படி முதலாவது மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட படகுகள் வழக்கம்போல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் முதலாவது மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தியிருந்த ஒரு படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கும் காற்றின் காரணமாக வேகமாக பரவியது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அனக்காபள்ளி, விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் கடற்படை மற்றும் மரைன் போலீசாரின் தீயணைப்பு கப்பல்களும் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. அப்போது நீண்ட நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்க வேண்டும் என்பதால் மீனவர்கள், தங்களது படகில் வைத்திருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

மேலும் படகிற்கு தேவையான டீசல், பெட்ரோல் போன்றவையும் தீப்பிடித்து எரிந்தது. சிலிண்டர் வெடித்ததால், மீனவர்களை அருகில் நெருங்க விடாமல் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விடியவிடிய போராடி இன்று அதிகாலை தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் 40க்கும் ேமற்பட்ட படகுகள் எரிந்து சேதமானது. ஒவ்வொரு படகும் சுமார் ₹30 லட்சம் முதல் ₹40 லட்சம் வரை இருக்கும் என்பதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் முழுமையான சேத விவரம் தெரியவில்லை.

இந்த விபத்து காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகை நம்பியும் சுமார் 10 குடும்பங்கள் உள்ளன. படகுகளை சீரமைக்கவும், புதிதாக வாங்கவும் அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது தொழில் போட்டி காரணமாக மர்ம நபர்கள் தீ வைத்தார்களா என போலீசார் வீசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தீ: 40 படகுகள் எரிந்து சேதம்: சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Vishakhapatnam fishing harbor fire ,Tirumala ,Visakhapatnam Fishing Port ,
× RELATED ‘மார்க் போடாவிட்டால் சூனியம்...