×

ஆரணி பேரூராட்சியில் முட்புதர் காடாக மாறிய மாற்றுத்திறனாளிகள் கழிவறை: சீரமைக்க வலியுறுத்தல்


பெரியபாளையம்: ஆரணி பேரூராட்சியில் முறையான பராமரிப்பின்றி ஒரு மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கழிவறை கட்டிடம், தற்போது முட்புதர் காட்டு பகுதியாக மாறியுள்ளது. இக்கட்டிடப் பகுதிகளை உடனடியாக சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஜி.என்.செட்டி பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்காக ₹2.28 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை கட்டிடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நாளடைவில், இந்த மாற்றுத் திறனாளிகளின் கழிவறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி, தற்போது முட்புதர்கள் மற்றும் விஷப்பூச்சிகள் நிரம்பிய காட்டுப் பகுதியாக மாறி, பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது.

இதனால் இப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அவசர நேரத்தில், பிற பொது கழிவறைகளில் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இக்கழிவறை கட்டிடத்தை சீரமைப்பதற்கு, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த கழிவறை கட்டிடப் பகுதிகளில் உள்ள முட்புதர் காடுகளை அகற்றி, முறையாக சீரமைத்து, மீண்டும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஆரணி பேரூராட்சியில் முட்புதர் காடாக மாறிய மாற்றுத்திறனாளிகள் கழிவறை: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Arani Municipality ,Periyapalayam ,Arani ,
× RELATED குளோரினேஷன் செய்து சுத்தமான குடிநீர்...