×

உலக கோப்பை இறுதிப்போட்டி இன்னிங்ஸின் 14வது ஓவரின் போது பாலஸ்தீன கொடியுடன் கோலியை கட்டிப்பிடித்த இளைஞர் யார்?

* பாதுகாப்பு குளறுபடியால் பரபரப்பு
* போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

அகமதாபாத்: உலககோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்த போது, இன்னிங்ஸின் 14வது ஓவரின் போது பாலஸ்தீன கொடியுடன் மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி பேட்டிங் செய்த போது, இன்னிங்ஸின் 14வது ஓவரின் மூன்றாவது பந்தின் போது திடீரென ஒருவர், மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர் ஆடுகளத்தில் இருந்த விராட் கோலியின் அருகே சென்று அவரை பின்னால் இருந்து கட்டிப்பிடித்தார். அந்த இளைஞர், பாலஸ்தீனத்தின் கொடியுடன் கூடிய முகக்கவசம் அணிந்திருந்தார். இதையறிந்த பாதுகாப்பு படையினர், அந்த இளைஞரை பிடித்து வெளியே அழைத்து சென்றனர். அப்போது அந்த இளைஞரின் கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த இளைஞரை சந்த்கேடா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மைதானத்திற்குள் பாலஸ்தீன கொடியுடன் நுழைந்தவரின் பெயர் வெய்ன் ஜான்சன் (24) என்பது தெரியவந்தது. அவர் தன்னை ஆஸ்திரேலிய பிரஜை என்று கூறினார். அவரது பாஸ்போர்ட்டில் அவரது பெயர் இருப்பது உறுதியானது. அவரிடம் நடத்திய விசாரணையில், தனது பெயர் வெய்ன் ஜான்சன் என்றும், ஆஸ்திரேலிய குடிமகன் என்றும், விராட் கோலியை சந்திப்பதற்காக மைதானத்திற்குள் நுழைந்ததாகவும், தான் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக கூறினார். அதேநேரம் மைதானத்திற்குள் நுழையும் போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு உள்ளே வந்தார். ஆனால் இந்திய அணியின் ஜெர்சியை ஸ்டாண்டிலேயே மாற்றிவிட்டு, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் டி-சர்ட்டை அணிந்து கொண்டு களத்திற்குள் நுழைந்துள்ளார். அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினர்.

மேலும் ஐசிசி-யின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘விளையாட்டின் போது எந்த அரசியல் கோஷங்களும் அனுமதிக்கப்படாது. இந்தியாவில் நடந்த போட்டிகளிலும் அத்தகைய செயல் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கைதாகி உள்ள வெய்ன் ஜான்சன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. ஆஸ்திரேலிய விளையாட்டு மைதானங்களில், அவர் இதுபோன்ற செயல்களை செய்ததாக அவரது நாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கால்பந்து போட்டியின் போது, திடீரென வெய்ன் ஜான்சன் மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது அவரை பிடித்து வெளியே இழுத்துவிட்டனர்’ என்றார். இந்தியா – ஆஸ்திரேலியா இறுதி போட்டியின் பரபரப்புக்கு மத்தியில், மைதானத்திற்குள் நுழைந்து போலீசாருக்கு ஷாக் கொடுத்த வெய்ன் ஜான்சன் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், இவ்விவகாரத்தில் ஐசிசி, பிசிசிஐ, குஜராத் போலீசார் உள்ளிட்டோர், பாதுகாப்பு குறைபாடுகளுடன் செயல்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்திய மைதானத்தில் நடந்த சம்பவங்கள்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான ேபார் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆங்காங்கே குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய நகரங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்த நாட்களில், பாலஸ்தீன ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான்தான், போட்டியின் நடுவே இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தை முதலில் கொண்டு வந்தார். இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் சதம் அடித்தார். அந்த சதத்தை காசா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இதற்குப் பிறகு தான், பாகிஸ்தான் அணியின் பல வீரர்கள் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

தற்போது அகமதாபாத் மைதானத்தில் இரண்டாவது சம்பவமாக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு இளைஞர் மைதானத்திற்குள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இறுதி போட்டியின் போது, ​பார்வையாளர் மேடையில் அமர்ந்திருந்த ஒருவர், ‘தீவிரவாதத்திற்கு எதிரான போரில், இஸ்ரேலுடன் இந்தியா நிற்கிறது’ என்ற பேனரை காட்டி அசைத்தார். முன்னதாக கடந்த அக்டோபர் 31ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அப்போது சிறுவர்கள் சிலர், பாலஸ்தீனத்தின் கொடியை அசைத்தனர். அவர்கள் ‘பாலஸ்தீனம் ஜிந்தாபாத்’ என்ற கோஷங்களையும் எழுப்பினர் என்பது குறிப்பி
டத்தக்கது.

10 ஆயிரம் டாலர் பரிசு அறிவிப்பு
அகமதாபாத் ஸ்டேடியத்திற்குள் நுழைந்த ஆஸ்திரேலிய குடிமகன் வெய்ன் ஜான்சன் மீது சந்த்கேடா போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தானி தீவிரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு வெளியிட்ட வீடியோ பதிவில், ‘ஸ்டேடியத்திற்குள் நுழைந்து கோலியை கட்டிப்பிடித்த ஆஸ்திரேலிய குடிமகன் வெய்ன் ஜான்சனுக்கு 10 ஆயிரம் டாலர்கள் பரிசு வழங்கப்படும்.

அவர் மைதானத்திற்குள் நுழைந்ததின் மூலம், காசா மற்றும் பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளார். நாங்கள் வெய்ன் ஜான்சனுக்கு ஆதரவு அளிக்கிறோம். காலிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உள்ளோம்’ என்று கூறியுள்ளான். கடந்த சில வாரங்களுக்கு, குர்பத்வந்த் சிங் பன்னு வெளியிட்ட வீடியோவில், ‘அகமதாபாத்தில் நடக்கும் இறுதி போட்டிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவோம்’ என்று மிரட்டல் விடுத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உலக கோப்பை இறுதிப்போட்டி இன்னிங்ஸின் 14வது ஓவரின் போது பாலஸ்தீன கொடியுடன் கோலியை கட்டிப்பிடித்த இளைஞர் யார்? appeared first on Dinakaran.

Tags : World Cup ,Ahmedabad ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை...