![]()
விருதுநகர்: ஒன்றிய நிதி அமைச்சர் பங்கேற்ற அரசு விழா அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெறாதது குறித்து சபாநாயகருக்கு எம்.பி.மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் பொது விழாவின்போது அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். விருதுநகரை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், மேற்படி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் எனது பெயர் விடுபட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள மேலும் இரண்டு எம்.பி.க்களின் (தனுஷ்குமார், நவாஸ்கனி) பெயர்களும் அழைப்பிதழில் இல்லை. இப்படி மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் புறக்கணிப்பது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தின் கொள்கைகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், அலுவலக குறிப்பேட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான உத்தியோகபூர்வ பரிவர்த்தனைகள் குறித்த ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களுக்கு எதிரானது.
அரசாங்க அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் மேற்படி அலுவலக குறிப்பாணை உள்ளது. அழைப்பிதழ் அட்டைகளில் எங்கள் பெயர்கள் விடுபட்டிருப்பது இந்த வழிகாட்டுதல்களுக்கு முரணானது. எனவே இந்த தீவிரமான விஷயத்தில் உங்கள் உடனடி கவனத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயகக் கொள்கைகளின் ஒருமைப்பாட்டைப் பேணவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற அரசு விழா அழைப்பிதழில் எம்பிக்கள் பெயர் புறக்கணிப்பு: மக்களவை சபாநாயகருக்கு விருதுநகர் எம்பி கடிதம் appeared first on Dinakaran.

