×

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: முக்கிய சாலைகள் வெறிச்சோடின, தெருவுக்கு, தெரு பெரிய டிவியில் கிரிக்கெட் ஒளிபரப்பு

சென்னை: உலகக்கோப்பை போட்டியின் இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தை பார்க்க சென்னைவாசிகள் நேற்று வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடின. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை எப்போதும் பரபரப்பாக காணப்படும். காலை 6 மணிக்கு ெதாடங்கி இரவு 10 மணி வரை அலுவலகம் செல்வோர், வேலைக்கு செல்வோர் என்று எப்போதும் சாலைகள் பரபரப்பாக காணப்படும். வாகன போக்குவரத்து என்பது அதிகமாக இருக்கும். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் வாகன போக்குவரத்து என்பது வழக்கத்தை விட குறைவாக இருக்கும்.

அதே நேரத்தில் கடற்கரை, பூங்காக்கள், பொழுது போக்கு இடங்கள், ஷாப்பிங் மால்கள் மக்கள் கூட்டம் என்பது அதிகமாக காணப்படும். மாலை நேரத்தில் கடற்கரை சாலைகள் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடுவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு நேர் எதிராக நேற்று சென்னை இருந்தது. அதற்கு காரணம் உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதியது தான். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை இறுதிப்போட்டி இழுத்தது. சென்னைவாசிகளையும் அதே போல் இறுதியாட்டம் ஈர்த்து கொண்டது. பிற்பகல் 2 மணிக்கு உலககோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியின் ஆட்டம் தொடங்கியது. முன்னர் டாஸ் போட்டத்தில் டிவி முன்னாடி உட்கார்ந்தவர்கள் தான் போட்டி முடியும் வரை யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.

அந்த அளவுக்கு கிரிக்கெட் போட்டியை ரசித்தனர். அதே போல இல்லத்தரசிகளும் காலையிலேயே துணி துவைப்பது, சமையல் போன்ற வீட்டு வேளைகளை முடித்து விட்டு அவர்களும் டிவி முன்னால் உட்கார்ந்தனர். இதனால், சென்னையில் உள்ள அனைத்து தெருக்களிலும் பிற்பகல் 1 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம் என்பதே இல்லாத நிலை தான் காணப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் நடமாட்டம் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. கிரிக்கெட் பார்ப்பதற்காக சென்னைவாசிகள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியதால் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் இல்லாத பூங்காக்கள், கடற்கரை பகுதிகள் பிற்பகலுக்கு மேல் வழக்கத்தை விட மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

விரல் விட்டும் எண்ணும் அளவுக்கே மக்கள் காட்சியளித்தனர். மக்கள் தலைகளாக திகைக்கும் தி.நகர் உள்ளிட்ட வர்த்தக பகுதிகளிலும் ஆட்கள் கூட்டம் என்பது வெகுவாக குறைந்து காணப்பட்டது. மக்கள் வீட்டிற்கு உள்ளேயே இருந்ததால் வாகன போக்குவரத்துமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ெமரினா சாலை உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சாலைகளும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று வர வழக்கத்தை விட குறைவான நேரங்களே தேவைப்பட்டது.

அது மட்டுமல்லாமல் கிரிக்கெட் போட்டியை ரசிக்கும் வகையில் தெருவுக்கு தெரு மிகப்பெரிய திரைகள் மற்றும் பெரிய டிவிக்கள் வைத்து கிரிக்கெட் ஒளிபரப்பப்பட்டது. அதனை அப்பகுதியில் உள்ள மக்கள் கண்டுகளித்தனர். இந்திய வீரர்கள் 4, 6 ரன்கள் அடிக்கும் போது அவர்கள் கைத்தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். மேலும் கிரிக்கெட் போட்டியை பார்த்தவர்களுக்கு அங்கேயே டீ, காபி வழங்கப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் உள்ள சாலைகள் பிற்பகலுக்கு மேல் மக்கள் நடமாட்டம் என்பது கட்டுக்கடாங்காமல் காணப்படும். ஆனால், நேற்று அந்த நிலையை கிரிக்கெட் போட்டி மாற்றியது. இது ஞாயிற்றுக்கிழமை தானா? என்று சொல்லும் அளவுக்கு சாலைகள் மக்கள் ஆரவாரமின்றி நிசப்தமாக காணப்பட்டது.

* மெரினா, பெசன்ட்நகரில் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு
சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் கிரிக்கெட்டை கண்டு ரசிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்து இருந்தது. அதன்படி எல்.இ.டி.திரை வழியாக பொதுமக்களுக்கு கிரிக்கெட் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்கள் கடற்கரையில் ரம்மியமான சூழலில் கிரிக்கெட் போட்டியை பார்த்தனர். கிரிக்கெட் போட்டியை ஒவ்வொருவரும் கைதட்டி குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். இவ்வாறு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக போட்டியை ரசித்தவர்கள் தெரிவித்தனர்.

The post உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: முக்கிய சாலைகள் வெறிச்சோடின, தெருவுக்கு, தெரு பெரிய டிவியில் கிரிக்கெட் ஒளிபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennaiites ,World Cup cricket final ,CHENNAI ,India-Australia ,World Cup ,World Cup cricket ,Dinakaran ,
× RELATED வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள்...