×

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி எதிரொலி பயணிகள் வரத்து குறைவால் 6 விமான சேவைகள் ரத்து: அதிகாரிகள் தகவல்

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து டிவியில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் விமான பயணங்களை தவிர்த்தனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் ஒரே நாளில் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரவுண்டில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடன் பெரும்பாலானோர் போட்டிய நேரில் காண அகமதாபாத் சென்றனர்.  மற்றவர்கள் நேற்று முக்கிய வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, போட்டியை தொலைக்காட்சிகளில் காணுவதில் ஆர்வம் கொண்டனர். இதனால் நேற்று விமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து நேற்று காலை 9:25 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10 மணிக்கு பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3:30 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்களும், காலை 8:05 மணிக்கு, பெங்களூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஆகிய 3 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை காண வேண்டி பெரும்பாலானோர் நேற்று பயணங்களை ரத்து செய்ததால், சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ஒரே நாளில் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி எதிரொலி பயணிகள் வரத்து குறைவால் 6 விமான சேவைகள் ரத்து: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket Final ,Chennai ,
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தீ...